பாடல் எண் :3737

"உம்மைப் போல நீறிட்டா ருளரோ? வுண்பீர் நீ"ரென்று
செம்மைக் கற்பிற் றிருவெண்காட் டம்மைதம்மைக்"கலந்திருத்தி
வெம்மையிறைச்சிசோறதனின் மீட்டும் படையு" மெனப்படைத்தார்;
தம்மை யூட்ட வேண்டியவ ருண்ணப் புகலுந் தடுத்தருளி,
78
(இ-ள்) உம்மைப்போல....என்று - (அதுகேட்ட வயிரவர்) உம்மைப் போலத் திருநீற்றினைச் சிறக்க இட்ட அடியவர்களும் உண்டோ? நீரே என்னுடனிருந்து உண்பீராக என்று கூறி; செம்மை....என - செம்மை பொருந்திய கற்பினை உடைய திருவெண்காட்டு அம்மையாரை நோக்கிப் பரிகலந் திருத்தி விரும்பத்தக்க இறைச்சியும் சோறும் ஆகிய இவற்றின் ஏனைப் பகுதியை இவர்க்கும் படைப்பீராக என்று இறைவர் கட்டளையிட; படைத்தார் - அவரும் அவ்வாறே படைத்தனர்; தம்மை....தடுத்தருளி - தம்மை உண்பிக்கவேண்டி அவர் விரைந்து உண்ணத் தொடங்குதலும் தடுத்தருளி,
(வி-ரை) உம்மைப்போல நீறிட்டார் உளரோ? - சிறுத்தொண்டர் திருநீற்றினைப் பேணும் சிறப்பினை இறைவர் திருவாக்கினாற் பாராட்டி எடுத்துக் காட்டியபடி; "பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க்கு அருள்செய்யும் பொருட்டாக" (தேவா) என்று ஆளுடைய பிள்ளையார் பாராட்டிய திறமும் இங்கு நினைவு கூர்தற்பாலது.
நீர் உண்பீர் - என்க. உடனிருந்து உண்பீர் என்றபடி.
செம்மை - செம்மைதரும் தன்மை; செம்மையாவது "திருநின்ற செம்மையே செம்மை" என்றபடி சிவத்தன்மையினில் விளங்கும் சிறப்பு.
அம்மை தம்மை....என - அம்மையாரை நோக்கி இறைவர் பணித்தருள.
படைத்தார் - அவரும் அவ்வாறே அனைத்தையும் திருந்தப் படைத்தார்; விரைவு பற்றி ஒரு சொல்லாற் சுருங்க உரைத்தது கவிநயம்.
தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ணப் புகலும் - இறைவர் உண்ணத் தொடங்கு முன்பே அவர் உண்ணப் புகுந்ததன் கருத்தினை ஆசிரியர் எடுத்துக் காட்டியவாறு. இறைவர் தாமும், புனைவாகவாயினும், சிறுத்தொண்டர்பால் குற்றமாக ஒன்றைச் சொல்லக் கேட்கப் பொறா நிலைமையில், ஆசிரியர், எச்சரிக்கையாக இக்கருத்தினைக் கூற முற்படுகின்ற தெய்வக் கவிநலம் கண்டு கொள்க; தாம் முன் உண்ணப்புக்க நிலையின் காரணத்தைச் சிறுத்தொண்டர்பின் உரைப்பதில்லை; ஆதலின் அது சொல்லப்படாமலும், தாம் காட்டாவிடில் உலகம் காணாமலும் போய்விடு மாதலின் எடுத்துக்காட்டிய படியுமாம்.
தம்மை ஊட்ட வேண்டி - புகலும் - உள்ளத்தி னுள்ளிருக்கும் கள்வர் இதனை உணர்ந்தாராயினும் இவ்வாறு மாறுகூறுவார் என்றும், ஆயினும், அது "தடுத்தருளி" என்றவாறு, பழியாகாது பின்வரும் அருளிப் பாட்டுக் கேதுவாவது என்றும் உணர்த்திய நயமும் கண்டுகொள்க.
புகலும் - தொடங்குதலும்; முன் உண்ணப்புகுதல் இறைவரை ஊட்டுதலில் இருந்த ஆர்வத்தின் விரைவு குறித்தது.