"ஆறு திங்கள் கழித்துண்போ முண்ணு மளவுந் தாழாது சோறு நாளு முண்பீர்முன் னுண்ப தென்?நம் முடன்றுய்ப்ப மாறின் மகவு பெற்றீரேன் மைந்தன் றன்னை யழையு"மென ஈறு முதலு மில்லாதார்க் "கிப்போ துதவா னவ" னென்றார்" | 79 | (இ-ள்) ஆறு....அழையுமென - ஆறுமாத காலம் இடைகழிய நாம் ஒருமுறை உண்போம்; நீர் ஒவ்வொரு நாளும் சோறு உண்பீர்; அப்படியிருந்தும் நாம் உண்ணுமுன் நீர் உண்ணப்புகுந்த தென்னை?; நம்முடனே இருந்து உண்பதற்கு ஒப்பற்ற மகனைப் பெற்றீரானால் அம்மகனை அழையும் என்று வயிரவர் கூற; ஈறும்....என்றாம் - அவ்வாறு கூறிய அந்தமுமாதியும் இல்லாத இறைவருக்கு அவன் இப்போது உதவமாட்டான் என்று (தொண்டனார்) விடை கூறினர். (வி-ரை) ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் - "மூவிருது கழித்தாற் பசு வீழ்த்திட உண்பது; உரிய நாளும் அதற்கு இன்று" (3707) என முன்கூறியது காண்க. இங்கு மீண்டும் அதனையே "ஆறு திங்கள் ஒழிந்து" என்று கூறியது அமுது கொள்ளும் இடைக்காலத்தின் நீட்டிப்பை வற்புறுத்துதற்கு; முன்னர் மூவிருது என்றதும், ஈண்டு அதனையே ஆறுதிங்கள் என்றதும் இக்கருத்து; "சோறு நாளும் உண்பீர் என்று இடித்து இழித்துக் கூறுதல் போலக் கூறுதலும் இக்கருத்துக் காட்டும் கவிநயம். திங்கள் - மாதம்; திங்கள் - சந்திரனைக் குறிக்கும்; சந்திரன் வளர்வதும் மறைவதும் கூடிய முப்பதுநாட்கூறு எல்லை கண்ட கால அளவுபற்றி முதலில் காலக்கணக்கு இட்டு அறியப்பட்டமையின் திங்கள் என்பது ஒருமாத கால எல்லையைக் குறிக்க வழங்குவதாயிற்று; மாதம் என்பதும் அவ்வாறேயாம்; மதியினைப் பற்றி அளவுகொண்ட காலக்கூறு மாதம் என்பர்; ஒழிந்து - கழிய; ஒழிய என்னும் செயவென் வாய்பாட்டு வினையெச்சம் செய்து என்ற எச்சமாய் வந்தது. நாளும் - ஒவ்வோர் நாளும்; உம்மை முற்றும்மை. முன் - ஆறுமாதம் உண்ணாது பசித்திருக்கும் நாம் உண்பதற்கு முன் என்பது குறிப்பு. நம்முடன் துய்ப்ப - நம்முடன் கூட இருந்து அமுதுண்ண; துய்த்தல் - உண்ணுதல், உணவுகொள்ளுதல், மக்களுடன் உண்ணுதல் உலகியல் இன்பமாகிய மரபு பற்றியது. மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன் றன்னை அழையும் - மகவு - (பின் மைந்தன் என்பதனால்) ஈண்டு இடநோக்கி ஆண் மகவு குறித்தது. பெற்றீரேல் - பெற்றுள்ளீராகில். ஈறும் முதலும் இல்லாதார் - என்றுமுள்ளவர். "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி" (திருவா); அவன் இப்போது உதவான் - என்க; உண்மைக்கு மாறுபடாமற் கூறிய நயமும் திறமும் காண்க. "விளைந்த தன்மை, யாதுமொன் றுரையா ரிப்போ திங்கவ னுதவா னென்றார்" (1814) என்ற அப்பூதியார் புராணமும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. |
|
|