"நாமிங் குண்ப தவன்வந்தா னாடி யழையு" மெனநம்பர் தாமங் கருளிச் செயத்தரியார் "தலைவ ரமுது செய்தருள யாமிங் கென்செய் தாலாகு?" மென்பார், விரைவுற்றெழுந்தருளாற் பூமென் குழலார் தம்மோடும் புறம்போ யழைக்கப் புகும்பொழுது, | 80 | (இ-ள்) நாம் இங்கு....அருளிச் செய - அவன் வந்தால் நாம் இங்கு உண்பதியலும்; ஆதலால் அவன் வருகையினை நாடி அழையுங்கள் என்று இறைவர் அப்போது அருளிச் செய்யவே; தரியார் - தரிக்கலாற்றாதவராகி; தலைவர்....என்பார் - தலைவராகிய அடியார் திருஅமுது செய்தருள இங்கு நாம் என்ன செய்தால் அது முடியும்? என்று ஏங்குவாராகி; விரைவுற்று....புகும் பொழுது - விரைவாக எழுந்து இறைவரது அருள் ஆணைவழியே நின்று பூ முடித்த மெல்லிய மலர்களைச் சூடிய கூந்தலினை உடைய அம்மையாருடனே மனையின் புறத்தே போய் மகனை வா என்று அழைக்கத் தொடங்கும்போது, (வி-ரை) அவன் வந்தால் நாம் இங்கு உண்பது என்க; அவன் வந்த பின்பே நாம் உண்ணக்கடவோம்; இதனால் அவன் வருதல் உறுதி என்று உணர்த்தியது குறிப்பு; நாடி - இக்குறிப்பினை நாடி என்ற குறிப்பும் காண்க. நாடி -என்பதற்குத் தேடி என்று இயைபின்றி உரைத்தனர் முன் உரைகாரர்கள். அது பொருந்தாமை, நாயனார் வேறெங்கும் செல்லாது அகத்தின் புறம் போய் அழைத்த செயலானும் காண்க. தாமே அரிந்து அமைத்தாராதலின் தேடுதல் கருத்தன்றாகி, அழைத்தலே கருத்தும் ஆணையுமா மென்க. தேடல் - உடலின் வினை; நாடல் - உளம் கருவியாக அறிவா லாராய்தல்; "நாடி நான்முகன் நாரணனென்றிவர், தேடியுந்திரிந் துங்காண வல்லரோ?" (தேவா - அரசு) என்புழியும் நாடுதல் இப்பொருட்டாதல் அறிக; ஈண்டு நாடலும் தேடலும் வெவ்வேறு பொருட்கண் வந்தமையும் காண்க. நம்பர் - நம்பி அடைந்தவர்க்கு அருள்பவர் என்ற குறிப்பு. அவர் சொல்வழியே நம்பி அமைந்து நின்று அழைத்தனர் என்பதாம். இங்கு அன்பு வெறியாற் களித்து, அதனில் மயங்கி நின்று தம்மையும் செயலையும் அறியாது செய்தனர் நாயனாரும் மனைவியாரும் என்று முன் (3722) பாட்டிற் கண்டவாறே தொடர்ந்து ஆராய்ச்சி செய்வாரு முண்டு; அவ்வாராய்ச்சிகள் பிழையாதல் முன்னரே ஆண்டு விளக்கப்பட்டது; "தம் கையால் அரிந்த புதல்வரை மீட்டும் அழைக்க எவரே புறப்படுவர்....அவர் சொல்வழியே இருவரும் உழன்றது உறுகரியா மென்க" என்பர் இப்பிழையாராய்ச்சியாளர். முன்னர் அடியார்கள் என்று காணக்கிடையார் என்று தாம் அறிந்திருந்தும் வயிரவர்" பாங்கு நின்றார் தமைக் கொணர்வீர்" என்ற சொல்வழி நின்று புறத்துப்போய்த் தேடிக்காணாது மீண்டனர் என்பதும் காண்க. (3736); அவ்வாறு அடியாரைக் காணாதபோது அவர்க்கு ஈடாக நீறிடும் தன்மைபற்றித் தம்மையே அடியவராக ஏற்றுக்கொள்ள வேண்டினர். அதற்கும் வயிரவர் இசையவும் பெற்றனர். அவ்வாறே ஈண்டும், வயிரவர் சொல்வழி நின்று நடப்பது முதற்கடமை; அது இயல்வதாமோ? சரியோ? பிழையோ? என்றாராய்தல் ஈண்டுச் சிவநெறி யொழுக்கமுறையும் மரபுமன்று. "ஆசையொடு மரனடியா ரடியாரை யடைந்திட் டவர்கரும முன்கருமமாகச் செய்து கூசிமொழிந் தருள்ஞானக் குறியி னின்று கும்பிட்டுத் தட்ட மிட்டுக் கூத்தாடித் திரியே" (சித்தி-12-2)என்பது அணைந்தோர் தன்மை. (சீவன் முத்தரியல்பு) இங்கு நாயனாரும் மனைவியாரு மிவ்வியல்பினர். இஃது அன்பு வெறியாலாவது என்று கூறுதல் முழுதும் பிழைபாடு. ஈண்டு அடியார் "நாடி அழையும்" என்ற ஆணை பெற்றனர். அதன்படி அவ்வாறே அழைத்தார்; அவன் இங்கு உதவான் என்று தாமே முடித்துக்கூறிய மகன் வருவானோ? என்ற எண்ணம் நாயனார் மனத்துள் எழுதலுக்கு இடமேயில்லை; அவர் குறிப்பன் வழிநிற்போம். பின்னர் நிகழ்வது எவ்வாறாயினும் திருவருள் வழி நிகழட்டும் என்பதே அவர் மனநிலை. ஆணைவழி நின்ற பின்னை முன் வேறு அடியார் காணாத போது நிகழ்ந்த முறையே இதற்கும் ஏதேனும் ஒருவழி கிடைத்து அடியார் திருவமுதுண்ணும் பேறு பெறுவோம் என்பதொன்றே நாயனாரும் மனைவியாரும் கருதிச் செயல்கள் செய்தனர் என்பது ஈண்டுத் "தலைவரமுது செய்தருள யாம் இங்கு என் செய்தாலாகும் என்பார்"- என்றதனால் இஃது இனிது விளங்குதல் காண்க. தரியார் - புறம்போய் அழைக்க - தரியார் - என்றதனாலும், "தலைவர்பணி தலைநிற் பாராய்" "சிவனாரடியார்.... அழைக்கின்றார்" என்றவற்றாலும் இக்கருத்து நன்கு விளங்குதல் காண்க. அருளால் - இறைவரது அருள் ஆணைவழியே நின்றுபோய் அழைத்தனர் என்பதனாலும் நாயனாரது கருத்து விளங்கும்; அவ்வாறு அழைத்தலே மகன் வருதற்கு வழியாய் அருள் வெளிப்பட்டு விளையும் தன்மையாம் என்பதும் குறிப்பு. அழைக்கப் புகும்பொழுது - புகும் அப்பொழுதே அழைத்தார் என வரும்பாட்டுடன் முடிக்க; தரியாமையும் ஊட்டும் ஆர்வமும் தமது செயலில்லாமையும் பற்றி எழுந்த விரைவுக் குறிப்பு. |
|
|