வையநிகழுஞ் சிறுத்தொண்டர் "மைந்தா வருவா! யெனவழைத்தார் தைய லாருந் தலைவர்பணி தலைநிற் பாராய்த் தாமழைப்பார் "செய்ய மணியே! சீராளா! வாராய்! சிவனா ரடியார்யாம் உய்யும் வகையா லுடனுண்ண வழைக்கின் றா"ரென் றோலமிட, | 81 | (இ-ள்) வையம்....அழைத்தார் - உலகிலே புகழ் என்றும் நிலவிய சிறுத்தொண்டர் மைந்தா! வருவாய்! என்று கூவி அழைத்தார்; தலைவர் பணி தலைநிற்பாராய் - தலைவரது ஆணையின்படி அதனைத் தலையாற் றாங்கியே ஒழுகுவாராகி; தையலாரும் தாம் அழைப்பார் - அம்மையார் தாமும் அழைப்பாராய்; செய்ய....என்று ஓலமிட - செம்மையுடைய மணியே! சீராளா! சிவனாரடியார் நாம் உய்யும்படி உடன் உண்பதற்கு அழைக்கின்றார், வாராய்! என்று அழைத்து ஓலமிடவே, (வி-ரை) வைய நிகழ்தல் - உலகில் புகழ் என்றும் விளங்குதல். மைந்தா வருவாய் - "மைந்தன் றன்னை அழையும்" என்று அடியவர் ஆணையிட்டமையால் மைந்தா என்றழைத்தார். நாயனார் புத்திரவாஞ்சையின் வாசனையினால் இவ்வாறு அழைத்தார் என்றும், அம்மையார் அழைத்த திறத்தில் அவ்வாசனையும் இல்லை என்றும் இங்கும் பிழைபடும் தற்போதமுனைந்த ஆராய்ச்சியிற்றலைப்பட்டு அபசாரப் படுவாரு முண்டு; வயிரவர் உண்ணும் நரப்பசுவைப் பற்றி உரைத்த அப்பொழுதே மகனாரை அவ்வடியவரது உணவுப்பொருள் என்று கொண்டு மகனாம் பற்று அறவே ஒழித்தனர் என்பது இதுவரை நிகழ்ச்சிகளால் நன்கு உணரப்படும். "கறியமுதா மென்னு மதனால் - உச்சி மோவார்...." (3720) என்பதும் காண்க; மகனார் மீள ஓடிவரக் காணும் நிலையில், இத்தன்மை மாறி, அம்மையார் அவரை எடுத்துத் தழுவுதலும் நாயனார் மகிழ்தலும் அடியவர் உமது மகனை அழையும் என்று ஆணை தந்தருளிய வாற்றால் அவரால் மீளத் தரப்பட்ட தமது மைந்தனாகக் காணும் வேறுபாடு பற்றியதாகும் என்பதும் ஓர்க. தையலாரும் - உம்மை கணவனார் அழைத்ததே யன்றித் தையலாரும் என இறந்தது தழுவிய எச்சவுன்மை. தலைவர் பணி தலைநிற்பாராய்த் தாம் அழைப்ப - தலைவர் பணித்தபடி செய்யும் கடப்பாடு பற்றி அழைத்ததே யன்றிப் பிள்ளை வருவான் என்ற எண்ணத்தாலன்று என்பது நன்கு விளங்குதல் காண்க; தலைநிற்றல் - வழியே அமைந்து ஒழுகுதல். உறுதியாய் நிற்றல்; சிவனார்....அழைக்கின்றார் - நான் அழைக்கவில்லை; அடியார் அழைக்கின்றார். அவருக்காக வருவாய் என்பது குறிப்பு. யாம் உய்யும் வகையால் உடனுண்ண - யாம் உய்யும் வகை என்று சீராள தேவரையும் உள்ளிட்ட உளப்பாட்டுத் தன்மைப்பன்மை உண்மையின் குறிப்பு; "எங் குடிமுழு துய்யக் கொள்வீர்" (1812) என்று இவ்வாறே அப்பூதியார் திருவாக்கில் வந்தமையும் ஆண்டுரைத்தவையும் காண்க. சிவனடியார் - அடியார் வேடத்தில் வந்த சிவனார் என்பது குறிப்பு. உடனுண்ண - உடனே கூடச் சிவலோகச் சார்வாகிய இன்பத்தை நாம் எல்லாரும் கூடி அனுபவிக்கும் பொருட்டு என்ற சரிதவிளைவுக் குறிப்பும் காண்க. அழைப்பார் - ஓலமிட - அழைத்தல் மட்டுமன்றி மணியே - சீராளா - அழைக்கின்றார் - வாராய் என்று உரத்துப் பலவாறும் ஓலமிட்டனர் என்பது அவரை ஊட்டும் ஆர்வத்தின் மிகுதி குறித்தது. |
|
|