பாடல் எண் :3741

பரம ரருளாற் பள்ளியினின் றோடி வருவான் போல்வந்த
தரமில் வனப்பிற் தனிப்புதல்வன் றன்னை யெடுத்துத் தழுவித்தங்
கரமுன் னணைத்துக் கணவனார் கையிற் கொடுப்பக் களிகூர்ந்தார்
"புரமூன்றெரித்தார் திருத்தொண்ட ருண்ணப்பெற்றோ"மெனும் பொலிவால்.
82
(இ-ள்) பரமர்....புதல்வன்தன்னை - அப்போது இறைவரருளினாலே அழைக்கும் ஒலிகேட்டுப் பள்ளிக்கூடத்தினின்றும் ஓடிவருபவர்போல எதிரே ஓடிவந்த ஒப்பற்ற அழகுடன் விளங்கிய ஒப்பற்ற மகனாரை; எடுத்து....கொடுப்ப - (அம்மையார்) எடுத்துத் தழுவிக்கொண்டு தமது கையால் முன்பு அணைத்துக் கணவனாரது கையிலே கொடுப்ப; புரமூன்று....பொலிவால் - திரிபுரங்களையும் எரித்த இறைவர் திருத்தொண்டர் அமுது உண்ணும் பேறுபெற்றோம் என்ற மகிழ்ச்சியாலாகிய துணிபினாலே; களிகூர்ந்தார் - மிகவும் மகிழ் சிறந்தார்.
(வி-ரை) பரமர் அருளால் - பரமர் - அப்பாற்பட்டவர் - கடந்தவர்; விளையும் இச்செயலின் காரணமாகும் முழுமுதற் றன்மைக் குறிப்பு.
தரமில் வனப்பிற் றனிப்புதல்வன் - எஞ்சமில்லாக் கோலத்துடன் மறைந்து இறைவர் பாலாயின அவர், இறைவரால் மீளத் தரப்பட்ட வனப்புடன் வருகின்றாராதலின் அவ்வனப்புத் தரங்கடந்ததாய்த் தெய்வத்தன்மையுடன் விளங்கிற்று என்பது; "அதிமதுரக் கனி" (1741) என்றவிடத் துரைத்தவை பார்க்க.
எடுத்தல் - தழுவுதல் - அணைத்தல் - கொடுத்தல் - என்ற இவை இப்போது இறைவராற் றரப்பட்ட தமது மைந்தனாராந் தன்மையும், அவருடன் உண்ணவரும் தமது மைந்தராந் தன்மையும் பற்றி நிகழ்ந்தன.
பொலிவால் களிகூர்ந்தார் - மகனை மீளப் பெற்றதன் பொருட்டு அன்றி, அவன் வருகையினால் அடியார் அமுதுசெய்யும் பேறு பெற்றோ மென்ற காரணத்தால் மகிழ்ந்தனர் என்று சிறுத்தொண்ட நாயனாரது பெரிய மனநிலை பற்றி அறிவுறுத்தி உலகினரை எச்சரித்து ஆசிரியர் காட்டும் திறம். "சிறிதிடை யூறு செய்தானிவன் என்று சிந்தை நொந்தார்" (1819) என்ற அப்பூதியார் - மனைவியார் மன நிலைகளை ஈண்டு ஒப்புநோக்குக.
பொலிவு - விளக்கம்; மன மலர்வு; அகநிகழ்ச்சி.