வந்த மகனைக் கடிதிற்கொண் டமுது செய்விப் பான்வந்தார்; முந்த வேயப் பயிரவரா முதல்வ ரங்கண் மறைந்தருளச் சிந்தை கலங்கிக் காணாது திகைத்தார்; வீழ்ந்தார்; தெருமந்தார்; வெந்த விறைச்சிக் கறியமுதுங் கலத்திற் காணார், வெருவுற்றார். | 83 | (இ-ள்) வந்த....வந்தார் - முன் கூறியவாறு வந்த மகனாரைக் கொண்டு இறைவரைத் திருவமுது செய்வித்தற் பொருட்டு விரைவாக வந்தார்; முந்தவே.....மறைந்தருள - அதற்கு முன்பே அந்த வயிரவராய் வந்த முதல்வனார் அங்குநின்றும் மறைந்தருளினாராக; சிந்தை....தெருமந்தார் - அவரைக் காணாமல் மனங்கலங்கித் திகைப்படைந்தார்; விழுந்தார்; மனஞ் சுழலப்பெற்றார்; வெந்த....வெருவுற்றார் - வெந்த இறைச்சிக் கறியமுதினையும் பரிகலத்திற் காணாதவராய் திடுக்கிட்டார். (வி-ரை) வந்த - முன்பாட்டிற் கூறியவாறு ஓடிவந்த; செய்விப்பான் - செய்விப்பதன் பொருட்டு; வந்தார் - சிறுத்தொண்டர் வந்தார்; முந்தவே - அவர் வருமுன்னமே; அங்கண் - அவ்விடத்தினின்றும்; திகைத்தார் - வீழ்ந்தார் - தெருமந்தார் - தொடர்ந்து தனித்தனி நிகழ்ந்த துன்பச் செயல்களைத் தனி வினையெச்சங்களாற் கூறாது வினைமுற்றுக்களாற் கூறியது கவிநயம்; தனித்தனி அவற்றை மனங்கொளற் பொருட்டாம். வெந்த....வெருவுற்றார் - வெருவுறுதல் - சடுதியில் திடுக்கிட்டு நேரிடும் அச்சம். திகைத்தார் முதலிய மூன்றும் வயிரவரைக் காணாமையால் நிகழ்ந்தவை; இத்துணையும் அவர் அமுது செய்யும் பொருட்டே செய்யப்பட்டனவாதலின் அவரைக் காணாமை பெருமயக்கமும் துன்பமும் ஆகி விளைந்தது; மேற்பாட்டுப் பார்க்க; இறைச்சி அமுது காணாது வெருவுற்ற நிலையினைப் பிரித்துணர வேறு கூறினார். கலத்தில் - படைக்கப்பட்ட பரிகலத்தில்; தெருமருதல் - மனஞ் சுழலுதல்; திகைத்தல் - போயின வகை காணமாட்டாது மயங்குதல். பயிரவராம் முதல்வர் - பயிரவச் சங்கம வேடந்தாங்கி வந்த இறைவனார். |
|
|