"செய்ய மேனிக் கருங்குஞ்சிச் செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம் உய்ய வமுது செய்யாதே யொளித்த தெங்கே?" யெனத்தேடி மையல் கொண்டு புறத்தணைய மறைந்த வவர்தா மலைபயந்த தைய லோடுஞ் சரவணத்துத் தனய ரோடுந் தாமணைவார், | 84 | (இ-ள்) செய்ய....தேடி - சிவந்த திருமேனியும் கரியகுஞ்சியும் செழிய போர்வையும் தாங்கிய வயிரவர் யாம் உய்யும்படி திருவமுது செய்யாமல் எங்கே ஒளித்தனர்? என்று தேடுவாராகி; மையல் கொண்டு புறத்தணைய - மயங்கி வெளியே வர; மறைந்த....அணைவார் - மறைந்தருளிய அவ்வயிரவர் தாமே, மலை மகளாராகிய உமையம்மையாரோடும் சரவணத்தில் வளர்ந்த திருமகனாராகிய முருகப் பெருமானோடும் அணைவாராகி, (வி-ரை) செய்ய....பயிரவர் - அவரது திருவுருவத்தை கண்குளிர நன்கு கண்டு வழிபட்டாராதலின் அதனை ஈண்டுத் தமது மனத்துள் கண்டு கொள்கின்றார். 3690 பார்க்க. இக்கருத்துப் பற்றியே, "வெஞ்சினப் பரியழன் மீது போர்த்திடும், அஞ்சனப் புகையென வால மாமெனச், செஞ்சுடர்ப் படிவமேற் செறித்த மாமணிக், கஞ்சுகக் கடவுள்பொற் கழல்கள் போற்றுவாம்" என்று கந்த புராணமுடையார் துதித்தலும் ஈண்டு ஒப்பநோக்கத் தக்கது. செம்மை - கருமை முரண்டொடை. யாமுய்ய அமுது செய்யாதே - அடியார்க்கு அமுதூட்டுவோர் அவரது பசிதீர உண்கின்றார் என்பதன்றித் தாம் உய்ய அவர் உண்கின்றார் என்ற எண்ணம் வரப் பெறுதல் வேண்டு மென்பது. எங்கே ஒளித்தது எனத்தேடி....அணைய - அவர்மனையின் புறத்தே சென்று ஒளித்தனர் எனக்கருதித் தேடும் பொருட்டு வெளியில் அணைந்தனர். அவர்தாம் - அவர்தாமே; தேற்றேகாரம் தொக்கது. மலைபயந்த தையல் - உமையம்மையார். சரவணத்துத் தனயர் - முருகப்பெருமான். இவ்வாறு உமையம்மையாரும் முருகப்பெருமானும் தாமுமாகக் கூடிச் சோமாஸ்கந்த மூர்த்தமாக வெளிப்பட்டு இறைவர் அருள் புரிந்தது பெரிய சிறுத்தொண்டருக்கு அருள வந்த இவ்வோரிடத்தேதான் என்பது ஈண்டுப் பெருஞ் சிறப்பாகக் கருதத்தக்கது; அம்மையும் தாமுமாக விடையேறிவந் தருள்வதே பெரும்பான்மை எனைத் தொண்டரிடங்களாம்; தொண்டர்க் கருளத் தாமும், நங்கைக்கும் தாதியார்க்கும் அருள அம்மையாரும், சீராளதேவருக் கருள வேல்மைந்தனாருமாக எழுந்தருளினர் என்பது, பின்னர் (3746), இம்முறையே நிரனிறையாக வைத்துக் கூறிக் காட்டியருளுதலாற் கருதிக்கொள்ளத் தக்கது. சரவணம் - நாணற்காடு; நாணற்காட்டினிடையே உள்ள பொய்கைக்காகி வந்தது; சரம் - நாணல்; வனம் என்பது வணம் என வந்தது உத்தராயணம், ராமாயணம் என்புழிப்போல; சரவணத்துக் தனயர் - சரவணப் பொய்கையுள்வளர்ந்த குமாரக் கடவுள் என்க. "நெடும்பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனை" (முருகு). தாம் - தலைவர் தாமும் கூடி என்று, மேல் பாட்டில் தலைவர் என்பதுடன் கூட்டி முடிக்க. அணைவார் - அணைவாராகி; முற்றெச்சம். அணைவார் - எழுந்தருளி என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
|
|