தனிவெள் விடைமே னெடுவிசும்பிற் றலைவர் பூதகண நாதர் முனிவ ரமரர் விஞ்சையர்கண் முதலா னோர்கள் போற்றிசைப்ப இனிய கறியும் திருவமுது மமைத்தார் காண வெழுந்தருளிப் பனிவெண் டிங்கண் முடிதுளங்கப் பரந்த கருணை நோக்களித்தார். | 85 | (இ-ள்) தலைவர் - இறைவர், பூதகண நாதர்.....போற்றிசைப்ப - சிவபூத கணத்தலைவர்களும் முனிவர்களும் தேவர்களும் விஞ்சையர்களும் முதலாக உள்ளவர்கள் துதி செய்ய; இனிய....காண - இனிய கறியினையும் திருவமுதினையும் அமைத்த அவர்கள் காணும்படி; நெடுவிசும்பில் - நீண்ட ஆகாய வெளியிலே; தனி வெள் விடைமேல் -ஒப்பற்ற வெண்மையான இடபத்தின் மேலே; எழுந்தருளி.....நோக்களித்தார் - வெளிப்பட்டு எழுந்தருளிக் குளிர்ந்த வெள்ளியசந்திரனை அணிந்த திருமுடி அசையப் பரந்த அருணோக்கத்தினை அளித்தருளினர். (வி-ரை) தலைவர் - பூதகண நாதர்....போற்றிசைப்ப - காண - விசும்பில் - விடைமேல் எழுந்தருளி - அளித்தார் என்று மாற்றிக் கூட்டி உரைத்துக் கொள்க. போற்றிசைப்பவும் - காணவும் என்க. நெடுவிசும்பு - ஞான வொளியுடைய ஆகாயம் என்பார் நெடு என்றார். போற்றிசைப்ப - அடியார்க்கெளிவந்து இறைவர் அருளும் திறத்தினைப் போற்ற. அமைத்தார் - நாயனார் - மனைவியார் - தாதியார். வினையாலணையும் பெயர். முடிதுளங்க - துளக்கி என்பது துளங்க என வந்தது. முடிதுளக்குதல் - திருத்தொண்டினை ஏற்றருளுதற் குறிப்பு. மகிழ்ச்சிக் குறிப்புமாம். பரந்த நோக்கு - நிரம்பிப் பரவிய ஊன்றிய பார்வை. கருணைநோக்கு - அருட்பார்வை; இதுவரை "மடவரலை முகநோக்கி" (3697) - "தொண்டர் தமை நோக்கி" (3703) என்று வந்தனவெல்லாம் அருள்களேயாயினும், அவை திரோதானமாகிய அருள்நோக்கம்; இங்குச் செய்தது சிவாநந்த வாழ்வுதரும் அருள் நோக்கம் என்பார் பரந்த கருணை நோக்கு என்றார். அளித்தார் - அளியுடன் கொடுத்தற் குறிப்பு. |
|
|