அன்பின் வென்ற தொண்டரவர்க் கமைந்த மனைவி யார்மைந்தர் முன்பு தோன்றும் பெருவாழ்வை முழுதுங் கண்டு பரவசமாய் என்பு மனமுங் கரைந்துருக விழுந்தா; றெழுந்தா; ரேத்தினார்; பின்பு பரமர் தகுதியினாற் பெரியோரவருக் கருள்புரிவார், | 86 | (இ-ள்) அன்பின்....மைந்தர் - அன்பின் உறைப்பினாலே பாச உலகியலை வென்ற தொண்டரும், அவருக்கேற்ப அவ்வாறே அமைந்த மனைவியாரும், (அவ்வாறே அமைந்த) மைந்தனாரும்; முன்பு....பரவசமாய் - தம்முன்பு வெளிப்பட்டுத் தோன்றியருளிய பெருவாழ்வாகிய சிவபெருமானது காட்சியை முற்றும் கண்டு தம்வசமிழந்து அக்காட்சியின் வயமாகவே நின்று; என்பும்....ஏத்தினார் - எலும்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார்கள்; எழுந்தார்கள்; துதித்தார்கள்; பின்பு....அருள்புரிவார் - அதன்பின்பு இறைவர் அவர்களுக்கேற்றபடி உள்ள தகுதியினாலே பெரியோர்களாகிய அவர்களுக்கு அருள்புரிவாராகி, (வி-ரை) அன்பின் வென்ற தொண்டர் - அன்பின் - அன்பின் உறைப்பினாலே; இன் - ஐந்தனுருபு; ஏதுப்பொருட்டு. வென்ற - வெல்லுதல் - கடந்த ஞானிகளாலும் கடத்தற்கரிய மக்கட் பாசத்தினைக் கடந்து பாச வெற்றி கொள்ளுதல் - பாசத்தினை அறுத்தல். "உலகை வென்ற" என்றது காண்க. மக்கட் பாசத்தைப் புத்திர ஏடனை என்பர். அவர்க்கு அமைந்த மனைவியார் - அவர் தகுதிக்கேற்றவாறே ஒப்ப அமைந்த என்பது; "தாதை அரியத் தாய் பிடிக்க" (3710) என்று இருவரையும் ஒப்ப வைத்தப் பணித்ததனுக்கேற்பப், பணிபுரிய அமைந்த என்பது. அமைந்த என்பதனை மைந்தர் என்பதனுடனும் கூட்டுக. அமைத்த என்பது பாடமாயின் அமுதமைத்த என்க. பெருவாழ்வு - பெருவாழ்வு தரும் இறைவரது காட்சியினை வாழ்வென்றார். முழுதும் கண்டு - முன்னரும் இவ்விறைவரே முன்பு தோன்றக் காட்சியளிக்கத் தாமே கண்டார். அங்கு அவரியல் முற்றும் கண்டாரில்லை. ஆனால் இப்போது காண எழுந்தருளிக் கருணை நோக்களிக்க முழுதும் கண்டார் என்பதாம். "காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" "காட்டுவித்தா லாரொருவர் காணா தாரே" (தேவா). என்பும் கரைந்துருகுதல் - உடலுக்கு ஆதரவாயுள்ள வலிய எலும்பும் உள்ளுருகிக் கரைதல். என்பும் மனமும் கரைந்துருக - என்றதனால் அந்தக்கரண புறக்கரணங்கள் எல்லாம் கரைய என்பதாம். "என்பூ டுருகக் குனிக்கும் பிரான்." விழுந்தார் - எழுந்தார் - ஏத்தினார் - முன்னர்க் (3742) காணாமையால் நிகழ்ந்தவற்றுக்கெல்லாம் வேறாக, ஈண்டுக் கண்டமையால் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறிய நயமும் திறமும் கண்டுகொள்க. பின்பு - அவ்வாறு அவர்கள் காட்சி கண்டு துதித்து இவ்வுலக இயலின் நிகழ்ச்சிகள் முடிந்து நிறைவாயின பின்பு என்பது குறிப்பு. தகுதியினால் - திருத்தொண்டின் தகுதிப்பாட்டினாலே அது காரணமாக. பெரியோர் அவருக்கு - பெரியோர்களாகிய அந்நால்வருக்கும். அருள் புரிவார் - முற்றெச்சம். மேல் ஏகினார் என்றதனுடன் வினைமுடிபு கொள்க. |
|
|