கொன்றை வேணி யார்தாமும் பாகங் கொண்ட குலக்கொடியும் வென்றி நெடுவேன் மைந்தருந்தம் விரைப்பூங் கமலச் சேவடிக்கீழ் நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார் என்றும் பிரியா தேயிறைஞ்சி யிருக்க வுடன்கொண் டேகினார். | 87 | (இ-ள்) கொன்றை.....மைந்தரும் - கொன்றை மலரைச் சூடிய சடையினை உடைய சிவபெருமானும், அவரது ஒரு பாகத்தை யிடமாகக் கொண்ட குலக்கொடியாராகிய உமையம்மையாரும், வெற்றி பொருந்திய நீண்ட வேலேந்திய மைந்தராகிய முருகப் பெருமானும்; தம்....நின்ற - தமது மணமுடைய தாமரைப் பூப் போன்ற சேவடிகளின் கீழ் வீழ்ந்து எழுந்து துதித்து நின்ற; தொண்டர்....தாதியார் - சிறுத்தொண்டரையும் திருவெண்காட்டு நங்கையாரையும் நீடும் மகனாராகிய சீராள தேவரையும் சந்தனத்தாதியாரையும் ; என்றும்....ஏகினார் - நித்தியமாய் என்றைக்கும் தம்மைப் பிரியாதே வணங்கி யிருக்கும்படி தமது சிவலோகத்துக்குத் தம்முடனே கொண்டு சென்றருளினார்கள். (வி-ரை) வேணியார் - கொடி - மைந்தர் - என்ற மூவரும் தொண்டர் - மனைவியார் - மகனார்; தாதியார் என்ற நால்வருக்கும் முறையே அருள் புரிந்தனர் என்று கொள்ள வைத்தது கண்டுகொள்க. வேல் மைந்தர் அருள் மகனார் தாதியார் இருவருக்குமாகக் கொள்ளுதல் குறிப்பு. என்னை? தாதியார் மகனாரை வளர்த்த - பண்பு பற்றி அவருடன் கூட்டி யுரைத்தவாறாம். நீடுமகனார் - நீடு - சீராள தேவரது சிறப்புக் குறித்த அடைமொழி; "சீராளை தேவர்" (3676) என்று தொடங்கியதற் கேற்ப முடித்துக் காட்டிறயவாறு; ஆண்டுரைத்தவை பார்க்க. மகனார் - தாதியார் - தாதியாரும் ஐவகைத் தாயர்களும் ஒருவராய், மகனாரை வளர்த்தெடுத்தமையாலும், அடியார்க் கடியாராய்ப் பணிசெய்தமையாலும் தாயர்க்குப் போலவே தாதியர்க்கும் ஒத்த பயன் தரப் பெற்றார் என்பதும் முன் தகுதியினால் (3743) என்ற குறிப்பு. என்றும் பிரியாதே - இருக்க - மீளாநெறி; உடன்கொண்டு - ஏத்தி நின்ற அந்நிலையே; இருக்க - இருக்கும்படி. இறைஞ்சி - முத்தியிலும் ஆன்மாவின்அடிமைப் பண்பு. |
|
|