ஆறு முடிமே லணிந்தவருக் கடியா ரென்று கறியமுதா ஊறி லாத தனிப்புதல்வன் றன்னை யரிந்தங் கமுதூட்டப் பேறு பெற்றார் சேவடிக டலைமேற் கொண்டு பிறவுயிர்கள் வேறு கழறிற் றறிவார்தம் பெருமை தொழுது விளம்புவாம். | 88 | (இ-ள்) ஆறு....என்று - கங்கை யாற்றினைச் சடையிற் சூடிய இறைவருக்கு அடியவர் என்று; கறி அமுதா....பெற்றார் - கறியமுதாகத் தமது மறுவில்லாத தனி மாமகனாரை அறிந்து அங்கு அமுதூட்ட வரும் அப்பெரும் பேற்றினைப் பெற்றாராகிய சிறுத்தொண்ட நாயனாரது; சேவடிகள் தலைமேற் கொண்டு - திருவடிகளை எமது சிரத்தின்மேலே தாங்கிக்கொண்டு; தொழுது - வணங்கி; (அத்துணையாலே); பிறவுயிர்கள்....பெருமை - பிற உயிர்கள் எல்லாம் வெவ்வேறாகப் பேசும் மொழிகளையெல்லாம் அறியுந் தன்மையாற் கழறிற்றறிவார் எனப் பெயர் பெறும் நாயனாரது பெருமையினை; விளம்புவாம் - சொல்வோம். (வி-ரை) அடியார் என்று - அடியார் என்ற கருத்தினாலே அவருக்கு, அமுதூட்ட என்க. புதல்வன்றன்னைக் கறியமுதா அரிந்து ஊட்டப்பேறு என்க. அமுதா - அமுதாக; ஈறுகெட்டு நின்றது. ஊறு இலாத - "உறுப்பின் மறுவின்றேல்" (3709) என்ற கருத்து, தனி - ஒப்பற்ற; ஒரு குடிக்கு ஒரு மகனாக என்றலுமாம். அமுதூட்டப் பேறு பெற்றார் - அடியார் அமுதுண்ண வில்லையே? எனில், "அன்புநுகர்ந் தருளுதற்கே" (3684) இறைவர் திருமலைநின் றணைந்தாராதலானும், அவ்வாறே அன்புச் செயலினை நிகழ்த்திக் கண்டு நுகர்ந்தாராதலானும், ஊட்டப் பேறு பெற்றார் என்பதுண்மையாம் என்க. அரிந்தமுதாக்கிய அன்புச் செயலின் உள்ளேயும் அவர்கள் மனத்துள்ளேயும் நின்று இறைவர் உண்டருளினார் என்க; ஊட்டு அப் பேறு - ஊட்டும் அப்பேறு என்க. பேறு பெற்றார் - நாயனார் மனைவியார் மகனார் தாதியார் என்ற நால்வரையும் உட்படக் கூறியது குறிப்பு. தலைமேற் கொண்டு - தொழுது - என்று கூட்டுக. சேவடிகள் தலைமேற் கொண்டு அத்துணையானே, பெருமையினை; உடன்தொடங்காது, தொழுது சொல்வோம் என்றலுமாம். பிற உயிர்கள் வேறு கழறிற் றறிவார் - வேறு - வெவ்வேறு; ஒவ்வோருயிர் வருக்கத்தின் மொழியும் வேறு வேறாவன; கழறிற்றறிவார் என்ற, திருத்தொண்டத் தொகையுள் வரும் பெயர்க்காரணமும் சரிதச் சுருக்கமும் கூறித் தோற்று வாய் செய்த நயமும் காண்க. அடியார் என்று.....ஊட்டப்பேறு - சிறுத்தொண்ட நாயனார் சரிதசாரமாய் வடித்து எடுத்து முடித்துக் காட்டியவாறு. இப்பாட்டுக் கவிக்கூற்று; ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை முடித்துக்காட்டி, மேல் வரும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்தருளுகின்றார். |
|
|