[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்11

தாளாண்மை உழவு தொழிற்றன்மை வளம் - உழவு தொழிற் பெரு முயற்சியினாலே வரும் நேரியவளங்கள். இவை நெல் முதலியனவும், காய்கனி முதலியனவும், பால்தயிர்நெய் முதலியனவும், இவைகொண்டு பெறும் பிறவுமாம்; இவற்றை மேல்வரும் பாட்டில் விரித்தல் காண்க.
வேளாண் குண்டையூர்க் கிழவர் - வேளாளர் என்பதனால் மரபுச் சிறப்பினையும், குண்டையூர்க் கிழவர் என்பதனால் ஊர்பற்றிய பெயர்ச்சிறப்பினையும் கூறியபடி. கிழவர் - கிழவர் மரூஉ. இது வேளாளர் மரபுக்கு வழங்கும் சிறப்புப் பெயர் இது முன்னாள் மிகுதியும் வழக்கிலிருந்தது; இந்நாள் அருகி வழங்குவதாயிற்று. தனிப் பெயர்கூறாது ஊர்பற்றிக் கூறியது மரபின் சிறப்புணர்த்திற்று. (தொல். பொருள் - மரபு - 74 உரை) தேவாரப் பதிகத்தினுள் இவ்வூரினையே சிறப்பித்தமை காட்டும் குறிப்புமாம்.
ஆளாகக்கொண்டவர் தாள் அடைந்து - ஆளாகக்கொண்டவராதலின் அவர்தாளடைந்து எனக் காரணக் குறிப்புப்பட ஓதினார்.
வழக்கினில் வென்று ஆளாகக்கொண்டவர் - தடுத்தாட்கொண்ட வரலாறு; நம்பியாரூரர் வரலாற்றில் குண்டையூர்க்கிழார் ஈடுபட்டு அன்பு செய்து ஒழுகினார் என்பது.
அன்பால் ஒழுகுவார் - இவ்வொழுக்க நிலை பற்றிய செயலை மேற்பாட்டிற் கூறுவார்.

10

3165. (வி-ரை.) செந்நெல் - செந்நெல்லின் மேன்மை பற்றி அரிவாட்டாய நாயனார் புராணமும், பிறவும் பார்க்க.
பொன்னன்ன செழும் பருப்பு - பொன்னிறம் பருப்பின் உயர்வு காட்டுவது.
தீங்கரும்பின் இன்னல்ல அமுது - இன் - நல்ல - இனிய என்பது சுவையினையும் - நல்ல என்பது குணத்தினையும் குறித்தது. அமுது என்றார் நேரே உணவாகப் பயன்படுதற் குறிப்பு.
வன்றொண்டர்க்கமுதாக - "வழக்கினில் வென்றாளாகக் கொண்டவர்" என்று முன்பாட்டிற் கூறியதற் கேற்ப வன்றொண்டர் என்றார்.
படி - படித்தரம்; தினந்தோறும் அமைக்கும் அமுது படிக் கட்டளை, சமைத்தல் - அளவிட்டுச் செலுத்துதல்.

11

3166
னசெய லன்பின்வரு மார்வத்தான் மகிழ்ந்தாற்ற
வானமுறை வழங்காமல் மாநிலத்து வளஞ்சுருங்கப்
போனகநெற் படிநிரம்ப வெடுப்பதற்குப் போதாமை
மானவழி கொள்கையினான் மனமயங்கி வருந்துவார்;

12

3167
"வன்றொண்டர் திருவாரூர்மாளிகைக்கு நெல்லெடுக்க
இன்றுகுறை யாகின்ற தென்செய்கே!" னெனநினைந்து
துன்றுபெருங் கவலையினாற் றுயரெய்தி யுண்ணாதே
அன்றிரவு துயில்கொள்ள வங்கணர்வந் தருள்புரிவார்,

13

3168
"ஆருரன் றனக்குன்பா னெற்றந்தோ" மென்றருளி
நீரூருஞ் சடைமுடியார்நிதிக்கோமான் றனையேவப்
பேரூர்மற் றதனெல்லை யடங்கவுநென் மலைப்பிறங்கல்
காரூரு நெடுவிசும்புங் கரக்கநிறைந் தோங்கியதால்.

14