| |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சிம்மாந்து - மிக மகிழ்ந்து; சிம்புளித்து - கண்களை மூடிக்கொண்டு; "பாட லாட லறாத செம்மாப் பார்ந்து" (அரசு. ஆரூர். குறிஞ்சி: 10); கொகுடிக்கோயில் - கொகுடி - முல்லை விசேடம்; சிம்மாந்து....வண்ணம் - மனத்தினானினைந்தபோது - எனக் கூட்டுக. "நினையு மின்பம்" பதிகப் பாட்டுத் தோறும் மகுடம் பார்க்க (3271);- (2) நீறாரும் என்பது நீற்றாரும் என நின்றது; மேனியராய்...நிறைந்து - திருநீறணிந்து - சிவசின்னம் பூண்டு - நினைந்து; 3, 4, 6, 9, 10 பாட்டுக்களும் பார்க்க. மேனியராகத் தியானித்து என்று நினையும் வகைகூறியது என்றலுமாம்; நிறைந்து...மதியானை - இறைவரைக் காற்று - தீ - ஞாயிறு - மதி என்ற வடிவங்களாகக் கண்டு தொழலாம் என்பது; "வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி" (தாண்);- (3) முட்டாமே - தவிராது; மூன்று போதும் - "சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச் சகளி செய்திறைஞ்சு" (நம்பி); காலை - நண்பகல் - மாலை என்பன; கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானை - ஆடல் பாடல்களில் விளங்குபவனை; எட்டான மூர்த்தி - அட்ட முர்த்தத்துள்ளான்; "நிலநீர்...எண்வகையாய்ப் புணர்ந்து நின்றானை" (திருவா);- (4) விருந்தாய் - புதிதான; ஞான அமுதப் பொருள்விருந்து; வினைபோக நினைந்தபோது என்று கூட்டுக;- (5) பொடி - திருநீறு; தேன் - தேன் வண்டு; அடியேறு - திருஅடியிற் பூண்ட;- (6) வாய்மை - அகத்தூய்மை குறிப்பது. "அகத்தூய்மை வாய்மையாற் காணப்படும்" (குறள்). பொடி பூசி - புறமும் அகமும் தூய்மைதரப் பூசி; "பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்." (141); பூசை - சிவபூசை; இஃது ஆன்மார்த்தம் பரார்த்தம் என்ற இருவகையு முள்ளிட்டது; முன் (3) கூறியது ஆன்மார்த்த பூசை;- (7) நோய் - பிறவி; தீவினை - பண்டைப் பழவினை;- (8) பறையாத - நீங்காத; வினைகளும் எனச் சிறப்பும்மை தொக்கது; பாடியாடி - நினைந்தபோது என்று கூட்டுக;- (9) கம் - நீர்; கங்கை ஆர்ந்த என்பது கங்கார்ந்த என நின்றது;- (10) பண்தாழ் இன் இசை - தாழ்தல் - மிக்கு விளங்குதல்;- (11) தென்கலை என்க; தமிழ்; மட்டு - தேன்கள்; இலை - இலையின் வடிவம்; மனத்தினா லன்புசெய் தின்பமெய்தி - இப்பதிகம்திருக்கோயிலில் கும்பிட்டு வழிபட்ட போதன்றிப் புறத்தே முன்கூறிய அப்பதியில் வைகியபோது மனத்தினால் நினைந்து தியானத்தினுள் கண்ட அகக் காட்சியின்பம் என்று ஆசிரியர் (3271) கூறியருளியது சரித அகச்சான்று. |
| தலவிசேடம்:- திருக்கருப்பறியலூர் - காவிரி வடகரை 27-வது பதி; மேலைக்காழி - தலைஞாயிறு - என வழங்கப்படும். "கொகுடிக் கோயில்" (பதிகம்) என்பது இப்பதியின் கோயிலின் பெயர். இந்திரன் அகந்தையுடன் கயிலைக்குச் சென்ற போது இயக்கர் வடிவத்துடன் இறைவர் முன்னே வர, அறியாது அவர்மேல் தனது வச்சிரப் படையினை ஏவி இடர்ப்பட்டுப், பின் தெளிந்து, வணங்கி அந்தக் குற்றம் நீங்க இங்கு வந்து வழிபட்டுப் பேறடைந்தான் என்பது தலவரலாறு. சுவாமி - குற்றம் பொறுத்த நாதர்; அம்மை - கோல்வளை நாயகி; தீர்த்தம் - இந்திர தீர்த்தம். பதிகம் 2. |
| இது திருப்புன்கூரினின்றும் மேற்கில் மட்சாலை வழி 2 நாழிகையில் மண்ணிப் பள்ளத்தை அடைந்து அங்கு நின்றும் வடக்கே மட்சாலை வழி 1/2 நாழிகையில் அடையத் தக்கது. வைத்தீசுவரன் கோயில் நிலயத்தினின்றும் 5 நாழிகையில் உள்ளது. 2153 பாட்டின்கீழ்க் குறிப்புக்களும் பார்க்க. |
| 3272. (வி-ரை.) மண்ணிவளம் படிக்கரை - இது பழமண்ணிப்படிக்கரை என்ற பதி; பழமண்ணி - என்பது மண்ணியாறு முன்னர் ஓடிய வழி. |