[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்15

மன்னனாருக்கு நாயனார் அளித்த நெல் - இங்கு யாவரால் எடுக்கலாகும் - கொடுத்தாரும், கொடுக்கப் பெற்றாரும், சொடைப்பொருளும் பெரியனவாதலின் வேறு பிறரால் எடுக்கலாகாது என்பது; இங்கு யாவரால் - இந்நிலவுகத்தில் நாதனார் அருளினாலன்றி வேறு ஏவரால். வினா எவராலும் எடுக்கலாகாதென எதிர்மறை குறித்து நின்றது; "பயனென்கொல்?" (குறள்) என்புழிப்போலக் கொள்க.
இச்செயல் முன் - "திருவருளின் செயல்" (3169) என்ற செயலும், அது யாராலும் எடுக்கலாகாத் தன்மையும்.
புகுந்தவாறு - ஏவ - இச்செயலினையும், கிழார் வரும் நிலையினையும், முன்னமே இறைவர் நம்பியாரூரருக்கு அருளிச் செய்து அதனைச் சென்று காண்பாய்! என்று ஏவியருளினார் என்க. நம்பிகள்பால் திருவாரூரிலே தாராது குண்டையூரில் தந்து அங்கு நம்பிகளுக்கு அறிவித்து ஏவியருளியவாறு பற்றி முன் (3168) உரைக்கப்பட்டது. குண்டையூர் கிழாரின் அடிமைத் திறமும், நம்பி ஆரூரரின் பெருமையும், இறைவரருள்புரியும் எளிமையும், பரவையாரின் வள்ளண்மையும், ஒருங்கே வெளிப்பட்டு உலகர் அறிந்துய்யவும், நம்பிகள் இது பற்றிய திருப்பதிகம் அருளி ஆள் வேண்டிட அவ்வாறே அருளும் திறமும் உலகர் கண்டுய்யவும் போந்த அருளின் நிகழ்ச்சி என்க. மேல் வருவன (3171-3182) பார்க்க. "ஆட்பாலவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்புங், கேட்பான்புகி லளவில்லை கிளக்கவேண்டா" (திருப்பாசுரம்) என்ற திருவாக்குக் காண்க. திருவரத்துறை யிறைவர்முத்துச்சிவிகை முத்துச் சின்னங்கள் முதலியவற்றை யருளி அடியார்க் கறிவித்துப், பிள்ளையாருக்கும் அறிவித்தருளியபடியினையும் (2092-2105), ஏயர்கோனார்பால் சூலையினை வைத்து, அது தீரும் வண்ணத்தினை அவர்பாலும் ஆரூர்நம்பிகள்பாலும் தனித்தனியே அறிவித்தருளும்படியினையும் (3543-3548), இவ்வாறு வரும் பிற அருளிப்பாடுகளையும் நோக்குக.
நம்பியும் - நாயனாரது ஏவலினைக் கேட்ட நம்பிகளும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.
எதிரே - தம்மிடம் அறிவிக்கப் போந்த குண்டையூர்கிழாரின் எதிரே.

16

3171
குண்டையூர் கிழவர் தாமு மெதிர்கொண்டு கோதில் வாய்மைத்
தொண்டனார்பாதந் தன்னிற் றொழுதுவீழ்ந் தெழுந்து நின்று
"பண்டெலா மடியேன் செய்த பணியெனக் கின்று முட்ட
அண்டர்தம் பிரானார்தாமே நென்மலை யளித்தா" ரென்று,

17

3172
"மனிதரா லெடுக்கு மெல்லைத் தன்றுநென் மலையி னாக்கம்;
இனியெனாற் செய்ய லாகும் பணியன்றி" தென்னக் கேட்டுப்
"பனிமதி முடியா ரன்றே பரிந்துமக் களித்தார் நெல்"லென்
றினியன மொழிந்து தாமுங் குண்டையூ ரெய்த வந்தார்.

18

3171. (இ-ள்.) குண்டையூர் கிழவர்....நின்று - குண்டையூர் கிழவரும் எதிர்கொண்டு வந்து குற்றமற்ற வாய்மையுடைய தொண்டனாராகிய நம்பியாரூரருடைய திருவடியில் தொழுது நிலமுறவிழுந்து எழுந்து நின்று; பண்டெலாம்.......என்று - முன் காலமெல்லாம் அடியேன் தேவரீருக்குச் செய்து வந்த பணிவிடை எனக்கு இன்று முட்டுப்பாடுற்றபோது தேவர் பெருமானாராகிய சிவபெருமானார் தாமே நெல் மலையினை அளித்தருளினார் என்று சொல்லி;

17