| |
| கண்ணுளனாங் கண்ணுதல் - சொல்லணி. |
| கூத்தா! - கூத்தனே!; திருவாக்கு அருளியபடி செய்யாது தாழ்க்கும் இதுவும் உமக்கு ஓர் கூத்தா? என்ற வினாக் குறிப்பும் காண்க. |
| இக்கோமளத்தின்முன் தந்தருளாய் - என்க; தந்தருளாய் என்ற முற்றுவினையினை முன் வைத்தது விரைவுக் குறிப்பு. கோமளம் - மென்மை, அழகு, இளமை என்றவற்றின் தொகுதி. இத்தன்மைகள் எல்லாங்கொண்ட அருமைப்பாடுடைய பரவையார்; கோமளம் - கோமளத்தினை உடையாளைக் குறித்து நின்றது. "பரவையிவள் தன் முகப்பே கூத்தா தந்தருளாய்" என்பது பதிகம். |
| நீத்தாரும் தொடர்வரிய நெறி நின்றார் - ஆரூர் நம்பிகள்; ஈண்டு இவ்வாற்றாற் கூறியது, பொன் வேண்டுதலும் பெண்ணைப்பற்றி எடுத்துக் கூறுதலும் பற்றிப் பொன்னாசை பொண்ணாசைகளின் தொடர்புடையார் என்று கொண்டு தவறுபட்டு அபசாரப்படுவோருளராயின் அவர்களைத் தெருட்டி ஈடேற்றும் கருணைத்திறம் பற்றி என்க. நீத்தாருத் தொடர்வரிய நெறிநிற்றல்; "ஏத்தா திருந்தறியேன்" என்ற பதிகத் திருப்பாட்டானும் பெறப்படும். "துறந்த முனிவர் தொழும்பரவை துணைவா" என்று இதனை எடுத்துக் கூறினர் சிவப்பிரகாசர். தொடர்வரிய - பின்பற்றுதல் அரிதாகிய; இந்நெறி நிற்றற்கரியதாகிய என்றலுமாம். |
| 134 |
| 3289. (வி-ரை.) கூத்தனாற் பொன் வரப்பெறும்; (9) திருப்பாட்டில் "கூத்தா" என்ற தன்மையால் நம்பிகள் இறைவரை விளித்து வேண்டிப் பெற்றமையால் அப்பெயராலே கூறினார்; விளித்து வேண்டிய அந்தக் கூத்தனார் என்று சுட்டு விரிக்க; ஏனைப் பாட்டுக்களில் "அடியேன்" என்ற நம்பிகள் இப்பாட்டில் "கொடியேன்" என்றமை கருதுக. |
| திருவருளால் - "தந்து அருள்வாய்" என்ற அருள்; "அருளால்" (3281 - 3282) என்றதும் கொள்க. |
| வந்தெழு பொன் - வந்தெழுந்தது - அவ்வாறு வந்த பொன்னை என்க; பொன்வந்தமை வேறு கூறாது ஆற்றலாற் பெற வைத்தார்; முன்னர்ப் பொன் தந்தமை உலகரறியார்; அதுபோல இங்கு வந்தமையும் உலகரறியார் என்பார் வெளிப்படையாகக் கூறாராயினர். |
| வரன்முறையாற் கரையேற்ற - 12000 பொன்னையும் எவ்வாறு எடுத்து ஏற்ற வேண்டுமோ அவ்வாற்றால் என்பதாம்; வரப்பெற்ற அந்த முறை. |
| மாரி - பொழிந்திழிந்தது - மலர் மழை வீழ்ந்தது; இழிந்தது - உயர்வுப் பொருள் குறித்தது; "வீழ்க தண்புனல்"(தேவா). |
| இந்த....பெறுவார்என - இது பொன் வரக்கண்ட உலக மக்கள் கூற்று; தொழுதார் - திருவருள் வெளிப்பாட்டினை வணங்கினர். |
| வருமுறையால் - என்பதும் பாடம். |
| 135 |
| திருமுதுகுன்றம் |
| திருச்சிற்றம்பலம் | பண் - நட்டராகம் |
| பொன்செய்த மேனியினீர் புலித்தோலை யரைக்கசைத்தீர், முன்செய்த மூவெயிலு வெரித்தீர்முது குன்றமர்ந்தீர் மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவ டன்முகப்பே என்செய்த வாறடிகே ளடியேனிட் டளங்கெடவே. | |
| (1) |