[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்181

  கைக்கொண்டு - ஏற்றுக்கொண்டு; கையில் ஏற்றுக்கொண்டு என்பதும் குறிப்பு; இங்கு - இப்பந்தரிடையே; இது வழியிடை உணவு கொள்ளத்தக்க இடம் இது என்ற குறிப்புமாம்.
  ஏல நறுங் குளிர் தண்ணீர் குடித்து - ஏல - பொருந்த; பொதிசோற்றுளவுக்குப் பொருந்த உள்ள: நறுமை - இனிமை; குளிர் தண்ணீர் - குளிர்ந்த நீரே குடிக்கத்தக்கது என்பது மருத்துவ நூல்விதி; நோய் கொண்டவர்க்கே வெந்நீர் விதிக்கப்படும். இங்குக் கூறிய நீர் மறையவனார் உடன்கொண்டு வந்தது (3310).
  இளைப்புத் தீரும் - இளைப்பு - பசி - தாகம் - வெயில் வெப்பம் - வழிநடை முதலிய பலவற்றாலும் நேர்ந்த இளைப்பு; தீரும் - இளைப்பினின்றும் நீங்குவீராக.
  என - என்று சொல்ல.
 

159

  3314. (வி-ரை.) வன்றொண்டர்....இசைந்தருளி - வன்றொண்டர் - முன் "வன்றொண்டர்" (3311) என்றதும் காண்க. மறை முனிவர் - மறையவர் வேடத்துள் மறைந்து நின்ற முனிவர்.
  பொதிசோறு...ஆகாது - இது நம்பிகள் மனத்துள் எண்ணியது. திருவருட் குறிப்பினால் எழுந்த கருத்து.
  எதிர் விலக்கல் - மறுத்து ஏதேனும் சொல்லி இசையாது விலக்குதல். இன்று....ஆகாது வரும் வழியிடையிலும் முன் அறியாதாரிடத்தும் இவ்வாறுதரப்படும் சோற்றினை ஏதேனும் காரணம்பற்றி விலக்குதலன்றி, ஏற்பது பெரியோரது மரபன்றாயினும், இன்று இஃது அவ்வாறு மறுக்கற்பாலதன்று என்பதாம். இஃது இறைவரது அருட்பார்வையாலும் சொல்லாலும் ஆகியதேயன்றி நம்பிகளது பசிவருத்தத்தா லாயதன்று.
  பொன் தயங்கு நூன்மார்பர் - மறையவராய் நின்ற இறைவனார்; பொன் - பொன்ஒளி; தயங்குதல் - விளங்குதல்; பொன்னார் மார்பர் - நூன்மார்பார் - என்று தனித்தனி கூட்டுக; சோறு அது - அது - பகுதிப் பொருள் விகுதி.
  சென்ற - உடன்வந்த; சென்று - என்ற பாடம் சிறப்பிலது.
 

160

  3315. (வி-ரை.) எண்ணிறந்த பரிசனங்கள் - நம்பிகளுடன் அளவில்லாத பரிசனங்கள் யாத்திரையில் தொடர்ந்து சென்றார்கள் என்பது விளங்குகின்றது; ஆளுடைய அரசுகளது தனித்த யாத்திரை இதனுடன் ஒப்பு நோக்கி உணரற்பாலது. நம்பிகளின் பரிசனங்களைப் பற்றிப் பின் 3329லும் பார்க்க.
  எல்லாரும் - உடனிருந்த தொண்டர்களும் பரிசனங்களல்லாத பிறரும்; பரிசனங்களாய் வந்த எல்லாரும் என்றலுமாம்.
  அம்மருங்குப் பசித்தணைந்தார்களும் - வழிக்கரையில் தண்ணீர்ப்பந்தருடன் பொதிசோறு மருத்தலின் அவ்வழியே செல்வோர்களுட் பசித்து வந்தவர்கள். இவ்வாறாகிய பசு தர்மங்களும் செய்யத்தக்கவை என்ற நிலையினை அறஞ்சொன்ன இறைவர் தாமே செய்து காட்டியவாறாம்; நம்பிகள் பரிசனங்கள் இவர்கள்பாற்பட்டபோது இதுவே பதிதருமமாகும்; பசித்தணைந்த ஏனையோர்பாற்பட்டபோது அதுவே பசு தருமமாகும். இறைவர் செய்தமையால் இவற்றின் பயன்கள் முறையே அவை செய்யப்பட்டார்பாற் சார்ந்தன. இறைவர் தந்த பொதிசோறு யுயர்ந்தாரலர் என்பதும் காண்க; மேல் வருவதன் கருத்தும் கருதுக.
  உண்ணிறைந்த...பொலிந்ததால் - உண்ணிறைந்த ஆரமுதாய் - உலவாக் கோட்டையாகிய அமுதமாகி.