| உண்ணிறைதல் - எடுக்க எடுக்கக் குறையாது உள்ளே நிறைந்து பொலிதல்; ஆரமுது - பொதிசோறு. |
| அமுதாய் - அமுதம் போல என்றலுமாம். |
| புண்ணியனார் - எல்லாப் புண்ணியங்களின் பயனானவர் சிவபெருமான். |
| அளித்த பொதிசோறு - தண் அளியுடன் கொடுத்தருளிய சோறு; ஈண்டு, நீர் வேட்கையாலும் பசியாலும் மிக வருந்திவரும் தம்அடியாராகிய நம்பிகளுக்கு அளித்தது சாலும்; ஏனைப் பரிசனங்களுக்கும் மற்றும் அணைந்தோர்களுக்கும் அளித்த தன் இயைபு என்னை? எனின், அவர்களும் பசியான் வருந்தி யணைந்தமை காரணமாக நம்பிகள் பொருட்டு வந்த தண்ணளி எல்லார்க்குமாயிற்று என்க; புவனத்தில் உண்மையில் நீரும் உணவுப்பொருளும் உளவாக்கி எல்லாவுயிர்க்கும் பசிதீர்க்க வுதவுபவர் இறைவரேயாம் என்பது மறக்கற்பாலதன்று; ஆயின் ஈண்டுப் பொதிசோறேயாகி உண்ணப்பெற்றது நம்பிகளது சார்பினாலும் அங்கு அவ்வவர் வந்து சார்ந்த ஊழ்வினையாகிய நியதியாலுமாம்; ஏனையோர் பக்கல் பயன் வேறு என்பது அணைந்தார்களும் என்ற உம்மையாலும் பெறப்படும். |
| 162 |
3316 | சங்கரனார் திருவருள்போற் றண்ணீரின் சுவையார்ந்து பொங்கிவரு மாதரவா லவர்நாமம் புகழ்ந்தேத்தி அங்கயர்வாற் பள்ளியமர்ந் தருகணைந்தார் களுந்துயிலக் கங்கைசடைக் கரந்தாரப் பந்தரொடுந் தாங்கரந்தார். | |
| 163 |
| (இ-ள்.) சங்கரனார்...ஆர்ந்து - சங்கரனாருடைய திருவருளினைப் போலப் பெற்ற தண்ணீரையும் அருந்தி அதன் சுவையும் நிறைந்து; பொங்கிவரும்....புகழ்ந்தேத்தி - மேன்மேலும் அதிகரித்து மிகுகின்ற அன்பினாலேஅவரது திருநாமமாகிய திருவைந் தெழுத்தினையே புகழ்ந்து துதித்து; அங்கு...துயில - அவ்விடத்தில் உடல் இளைப்பினாலே நம்பிகள் பள்ளிகொண்டு துயிலவும், பக்கத்தில்அணைந்தவர்களும் துயிலவும்; கங்கை...கரந்தார் - கங்கையைச் சடையிலே ஒளித்தவராகிய சிவபெருமான் அந்தப் பந்தருடனே தாமும் ஒளித்தருளினார். |
| (வி-ரை.) சங்கரனார் - சுகத்தைச் செய்பவர் என்பது சொற்பொருள்; இங்கு வழியிடை எதிர்பார்த்திருந்து பொதிசோறும் தண்ணீரும் கொடுத்து இளைப்பு நீக்கிச் சுகம் செய்தவர் என்ற காரணக் குறிப்புப்பட இப்பெயராற் கூறிய நயம் காண்க. |
| திருவருள் போற் - சுவை ஆர்ந்து - அருள் இனிப்பது போலத் தண்ணீரும் இனிப்பது என்பதாம்; சோறு அருந்திய அளவெல்லாம் முன்கூறி முடித்தபின், நீரின் சுவை ஆர்தலைக் கூறியது, உணவு உண்டு முடிந்த நிலையினன்றி, உணவு கொள்ளும் இடையில் நீர் உண்ணலாகாது என்ற மருத்துவ நூலோர் முடிபுகுறித்தற்கு. |
| அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி - அவர் நாமமாவது திருவைந்தெழுத்து; "ஆலைப்படுகரும்பின் சாறு போல வண்ணிக்கு மைந்தெழுத்தின் நாமத் தான்காண்" (தேவா); முன்பு, இருந்தார் "சிவாயநம" வெனப்பேசி (3312) என்றது காண்க. நம்பிகள் தமையறியாமலே அச்சிவ மறையவரது நாமத்தையே துதிக்கின்றார்; யாது நன்மையாவர் மூலம் வரினும் அவை யாவும் சிவனருள் என்று கொண்டு சிவனைத் துதித்தல் பெரியோரியல்பு. "வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால் மற்று நானறியேன் மறு மாற்றம்" (நம்பி - தேவா) என வருவதும், "நான் மறக்கினுஞ் சொல்லுநா நமச்சி வாயவே" (நம்பி) என்றதும் கருதுக. |