| தொழிற்பெயர்; சேர்தல்; கழியார் செல்வம் - கடற்கழியின் வழிவந்து சாரும் முத்து - பவளம் முதலிய மணிகளும் ஏனைக் கடல்படு பண்டங்களாகிய செல்வங்களும். |
| தலவிசேடம்:- திருக்கழிப்பாலை - சோழநாட்டுக் காவிரி வடகரை 4-வது பதி; III பக்கம் 245 பார்க்க. |
| III -வது முறை - தில்லை வழிபட்டது. |
3321 | சீர்வளருந் திருத்தில்லைத் திருவீதி பணிந்துபுகுந் தேர்வளர்பொற் றிருமன்று ளெடுத்தசே வடியிறைஞ்சிப் பார்வளர மறைவளர்க்கும் பதியதனிற் பயின்றுறைவார் போர்வளர்மே ருச்சிலையார் திருத்தினைமா நகர்புகுந்தார். | |
| 167 |
| (இ-ள்.) சீர்வளரும்....புகுந்து - சிறப்புக்கள் பெருகும் திருத்தில்லைப்பதியின் திருவீதியினை வணங்கி உள்ளே புகுந்து; ஏர்வளர்...இறைஞ்சி - அழகு வளரும் திருப்பொன்னம்பலத்தில் ஆடுகின்ற தூக்கிய திருவடியினைப் பணிந்து; பார்வளர...உறைவார் - உலகம் வாழும்பொருட்டு வேத ஒழுக்கங்களை வளர்க்கின்ற அத்திருப்பதியில் பணிந்து தங்குவாராகிய நம்பிகள்; போர்வளர்....புகுந்தார் - போரில் மிக விளங்கிய மேருமலையாகிய வில்லினையுடைய சிவபெருமானது திருத்தினைமா நகரினுள்ளே சென்று புகுந்தருளினர். |
| (வி-ரை.) சீர்வளரும்...புகுந்து - இது நம்பிகள் தில்லையிற் சென்று வழிபட்டமை மூன்றாவது முறையாகும். திருமுதுகுன்றினின்றும் வரும் வழியில் பேரூர்ப் பெருமானை நினைந்து பாடி வழிபட்டது இரண்டாவது முறையாகும். 3265 முதல் 3270 வரை பார்க்க. |
| ஏர்வளர்...இறைஞ்சி பொற்றிருமன்று - பொன்னம்பலம்; எடுத்த சேவடி - தூக்கிய திருவடி; (குஞ்சித பாதம்); "இனித்த முடைய எடுத்தபொற் பாதம்" (தேவா). உயிர்களைப் பிறவிக்குழியினின்றும் எடுத்த திருவடி என்பதுமாம். |
| பார்வளர மறைவளர்க்கும் பதி - மறை -. மறையொழுக்கமாகிய எரிவளர்த்தல் முதலியவை; ஆகுபெயர்; "கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே செற்றார்" (தேவா); "வருமுறை யெரிமூன் றோம்பி மன்னுயி ரருளான் மல்க...அருமறை நான்கி னோடா றங்கமும் பயின்று வல்லார் (354); "அறுதொழில் ஆட்சியாலே யருங்கலி நீக்கி யுள்ளார்" (355); "முழுதுல கினையும் போற்ற மூன்றெரி புரப்போர்" (855) என்பன முதலியவை காண்க. |
| பதியதனிற் பணிந்து உறைவார் - அப்பதியிலே வந்து வணங்கி அதன்புறத்து உறைவார் என்க. 2063 - 2064 பார்க்க. பணிதல் மட்டும் தில்லையின் கண்ணும், உறைதல் அதற்குத்தக்க வேறு இடத்தினுமாகக் கொள்பவர்; உறைவார் - வினைப்பெயர்; உறைவாராகிய நம்பிகள்; உறைவார் - புகுந்தார் என்று கூட்டி முடிக்க; இவ்வாறு கூறியதனாலும் உறையுமிடம் வேறென்பது குறிப்பாலுணர்த்தப்பட்டது. |
| போர்வளர் மேருச் சிலையார் - போரின் பொருட்டு வளர்ந்த மலை; வளர்தல் - ஈண்டு விளங்கிய என்னும் பொருட்டு. |
| திருத்தினைமா நகர் புகுந்தார் - முதன்முறை திருத்தினை நகரினின்றும் கிழக்கு நோக்கித் திருத்தில்லையில் எழுந்தருளினர்; இம்முறை திருத்தில்லையினின்றும் மேற்குநோக்கிச் சென்று திருத்தினை நகரினிற் புகுந்தனர். திருத்தினை நகர்வழிபாடு இஃது இரண்டாவது முறை. |