[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்189

  தில்லை....இறைஞ்சி - முதன்முறை மிக விரிவாகவும்; இரண்டாம்முறை அதனிற் சுருங்கவும் அருளினார். இது மூன்றாம் முறையாதலின் அதனினும் சுருங்க இரண்டு பாட்டுக்களாற் கூறி யமைந்தார்.
  தில்லை - திருத்தினை நகர் - இம்முறையில் நம்பிகள் அருளிய பதிகங்கள் கிடைத்தில!
 

167

3322
திருத்தினைமா நகர்மேவுஞ் சிவக்கொழுந்தைப் பணிந்துபோய்
நிருத்தனா ரமர்ந்தருளு நிறைபதிகள் பலவணங்கிப்
பொருத்தமிகுந் திருத்தொண்டர் போற்றுதிரு நாவலூர்
கருத்தில்வரு மாதரவாற் கைதொழச்சென் றெய்தினார்.
 

168

  (இ-ள்.) திருத்தினைமா நகர்...போய் - திருத்தினைமா நகரத்திற் பொருந்த அமர்ந்தருளும் சிவக்கொழுந்தாகிய இறைவரை வணங்கிச் சென்று; நிருத்தனார்....வணங்கி - ஆனந்தக் கூத்தனாராகிய இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் நிறைந்த பதிகள் பலவற்றையும் வணங்கிக்கொண்டு சென்று; பொருத்தமிகும்....எய்தினார் - மிகப்பொருத்தமுடைய திருத்தொண்டர்கள் போற்றுகின்ற திருநாவலூர் மனத்தினுள்ளே வருகின்ற அன்பினாலே அங்குச் சென்று தொழுது வணங்கும் பொருட்டுப் போய் அதனை அடைந்தனர்.
  (வி-ரை.) திருத்தினைமா நகர்....பணிந்துபோய் - இம்முறையிற் பாடிய பதிகம் கிடைத்திலது!; முன்முறை அருளிய பதிகம் - பதிகக் குறிப்பு - தலவிசேடம் முதலியவை I பக்கம் 275 - 276 பார்க்க. தலமரம் கொன்றை; திருத்தினைநகர் - இத்தலம் தீர்த்தனகிரி என்று மருவி வழங்கப்படுகிறது. ஜாம்புவர் பூசித்துப் பேறுபெற்றனர். அவர் பூசித்தலிங்கம் அம்மை கோயிலில் உள்ளது. பெரியான் - ஜங்கமர் - (இறைவர் கொண்டு எழுந்தருளிய கோலம்.) இவை கோயிற் சுவரில் உள்ளன. பச்சந்த தேசிக ராதீனத்துக் குமாரமலை மருந்தர் இத்தல புராணமியற்றியுள்ளார் என்பர்.
  நிறைபதிகள் பல -இவை திருச்சோபுரம், திருமாணிகுழி, திருப்பல்லவனகரம், திருமுண்டீச்சுரம், திருக்குணபர வீச்சுரம், திருவதிகை வீரட்டம், திருவாமூர், சித்தவடம், திருமணம் வந்த புத்தூர் முதலியன என்பது கருதப்படும். இவற்றுள் திருவதிகையினை வழிபடுதல் முன்முறையிற் போலவே கொள்ளப்படுதல் வேண்டும்.
  229-230 - பாட்டுக்கள் பார்க்க: அப்பதிகம் முன்னர்க் குறிக்கப்பெற்றது; I பக்கம் 266-270 பார்க்க. ஏனையவற்றின் நம்பிகள் பதிகங்கள் கிடைத்தில!.
  பொருத்தமிகும்....திருநாவலூர் - பொருத்தமிகும் - நாவலூர் என்றும் திருத்தொண்டர் போற்றும் திருநாவலூர் என்றும் தனித் தனிக்கூட்டுக.
  பொருத்தமிகுந் திருநாவலூர் - கருத்தில் வரும் - ஆதரவு - பொருத்தமாவது - திருநாவலூரினின்றும் திருமணத்தின் பொருட்டுப் புறப்பட்ட நம்பிகள் திருவெண்ணெய் நல்லூரிலே தம்மை இறைவர் தடுத்தாட்கொண்ட நிலையில் அங்கு நின்றும் மீண்டும் திருநாவலூர் பணிந்து பணிமேற் சென்றனர். ஈண்டு, மீண்டும் வந்தது தாம் அவதரித்த பதி என்ற அபிமானம் பற்றியதனா லன்றித் தலயாத் திரையில் கண்ட கண்ட இடங்களெங்கும் சென்று வணங்கும் முறை பற்றிய தென்பது பொருத்தமெனப்பட்டது. கைதொழ - என்றதுமிக் குறிப்பு.
  திருத்தொண்டர் போற்றும் திருநாவலூர் - ஆளுடைய நம்பிகள் திருவவதரித்த பதியாதல் பற்றி அடியார்கள் போற்றும் என்க.