[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்21

சேவின்மே லுமையோடும் வருவார்தந் திருவருளின்
ஏவலினா லவ்விரவு பூதங்கண் மிக்கெழுந்து,

24

3179
குன்டையூர் நென்மலையைக் குறட்பூதப் படைகவர்ந்து
வண்டுலாங் குழற்பரவை மாளிகையை நிறைவித்தே
அண்டர்பிரான் றிருவாரூ ரடங்கவுநென் மலையாக்கிக்
கண்டவரற் புதமெய்துங் காட்சிபெற வமைத்தனவால்.

25

3178. (இ-ள்) கோவைவாய்....இருந்ததற்பின் - கோவைக் கனிபோலும் திருவாயினையுடைய பரவையார் மகிழும்படி நிகழ்ந்த செயல்களை எல்லாம் எடுத்துக் கூறி அவரோடுங் கூடி மிக இன்பமுடன் இருந்த பின்பு; சேவின்மேல்...ஏவலினால் - இடபத்தின்மேல் உமையம்மையாருடனே எழுந்தருளி வரும் இறைவரது திருவருளின் ஏவுதலினாலே; அவ்விரவு...மிக்கெழுந்து - அந்த இரவிலே சிவபூதங்கள் மிக்கு எழுந்து;

24

3179. (இ-ள்) குண்டையூர்...நிறைவித்தே - அக்குறட் பூதப் படைகள் குண்டையூரிலிருந்த நென்மலையைக் கைக்கொண்டு எடுத்துச் சென்று, வண்டு உலவுதற்கிடமாகிய கூந்தலையுடைய பரவையாருடைய திருமாளிகையின்கண் நிறையச் செய்தே; அண்டர்பிரான்...ஆக்கி - தேவர் பெருமானது திருவாரூர் முழுவதும் நென்மலையாக உய்த்து; கண்டவர்....அமைத்தன - கண்டவர்கள் யாவரும் அற்புதமடையும்படி காட்சிப்பட அமைவு செய்தன; (ஆல் - அசை)

25

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
3178. (வி-ரை) கூறி - குண்டையூரிற் கண்டவற்றையும், இறைவர்பால் வேண்டியதனையும், இறைவர் அசரீரியாக அருளியதனையும் கூறி.
மிக இன்புற்று இருந்ததற்பின் - இறைவரது அருட்டிறங்களை எண்ணி எண்ணி மகிழ்ந்து திளைத்திருந்த பின். அந்நாண் முழுதும் அவ்வெண்ணங்களே மிக்கன என்பது.
சேவின் மேல் உமையோடும் வருவார் - சிவபெருமான். இத்தன்மையாற் கூறியது ஈண்டு அருளின் வெளிப்பாடு குறித்தற்கு.
ஏவலினால் - நென்மலையினைத் திருவாரூரிற் கொண்டுய்க்கும்படி ஏவியருளியபடி.
பூதங்கள் - சிவகணமாகிய பூதங்கள். "குறட்பூதப் படை" (3179) என மேற்கூறுதல் காண்க. "குண்டைக்குறட் பூதம்"(தேவா).
மிக்கெழுந்து - கவர்ந்து - நிறைவித்தே - ஆக்கி - அமைத்தன என மேல் வரும் பாட்டுடன் முடிக்க.

24

3179. (வி-ரை) கவர்ந்து - கைக்கொண்டெடுத்து. மாளிகையை நிறைவித்தே - இது முதலிற் செய்த செயல். மாளிகையிடங் கொள்ளுமளவும் நிறைவு செய்தன. ஏகாரம் தந்து பிரித்துக் கூறியதும் அப்பொருட்டு. ஏகாரம் பிரிநிலை.
திருவாரூர் அடங்கவும் நென்மலை ஆக்கி - இது திருமாளிகையினை நிறைவாக்கிய பின் எஞ்சிய நென்மலையைப் பற்றிய செயல். அடங்கவும் - முழுவதும். மலை ஆக்கி - நகரின் திருவீதிகளெங்கும் மலை போலக் குவித்து.
அற்புதமெய்தும் காட்சி - நெல்மலையினைக் கண்டவர்கள் அற்புதமாகிய மெய்ப்பாட்டுடன் காணத் தக்க காட்சி; அற்புதமாவது, நெல்மலைகளின் அளவே