202திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

 
"பெருநாதச் சிலம்பணிசே வடிவருந்தப் பெரும்பகற்கண்
உருநாடி யெழுந்தருளிற் றென்பொருட்டா" மெனவுருகி,
 

181

 

வேறு

3336
"முதுவா யோரி" யென்றெடுத்து முதல்வ னார்தம் பெருங்கருணை
"யதுவா மிது"வென் றதிசயம்வந் தெய்தக் கண்ணீர் மறையருவிப்
புதுவார் புனலின் மயிர்ப்புளகம் புதையப் பதிகம் போற்றிசைத்து
மதுவா ரிதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்.
 

182

  3335. (இ-ள்.) திருநாவலூராளி....மதித்தே - சிவயோகியாராய் மறையவர் வேடங் கொண்டுவந்த இறைவர் மறைந்து நீங்கத் திருநாவலூர்த் தலைவராகிய நம்பிகள் முன்வந்த புகழுடைய மறையவனார் இறையவனாரேயாவர் என்று துணிந்து; பெருநாதச் சேவடி...உருகி - பெரிய நாதமுடைய சிலம்பினை அணிந்த செம்மையாகிய திருவடியிணை வருந்த உச்சிப்போதில் உருவு தாங்கி என்பொருட்டாக எழுந்தருளி நடந்து எழுந்தருளிற்றே! என்று மனமுருகி,
 

181

  3336. (இ-ள்.) முதுவாயோரி...இதுவென்று - முதுவாய் ஓரி என்று தொடங்கி, இறைவனாரது பெருங் கருணைத் திறம் அதுவேயாகும் இச்செயல் என்ற கருத்துடன்; அதிசயம் ...போற்றிசைத்து - அதிசயம் பொருந்தக்கண்ணீர் மழை யருவிபோலப் பெருக, வார்ந்த அப்புதுப் புனலில் திருமேனி முழுதும் மயிர்க்கூச்சினாலே மூடத், திருப்பதிகம் பரவித் துதித்து; மதுவார்...வணங்கினார் - தேன் பொருந்திய கொன்றை சூடிய முடியினையுடைய சிவபெருமானைப்பாடி மகிழ்ச்சி பொருந்த வணங்கினார்.
  182
  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
  3335. (வி-ரை.) சிவயோகியார் - மறையவராய் வந்த சிவபெருமான்; யோகம் - கூடுதல்; சிவயோகியார் - அந்தணர் வேடத்துடன் கூடியசிவபெருமான்.
  நாமம் - புகழ்; நாமமறையவனார் - பெயர் மாத்திரையால் மறையவரெனப் பட்டார் என்ற குறிப்புமாம்.
  மதித்தே - கண்ட செயல்களால் காணாத சிவனைத் துணிந்தே; மதித்தல் - காரணங்களால் பொருணிச்சயம் செய்தல்.
  பெருநாதச் சிலம்பு - நாதம் - சுத்த மாயையாகிய குடிலை; பெருமையாவது மறை முதலிய எல்லாவற்றுக்கும் காரணமாயிருத்தல்; இச்சிலம்பொலிவழியே சென்றால் சிவனை அடையலாம் என்று "திருச்சிலம் போசை ஒலிவழி யேசென்று, நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற" என ஞானசாத்திரம் முழக்குதல் காண்க. திருச்சிலம்போசை கேட்கப் பெற்றதனாலே கழறிற்றறிவார் நாயனார் இறைவரது திருவருள் கூடிய துணிபிணைத் தினமும் பெற்றுவந்த வரலாறும் கருதுக.
  பெருநாத...பொருட்டாம் - "கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கென், றுச்சம் போதா லூரூர் திரியக் கண்டா லடியா ருருகாரே" என்ற பதிகக்கருத்து; ஈண்டுப் "பெருநாதச் சிலம்பணி சேவடி" என்று நாதச் சிலம்பு பற்றிக்கூறியது, "இவர் இறைவர் தாமே" என்று காணத் துணையாயிருந்தமை குறிப்பா லுணர்த்தற் கென்க.
  பெரும் பகல் - நண்பகல்; "உச்சம் போதால்" பதிகம்
  உருநாடி - "ஒருநாம மோருருவ மொன்றுமில்லா"த இறைவர் மறையவராகிய ஓர் உருவத்தை மேற்கொண்டு; அகண்டிதமாகியவர் கண்டிதப்படக் காணப்பட்டு.