| 3349. (வி-ரை.) மன்னு....இறைஞ்சிப் போய் - திருக்கச்சியினின்றும் தென்மேற்காகச் சென்று திரு வன்பார்த்தான் பனங்காட்டூரினை வழிபட்டு, அங்கு நின்றும் மீண்டு திருக்கச்சி வழியே வடக்கில் சென்று திருமாற்பேறு வணங்கி, அங்கு நின்றும் மேற்பாற் சென்று திருவல்லத்தினை வணங்கினார் என்க. |
| மேல்பால்...இடம் பலவும் - இவை திருக்கரபுரம் முதலியவை. |
| பின்னல் - புரித்ததுபோலும் உருவுடைய. |
| சென்னி முகில் தோய் தடங்குவட்டு - மேகங்கள் தவழ்தற்கிடமாகிய பெரிய சிகரங்கள் மலையின் உயர்ச்சி குறித்தது. |
| திருக்காளத்தி மலை சேர்ந்தார் - திருவல்லத்தி னின்றும் மேல்பாற் போய்ப் பல பதிகளை வணங்கினார் என்றதனால் நெடுந்தூரம் சென்று அங்குநின்றும் வடகிழக்காகப் போய் நேரே திருக்காளத்திமலை சேர்ந்தருளினர். ஆளுடைய பிள்ளையாரும் அரசுகளும் திருக்காரிகரை இறைஞ்சித் திருக்காளத்திமலை சேர்ந்த வழி வேறு. |
| 195 |
| திருவன்பார்த்தான் பனங்காட்டூர் |
| திருச்சிற்றம்பலம் | பண் - சீகாமரம் |
| விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை அடையிலன் புடையானை யாவர்க்கு மறியொண்ணா மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச் சடையிற்கங்கை தரித்தானைச் சாராதார் சார்வென்னே. | |
| (1) |
| பாரூரும் பனங்காட்டூர் பவளத்தின் படியானைச் சீரூருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த ஆரூரன் னடித்தொண்டன் னடியான்சொல் லடிநாய்சொல் லூரூர னுரைசெய்வா ருயர்வானத் துயர்வாரே. | |
| (10) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- சிவபெருமானையே சார்தல் வேண்டும்; உணர்தல் வேண்டும்; அறிதல் வேண்டும்; அவனடிமைக்கட் குழைதல் வேண்டும்; அவ்வாறு சாராதார் சார்வு, உணராதார் உணர்வு முதலியவை பயனற்றவை; அவை பொருளல்ல. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) அடையில் அன்புடையான் - வந்து சரணடைந்தவர்பால் அன்பு கொண்டு உய்யச் செய்பவன். சார்ந்தாரைக் காப்பவன் சிவன்; அவ்வாறு சாராதார் சார்வென்னே? வேறு எச்சார்பும் சார்பன்று. இவ்வாறே மேல்வரும் பாட்டுக்கள் எல்லாம் கொள்க; "மடையில் வாளை பாய" (தேவா - கோலக்கா); நீர்வளம் குறித்தது;- (3) எண்ணார் நாண்மலர் - எண் ஆர் - விதிப்படி கொய்து பொருந்திய; எண் - எட்டு; அட்டபுட்பம் என்ற குறிப்பும், எண் - நினைவு - அகம் என்று கொண்டு கொல்லாமை, வாய்மை முதலிய அகப்பூசை விதியில் நினைக்கத்தக்க என்ற குறிப்பும் பட நின்ற நயம் காண்க; படிறன் - நிந்தைத்துதி;-(4) கோணாதார் - வஞ்சம் முதலிய தீமைகளில்லாதவர்; பெற்று - எருது; (5) உரம் - மனத்திண்மை; உரமென்னும் பொருளானை - அன்பின் உறைப்பினையே பொருளாகக் கொள்பவர்; உருகில் உள் உறைவான் - "உள்ள முருகிலுடனாவர்" (தேவா); சிரம் - தலை ஓடு; சிரமாலை; கலன் - அணிகலன் - பலிப்பாத்திரமுமாம்;- (6) எயிலார் - மும்மதிலுடைய புரவாணர்; பொக்கம் - பொய்ம்மை - தீமை; வெயிலாய்....தீ - உயிர்கள் வாழ்ந்து கன்மானுபவங்களால் வினை |