| தீர்ந்துய்தற் பொருட்டுப் புவனங்களைத் தந்தவன் என்பது; வெயில் காற்று மின் தீ என்பன போகந் துய்த்தற் குதவுவன; ஆனாய் - இவற்றுள்ளும் நிறைந்து நின்று உதவுபவர். ஆனாய் - என்ற சொல் கொண்டு வெவ்வேறு பொருள் கொள்ளும் மதாந்தரங்கள் கூறுவன பொருளல்ல; ஈண்டு, நின்றதிருத்தாண்டகம், திருவுருத்திரம் இவற்றின் கருத்துக்கள் கருதி உணரத்தக்கன; பயில்வான் - விளங்கி வீற்றிருந்தருள்பவர்; அடிமைக்கட் பயிலாதார் - அடிமை செய்தலே பழக்கமாகக் கொள்ளாதார்;- (7) காலம் - ஆயுள்; அறியாதார் - அறிவில் எப்போதும் கொள்ளாதார்;- (8) வஞ்சமற்ற மனத்தாரை மறவாத - வஞ்சம் - பொய் - நடலை - முதலிய தீக்குணங்கள்; இவை இல்லாத மனத்துடன் அடிமை செய்வார்பால் எப்போதும் அருள் புரிபவன் சிவன்; மஞ்சுற்ற - மேகங்கள் தவழும்படி உயர்ந்த; எங்கள் நெஞ்சத்துப் பிரானை - என்க; எங்கள் நெஞ்சில் நிலையாக வீற்றிருப்பானை; "என் நெஞ்சு நீங்கா இறைவன்" "பாதமென் நெஞ்சு ளிருக்கவே" (தேவா) என்பன முதலியவை காண்க; எங்கள் - உரிமை குறித்த சிறப்புப் பன்மை; சீரடியார்களை உளப்படுத்திய பன்மையுமாம்;- (9) மழையான் - மேகம்போன்ற கரிய மேனியுடையவன்; விட்டுணு; உழையா - பக்கத்தில்; உள்க - அடிமுடிஎல்லை காணாது நினைக்க; வானத்து - வானத்தின்மேலும்; குழையாதார் - அகங்குழைதல் அன்பின் உறைப்பினால் வருவது; அடிமைத்திறத்தில் குழையாதவர் - அன்பில்லாதவர்கள் என்றபடி; "ஈசனுக் கன்பில்லார்" (சித்தி) என்ற திருப்பாட்டுக் காண்க; இறைவன் அடிமைத் திறத்தன்றி வேறு உலகு உயிர்கள் மேற் செய்யும் குழைவுகள் பயனற்றவை; அவை பிறவிக்கே யேதுவாவன என்பது ஞான நூன்முடிபு; ஆதலின் அவை என்னே என்றார்;- (10) படி - திருமேனி நிறம்; சீரூரும்...ஆரூரன் - ஆரூரர் என்ற நம்பிகளின் பெயர்க்காரணம்; உயர் வானத்து உயர்வாரே - உயர் வானம் - சிவன் உலகம்; உயர்ந்த விண்ணுலகம் என்று கொண்டு அந்த விண்ணுலகினும் மேலாக என்றலுமாம். |
| தலவிசேடம் :- திருவன்பார்த்தான் பனங்காட்டூர் - என்னும் திருப்பனங்காடு - தொண்டை நாட்டின் 9-வது பதி; வன்பாக்கம் என்னும் கிராமத்தினை அடுத்து இருத்தலாலும், பனை தலமரமாதலாலும் இப்பெயர் பெற்றது; அகத்தியர் புலத்தியர் என்ற இரண்டு பேரிருடியரும் பூசித்த தலம்; அந்த இரண்டு சந்நிதிகளும் உள்ளன; (1) அகத்தியர் - பூசித்தது; சுவாமி - தாள்புரீசுரர் - பனங்காட்டு நாதர்; அம்மை - அமிர்தவல்லி; (2) இதன் வடகிழக்கில் புலத்தியர் பூசித்தது; சுவாமி - கிருபாநாதேசுரர்; அம்மை - கிருபாநாயகி; மரம் - பனை; தீர்த்தம் - ஜடாகங்கை; பதிகம் 1. |
| இது திருக்கச்சி ஏகம்பத்தினின்றும் தெற்கே நாலு நாழிகையில் ஐயன்குளத்தை யடைந்து, மேற்கே திரும்பி ஆற்காட்டுப் பாதையில், 4 நாழிகை சென்று அங்கு நின்றும் வடக்கில் 3/4 நாழிகை சென்று அடையத் தக்கது; பாலாறு, வேகவதி யிரண்டையும் இடையில் கடக்கவேண்டும். |
| திருமாற்பேறு - திருவல்லம் இந்த இரண்டு பதிகளின் நம்பிகள் பதிகங்கள் கிடைத்தில! |
3350 | தடுக்க லாகாப் பெருங்காதற் றலைநின் றருளுங் கண்ணப்பர் இடுக்கண் களைந்தாட் கொண்டருளு மிறைவர் மகிழ்ந்த காளத்தி அடுக்கல் சேர வணைந்துபணிந் தருளா லேறி யன்பாறு மடுப்பத் திருமுன் சென்றெய்தி மலைமேன் மருந்தை வணங்கினார். | |
| 196 |