| |
| (இ-ள்) அணியாரூர்...களி கூர - அழகிய திருவாரூரின் வீதிகளில் ஆட்கள் செல்லும் வழியுண்டாகப் பறைசாற்றுவிக்கப் பணித்தமையினாலே தத்தம் மனைகளை நிறைவித்தும் அவரவர்களுக்குள்ள பக்கவிடங்களிலெங்கும் நெற்கூடுகளை அளவின்றிக் கட்டி நகரமக்கள் மகிழ்ச்சி பெருகக் கண்டு; பரவையார்....பணிந்தார் - பரவையார் மணி ஆரம் பூண்ட மார்பினையுடைய வன்றொண்டரை வந்து பணிந்தனர். |
| (வி-ரை) மறுகதனில் ஆளியங்க - வீதிகளில் மக்கள் நடந்து செல்ல இயலாதபடி நென்மலை நிறைந்திருந்த நிலை நீங்கி ஆட்கள் செல்ல வழியுண்டாக; "நெறிபலவும் போக்கரிதாயிடக் கண்டு" (3181) என்றது காண்க. |
| பறையறைந்த பணி - முன் பாட்டிற் கூறிய கட்டளை. கணியாமல் - அளவில்லாமல் - எண்ண முடியாதபடி. நெற்கூடு கட்டி - நெல்லைக் கூடுகட்டிச் சேமித்து. நகர் களிகூர - நகர மக்கள் மகிழ; நகர் - நகர மக்கள் - ஆகு பெயர். நகர் களி கூரக் கண்டு என்க. "ஈத்துவக்கும் இன்பம்" (குறள்). |
| பரவையார்...பணிந்தார் - தாம் அவ்வின்பம் பெறுவதற்குக் காரணர் வன்றொண்டரேயாம் என்பது கருதிப் பணிந்தனர். |
| வன்றொண்டர் - இப்பெயராற் கூறுதல் பற்றி முன் உரைத்தமை பார்க்க. (3165 - 3167 - 3182). |
| 29 |
3184 | நம்பியா ரூரர்திரு வாரூரி னயந்துறைநாட் செம்பொற்புற் றிடங்கொண்டு வீற்றிருந்த செழுந்தேனைத் தம்பெரிய விருப்பினொடுந் தாழ்ந்துணர்வி னாற்பருகி இம்பருட னும்பர்களு மதிசயிப்ப வேத்தினார். | |
| 30 |
| (இ-ள்) நம்பி ஆரூரர்...நாள் - நம்பி ஆரூரர் திருவாரூரின்கண் விருப்பத்தோடும் தங்கி எழுந்தருளியிருந்த நாட்களிலே; செம்பொன்...தேனை - சிவந்த பொன் மயமாகிய புற்றினை இடமாகக் கொண்டு எழுந்தருளியிருந்த செழுந்தேனாகிய இறைவரை; தம் பெரிய....பருகி - தமது பெரிய விருப்பத்தினோடும் வணங்கி உணர்ச்சி உள்ளூர அருந்தி அநுபவித்து; இம்பருடன்....ஏத்தினார் - இம்மண்ணுலகத்தார்களோடு விண்ணுலகத்தார்களும் வியப்படையும்படி துதித்தருளியிருந்தனர். |
| (வி-ரை) புற்றிடங்கொண்டு...தேனை - புற்றிடங்கொண்ட பெருமானை; வன் மீகநாதரை; தேனை - இறைவரைத் தேன் என்றது உவமையாகுபெயர்; தேன் இனித்து - உடலுக்கு நலம் செய்வது போன்று உணர்வுக்குள் ஆனந்தமாகி இனித்து உயிருக்கு இன்பஞ் செய்பவர். "அந்த விடைமருதி லானந்தத்தேனிருந்த, பொந்தை" நினைத்தொறுங்காண்டொறும் பேசுந்தோறு மெப்போதும், அனைத்தெலும் புண்ணெகவானந்தத் தேன் சொரியும் குனிப்புடையான்" (திருவா); "தேனே" (தேவா). |
| உணர்வினாற் பருகி - தேன் என்றதற்கேற்பப் பருகி என்றார். தேனை வாயினாற் பருகுதல் போல இறைவராகிய தேனை உணர்வினால் அநுபவித்தல் என்பதாம்; ஈண்டுப் பருகுதல் அநுபவித்தல். |
| தாழ்ந்து - வணங்கி; தாழ்தல் - விரும்புதல் என்றலுமாம். படிதல் என்ற குறிப்பும்பட நின்றது; தேன் உள்ள இடத்தில் வண்டுகள் சென்று தாழ்ந்து மொய்த்து உண்ணுதல் போலே என்பது. |