| அணைந்து துதிசெய்ய - "தொழ எழுங்கால்" (3354) என்றபடி எழுந்து போந்து அணைந்து தொழுது துதிக்க என்க. |
| தொழுது - தொண்டர் கூட்டத்தினை நம்பிகள் தொழுது; அவர்கள் தொழுததனைக் கூறாது (நம்பிகள்) தொழுது என்றது, அவர்கள் தொழுததனைப் பற்றாமலே நம்பிகள் தொழுதனர் என்ற குறிப்புத் தருதற்கு. இவ்வாறே முன்னர்த் திருவாரூரிலும் "வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன் வன்றொண்ட ரஞ்சலி கூப்பி வந்து" (269) என்ற குறிப்பும் காண்க; திருத்தில்லையில் "முன்பி றைஞ்சின ரியாவரென் றறியா முறைமை யாலெதிர் வணங்கி" (244) என்றதும் கருதுக. |
| பரந்த கடல்போல் - உரு வுவமம்; பரப்புப் பொதுத் தன்மை. கடல்போல் ஒலி எழத் துதிசெய்ய என்று கூட்டி உரைத்தலுமாம்; இப்பொருட்கு வினைபற்றி யெழுந்த உவமையாகக் கொள்க. |
| ஏறு உடையவர் - ஏற்றினைக் கொடியாகவும் ஊர்தியாகவும் உடைய சிவபெருமான்; கொடி உயர்த்துதல் வெற்றிக்குறி யாதலின் கொற்ற - ஏறு என்றார். |
| 202 |
3357 | வானை யளக்குங் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்துவளர் கூனலிளவெண்பிறைச்சடையார்கோயில்வலங்கொண்டெதிர்குறுகி ஊனு முயிருங் கரைந்துருக வுச்சி குவித்த கையினுடன் ஆன காத லுடன்வீழ்ந்தா ராரா வன்பி னாரூரர். | |
| 203 |
| (இ-ள்.) வானை அளக்கும்....புகுந்து - ஆகாயத்தை அளப்பதுபோல நீண்டு மேலுயர்ந்த திருக்கோபுரத்தை மகிழ்ச்சியுடனே நிலமுற வீழ்ந்து வணங்கி உள்ளே புகுந்து; வளர்....எதிர்குறுகி - வளர்கின்ற வளைந்த இளைய வெள்ளிய பிறையினைச் சூடிய சடையினை உடைய இறைவரது திருக்கோயிலினுள்ளே திருமாளிகையினை வலமாக வந்து இறைவரது திருமுன்பு சார்ந்து; ஆரா அன்பின் ஆரூரர் - நிறைவு படாத பேரன்பின் பெருக்கினாலே நம்பியாரூரர்; ஊனுமுயிரும்....வீழ்ந்தார் - ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சியின்மேற் கூப்பிய கையினுடனே விளைந்த பெருவிப்பினோடும் நிலமுற வீழ்ந்தனர். |
| (வி-ரை.) அளத்தல் - அளப்பதுபோல் உயர்தல்; தற்குறிப்பேற்றம். |
| வளர் கூனல் - இள - வெண் - பிறை - வளர் - வளரும் தன்மை பெற்ற; கூனல் - வளைவுடைய; குறை நோயினால் உள்ளுடைந்து கூனியது போலும் என்றது குறிப்பு; கூன் - நல் என்று பிரித்து வளைவுடையதாயினும் நல்ல என்றலுமாம்; இளமை - இனிக் கலைபெற்று முதிரவுள்ள தன்மையும் புதிதின் தோன்றியமையும் குறித்தது; வெண்மை - மறைவு பெற்ற இருளினின்றும் நீங்கி விளங்கும் வெள்ளிய கோலம். |
| எதிர் - திருமுன்பு. |
| ஊனும் உயிரும் கரைந்து உருக - ஊண் உருகுதல் - அன்பின் விளைவாகிய மெய்ப்பாடு; உயிர் உருகுதல் - அன்பின் விளைவாகிய நிலை. |
| ஆனகாதல் - ஆதல் - விளைதல்; கூர்தல். |
| வீழ்ந்தார் - காதல் தள்ளியதுபோல நிலமிசை விழுந்து பணிந்தார். |
| அன்பின் வீழ்ந்தார் - அன்பினால் விழுந்தார் என்று கூட்டுக. அன்பினையுடைய ஆரூரர் என்று கூட்டினுமமையும். முன்பாட்டிற்போல ஈண்டும் பயனிலை முன் வந்தது ஆர்வத்தானாகிய விரைவுக் குறிப்பு. |
| 203 |