252திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  (இ-ள்.) அண்டர்...நம்பி - தேவதேவராகிய இறைவர் ஒரு வேதியராக வந்து நேரே ஆட்கொண்டருளிய நம்பிகள்; அங்கணரை.....போந்து - சிவபெருமானை முன்னைய முறைமையினாலே வணங்கிப் பாடித் துதித்துப் புறத்திற் போந்து; தொண்டு....செல்கின்றார் - பலவகையாலும் திருத்தொண்டுகள் செய்வார்களாகிய அடியவர்களது திருத்தொழில்களைக் கண்டு வணங்கிச் செல்கின்றாராய்; புண்டரீகத்தடம்...புகுந்தார் - தாமரைப் பொய்கைபோன்ற திருப்பூமண்ட பத்தினுள்ளே புகுந்தருளினர்.
  (வி-ரை.) அந்தணராய் ஆண்ட - கிழவேதியராக வந்து தடுத்தாட் கொண்டருளிய; தடுத்தாட்கொண்ட புராணம் பார்க்க.
  பண்டைமுறைமையாற் பணிதலாவது முன்னர்த் "திருப்பாதங் கூடுங்காலங்களி லணைந்து பரவிக் கும்பிட்டு" (3359) என்றவாறு அம்முறைமைப் படியே வழிபட்டு வருதல்; பண்டை முறைமையால் - முறை - ஊழ் - நியதி - எனக் கொண்டு சிவனருளிய முன்னை விதியினாலே என்றும், திருக்கயிலையிற் றொடர்ந்த மரபினாலே என்றும் கூடிய முற்குறிப்புக்களும் காண்க.
  முன்னர் "முந்தை விதியால்" (3378) என்றதும், "மேல் விதியால்" (3380) என்பதும் காண்க; முன்கூறியது அந்த ஒரு நாள் கோயிலுள் வந்து புகுந்த செயலுக்கும், ஈண்டுக்கூறுவது பணிந்து திருத்தொழில் கண்டு செல்கின்ற செயலுக்கும், மேற்கூறுதல் சங்கிலியாரைக் காணலுறுதற்கும் ஆமாதலின் கூறியது கூறலன்மையும் உணர்க; அன்று நிகழ்ந்த அச்செயல்கள் ஒவ்வொன்றும் முந்தை விதி செலுத்த நிகழ்ந்தன என்பதாம்.
  புறம் போந்து - இறைவரது திருமாளிகையின் புறத்தே சுற்றுமுள்ள புறத்திருமுற்றத்தினுள் சென்று.
  தொண்டு செய்வார் திருத்தொழில்கள் கண்டு தொழுது - இறைவர்க்காகச் செய்யும் திருத்தொண்டின் தொழில்களும் கண்டு வணங்கற்குரியன என்பது; இவைதிருநந்தனவனத் தொழில்கள்; திருமுற்றம் விளக்குதல்; திருப்பரிவட்டம், பொற்புடைப்பணிகள், விளக்குக்கள், முதலியவற்றை விளக்குதல், திருவுழவாரமிடுதல், முதலாகவரும் சரியைத்திருத்தொழில்கள்; இவை வெவ்வேறாகப் புறத்திரு முற்றத்தில் பல இடங்களில் நிகழ்வனவாகலின் தொழில்கள் என்று பன்மையாற் கூறியதுமன்றிக், கண்டு - தொழுது - என்று பிரித்துக்காட்டியருளிச், செல்கின்றார் என நிகழ்காலத்துத் தொடர்ந்த வினைமுற்றெச்சமுந் தந்தோதினார்.
  புண்டரீகத்தடம் நிகர் திருப்பூமண்டபம் - என்க; பற்பல வகைப்பூக்களும் சேர்ந்திருப்பதாலும், எங்கும் நீருடன் படுத்துக் குளிர்ந்திருப்பதாலும், திருப்பூமண்டபம் தாமரைத்தடம் போன்ற தென்றார், வினையும் மெய்யும் பற்றியெழுந்த உவமம். ஞானத்திருவாகிய அம்மையார் இருக்குமிடம் என்றதும் குறிப்பு.
  திருப்பணிகள் - என்பதும் பாடம்.
 

225

  திருப்பூமண்டபமும்; சங்கிலியாரைக் காணுதலும்
3380
அன்பு நாரா வஞ்செழுத்து நெஞ்சு தொடுக்க வலர்தொடுத்தே
என்புள் ளுருகு மடியாரைத் தொழுது நீங்கி வேறிடத்து
முன்பு போலத் திரைநீக்கி முதல்வர் சாத்தும் பணிகொடுத்து
மின்போன் மறையுஞ் சங்கிலியார் தம்மை விதியாற் கண்ணுற்றார்.
 

226