|
| (இ-ள்.) அன்பு...தொழுது நீங்கி - அன்பே நாராகத் திருவைந்தெழுத்தாகிய மலர்களை நெஞ்சம் தொடுக்கவும் தாம் கைகளால் அலர்களைத் தொடுத்தேஉள்ளே எலும்பும் உருக மனமுருக நிகழும் அடியார்களைத் (நம்பிகள் கண்டு) தொழுது நீங்கிப் பின்பு; வேறு இடத்து - அங்குப்பிறிதோர் தனியிடத்தில்; முன்புபோல....கொடுத்து - முன்பு போலத் திரையினை நீக்கி இறைவர்க்குச் சாத்துகின்ற பணிகளாகிய மாலைகளைக் கொடுத்து வந்து; மின்போல்....கண்ணுற்றார் - மின்னலைப் போலக் கணத்தில் மறையும் சங்கிலியம்மையாரை விதியினாலே கண்ணுற்றனர். |
| (வி-ரை.) அன்பு நாரா...அடியார் - இது திருப்பூமாலை தொடுக்கும் பணிசெய்யும் அடியாரியல்பைக் குறித்துக் காட்டியபடியும், அங்கு அந்த அடியார்கள் இத்தன்மையரா யிருந்தனர் என்றபடியுமாம். அன்புமாறாது மனத்தினுள் திருவைந்தெழுத்தை உரு எண்ணிக்கொண்டு வாய்பேசாமல் கைகளாற் பூமாலை தொடுத்தல் வேண்டும் மென்பது விதி; இதுபற்றி முன்னர், "வாயும்கட்டி" (559) என்றவிடத்தும், பிறாண்டு முரைத்தவை பார்க்க; அன்பு - நார் - என்பன ஒரு பொருட்கிளவி; நார் - ஈண்டு அன்புக்கும் பூத்தொடுக்கும் நாரினுக்கும் பொருந்தக் கூறியது சொல்லணிநயம். அன்புநார் என்றதற்கேற்ப ஐந்தெழுத்தாகிய மலர் என்க. |
| அஞ்செழுத்தும் நெஞ்சு தொடுத்தலாவது - நெஞ்சினால் திருவைந் தெழுத்தினையும் இடையறாது உருவெண்ணிக் கொண்டிருத்தல்; தியானித்தல்; இவ்வகை சிவாகமங்களுட் கண்டுகொள்க. இதுபற்றி முன்னர்ப் பலவிடத்தும் உரைக்கப்பட்டவையும் நினைவுகூர்க. தொடுத்தல் - பற்றிக் கொண்டிருத்தல் என்க. தொடுக்கத் - தொடுத்தே - சொற்பின்வருநிலை; தொடுத்தே - கைகளால் என்பது சொல்லெச்சம்; |
| என்பும் உள்ளுருகும் என்க. என்பும் எனச் சிறப்பும்மை விரிக்க; "அன்புள்ளுருகி யழுவ னாற்றுவன், என்பு முருக விராப்பக லேத்துவன்" (திருமந் - 9-332); "குரம்பைகொண் டின்றேன் பாய்த்தி நிரம்பிய, வற்புத மான வமுத தாரைகள், ஏற்புத் துளைதொறு மேற்றின னுருகுவ, துள்ளங் கொண்டோ ருருச் செய்தாங்கு" (திருவா - அண்டப்பகுதி). |
| அடியாரைத் தொழுது - முன்னர்த் "திருத்தொழில்கள் கண்டு தொழுது" (3379) என்றதும், ஈண்டு "தொடுக்கத் - தொடுத்தே - உருகும் அடியாரைத் - தொழுது" என்றதும் காண்க; இங்குத் தொழிலும் பயனும் தொழில் செய்வோரும் ஒருங்கே தொழுதற்குரியன. |
| தொழுது - நம்பிகள் என்ற எழுவாய் முன்பாட்டிலிருந்து வருவிக்க. |
| வேறிடத்து - திருப்பூமண்டபத்தினுள் முன்னர்க்கூறியபடி தொழுத அடியார்கள் தொழில் செய்த இடத்தினின்றும் வேறு தனியிடத்தில் என்க; "பூமண்ட பத்துத் திரைசூழ் ஒருபாற் சென்றிருந்து" (3376) என்றமையால் அங்கு இதுவேறு எவரும் பார்க்க முடியாத தனியிடம் என்றும், அதனைச் சுற்றிலும் திரை சூழ்ந்திருந்தது என்று அறிக. |
| முன்பு போல - முன்னாட்களின் வழக்கம் போல; திரைக்குள்ளாலிருந்து பணி செய்தலும், பணி முற்றியபின் காலங்களுக்கேற்பத் திரை நீக்கிப் பணிகள் கொடுத்துச் சென்று மறைதலும் போல; பணி - பணிசெய்த மாலைகள்; கொடுத்து - இறைவர்க்குச் சாத்தும்படி கொடுத்து. |
| நீக்கிக் - கொடுத்து - மறையும் - எனத் தொடர்ந்து கூறியது இச்செயல்கள் தொடர்ந்து விரைந்து நிகழ்ந்தன என்று குறித்தற்பொருட்டு; மின் போன் மறையும் என்ற உவமையும் இப்பொருட்டு; சடுதியில் தோன்றல் - நிற்றல் - மறைதல் என்ற |