[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்27

3189
பூந்தண் பனிநீர் கொடுசமைத்த பொருவில் விரைச்சந்தனக்கலவை
வாய்ந்த வகிலி னறுஞ்சாந்து வாச நிறைமான் மதச்சேறு
தோய்ந்த புகைநா வியினறுநெய் தூய பசுங்கர்ப் பூரமுடன்
ஏய்ந்த வடைக்கா யமுதினைய வெண்ணின்மணிப்பா சனத்தேந்தி,

35

3190
வேறு வேறு திருப்பள்ளித் தாமப் பணிகண் மிகவெடுத்து
மாறி லாத மணித்திருவா பரண வருக்கம் பலதாங்கி
ஈறில் விதத்துப் பரிவட்ட மூழி னிரைத்தே யெதிரிறைஞ்சி
ஆறு புனைந்தா ரடித்தொண்ட ரளவில் பூசை கொளவளித்தார்.

36

3188. (இ-ள்) தூய...இருக்க - தூய்மையாகிய மணிகளிழைத்த பொற்பீடத்திலே (நம்பிகள்) எழுந்தருளியிருக்க; தூநீரால்....விளக்கி - தூய்மையாகிய நீரினாலே அவரது செம்மை தரும் மலர் போன்ற திருவடிகளை விளக்கி; தெளித்துக்கொண்டு - அந்நீரினைத் தம்மேல் தெளித்துக் கொண்டு; அச்செழும் புனலால்....வீசி - அந்தச் செழிய நீரினாலே பொருந்திய ஒளியினையுடைய திருமாளிகை முழுதும் விளங்கும்படி வீசி; உள்ளம் களிப்ப...புரிவார் - மனமகிழப் பொருந்திய சிறப்பினையுடைய வழிபாட்டு முறைகளெல்லாவற்றையும் இயல்பினால் விதி முறைப்படி செய்வரராகி,

34

3189. (இ-ள்) வெளிப்படை. அழகிய குளிர்ச்சியுடைய பனிநீர் கொண்டு அரைத்த ஒப்பற்ற சந்தனக் கலவையும், பொருந்திய அகிற் கட்டையின் மணமுடைய சாந்தும், மணங் கமழும் கத்தூரிக் குழம்பும்; புகைதோய்ந்த மணமுடைய நாவிநெய்யும், தூயவாகிய பச்சைக்கற்பூரமும் ஆகிய இம்மெய்ப் பூச்சுக்களுடனே பொருந்தவரும் அடைக்காயமுதும் இவ்வாறாகிய பண்டங்களைத் தனித் தனி அளவில்லாத அழகிய தட்டுக்களில் எடுத்தேந்தியும்,

35

3190. (இ-ள்) வேறு...எடுத்து - வெவ்வேறு வகையாகிய திருப்பள்ளித் தாமத்துக்குரிய அலங்கார மாலை வகைகளை மிகவும் எடுத்தும்; மாறிலாத...தாங்கி - ஒப்பற்ற மணிகளாலாகிய திருவாபரண வகைகள் பலவற்றையும் தாங்கி எடுத்தும்; ஈறில்...நிரைத்தே - எல்லையில்லாத பலவிதங்களிலும் பரிவட்டங்களை முறைப்படி வரிசையாக வைத்தே; எதிரிரைஞ்சி - எதிரிலே நின்று வணங்கி; ஆறு...அளித்தார் - கங்கையை முடித்த சிவபெருமானது திருவடித் தொண்டர் அளவில்லாத பூசை முறைகளையும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தனர்.

36

இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.

குறிப்பு : - இவ்விடத்தில் புராணம் 34-வது பாட்டாக.
"ஆண்ட நம்பி யுடன்வந்த வன்ப ரோடும் புறத்தணைந்து
நீண்ட மதிட்கோ புரங்கடந்து நிரைமா ளிகைவீ தியிற் போந்து
பூண்ட காதன் மிகுதியினாற் புனைமங் கலதூ ரியமொலிப்ப
ஈண்டு புகழ்க்கோட் புலியார்மா ளிகையை யெய்தி யுள்ளணைந்தார்"
என்றதொரு பாட்டுக் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் முதற்பதிப்பிற் (1858) காணப்படுகின்றது. மற்ற பதிப்புக்களிலும், அவர்களது இரண்டாம் பதிப்பிலும் (1870) இது காணப்படவில்லை; இச்செய்யுள் இடைச் செருகலாயிருக்குமோ என்ற ஐயப்பாடுகளை எனது "சேக்கிழார்" என்ற நூலில் 211 - 212 பக்கங்களிற் சொல்லியிருக்கின்றேன்.