|
| என்...இவள்தன்னை - எனது அரிய உயிரினையும் அழகிய மலர்களையும் ஒரு சேரக் கட்டுகின்ற இவளை; பொன்னார்....புக்கார் - பொன் போன்ற நெருங்கிய கொன்றை மாலை சூடிய முடியினையுடைய இறைவரிடம் பெறுவேன் என்று சென்று மீண்டும் திருக்கோயிலினுள்ளே போய்ப் புகுந்தனர். |
| (வி-ரை.) சடையார்க்கு ஆளாம் விதியால் வாழும் எனை - முன்னை நிலையில் இறைவர் சாத்தும் மாலையும் நீறும் எடுத்துச் சாத்துகின்றஅணுக்கன் றொண்டராயிருந்த நம்பிகள் அவ்விதியின்படியே இப்பிறவியிலும் "மாதொரு பாக னார்க்கு வழி வழி யடிமை செய்யும், வேதியர் குலத்துட் டோன்றி" னார்; அன்றியும்அதன் மேல் தவநெறியே வேண்டியவாறு பெற்று அவ்விதியால் வாழ்கின்றார்; இவை யெல்லாம் உள் அடக்கி ஆளாம் விதியால் வாழும் எனை - என்றார். |
| தன் ஆரருள் - நிறைந்து பொருந்திய இறைவரது திருவருள்; பேறு - தவநெறியில் இடையறாது நின்றிடலும் வழி பட்டுவருதலும் முதலியவைகள் காண்க. |
| தவத்தால் அணையா வகை தடுத்தே - தவத்தால் - இப்பெண் தான் செய்யும் தவத்தினாலே பேற்றினை அணையா வகை என்று கூட்டுக; தவத்தினால் அணையா வகை தடுத்தலாவது, சங்கிலியாரது தவங்காரணமாக அவருடன் மணம் நிகழ, அது காரணமாக ஆளாம்விதியால் வாழும் சிவன்அடிமைத்திறத்திற்கு இடையூறுபட விளைத்தல். |
| உயிரும் மலரும் கூடப்பிணைத்தலாவது - இறைவர்க்காக மலர்களைக் கூட்டிக் கட்டுதல் போல என்னையும் தன் வசத்தாக்கிக் கட்டுப்படுத்துதல். |
| இவள் தன்னை இதழிமுடியார் பாற் பெறுவேன் - இவள் இதழி முடியாருடைய அடிமையும் அவரது உடைமையுமாதலின் இவளை ஆண்ட அவர்பால் பெறுவேன் என்றார். நம்பிகள் தாம் எதை வேண்டினும் அதைத், தமது முனைப்பு முயற்சியாற் பெறாது, சிவன் அருள்வழி நின்று பெறுவோர் என்றும், தமது உடல் பொருள் ஆவி மூன்றையும் சிவனுக்கு அர்ப்பணம் செய்தவர் என்றும், முன்னர்ப் பரவையாரையும், பொன்முதலியவற்றையும் சிவனருள் வழி நின்று பெற்றவர் என்றும் ஆதலின் சிவனிடம் போய் இவடன்னைப் பெறுவேன் என்று போனார் என்றும் ஈண்டு விசேட ஆராய்ச்சி செய்வாருமுண்டு; நம்பிகளைச் சுற்றம் முதலிய உலகச் சூழல்கள் எல்லாவற்றினின்றும் பிரித்துச் சிவபெருமான் தனக்கே யாட்செய்யும்படி கொண்டு விட்டமையால் அவருக்கு நேரும் அவை யாவும் சிவனருள் வழியே நேர்வன; அவற்றைச் சிவனே காட்டுவித்தலும் கூட்டுவித்தலும் வேண்டியது முறைமையாம்; "மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன்" என்றும், "திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமு மெனக்குன் சீருடைக் கழல்களென் றெண்ணி" (தேவா.) என்றும் வருவன நம்பிகளது சிவவாழ்க்கையின் நிலை; ஆதலின் சிவனிடம் பெறுவேன் என்று சென்றார் என்பதாம். உலகில் எல்லா வுயிர்க்கும் வரும் அனுபோகங்களையும் வினைப்பயன்களையும் கூட்டுவிப்பவன் சிவனேயாம். ஆனால், அவை அவ்வுண்மையினை உணராது யாவும் தமதுயிர்முயற்சியால் வருவன என்ற ஆணவ மறைப்பினால் மயங்கி உழல்வன; நம்பிகள் முற்றும் உண்மையுணர்ந்த நிலையினராதலின் சிவனே தருபவன்; அவனே தலைவன் என்று ஒழுகிவந்தனர் என்பதும் உணரத்தக்கது. மேல் "உனக்குத் தருகின்றோம்" (3389) என்பதுங் கருதுக. இனி, நம்பிகள் தம்பிரான் றோழராதலின் ஈண்டு நிகழ்ந்த காட்சி முதலிய வற்றின்பின், பாங்கற் கூட்டம் என்ற அகப்பொருட்டுறைகளின் |