|
| விளம்புவார் - என்பார் (3395) - பின்னும் - உரைப்பார் - என்றார் (3396) என்று கூட்டிமுடிக்க. |
| 240 |
| 3395. (வி-ரை.) எம்பிரானே! - தம்பிரானே - முன்னர் உடன்பாட்டுக் குறிப்பும், பின்னர் அதனில் சில மாறுபாட்டுக் குறிப்பும் உணர்த்துகின்றாராதலின் இரண்டு விளிகள் பட அமைத்துக் கூறினார்; இது கவிநயம். இமையோர் தம்பிரான் - என்று வேறுபடுத்திய குறிப்புக் காண்க. |
| அருளிச் செய்தார் - உம்மால் அருளிச் செய்யப்பட்டார்; செயப்பாட்டுவினை; மணம் பற்றி முன்னர்க் கைலையில் அருளிப்பாடும், இன்று ஈண்டுக் கனாவில் அருளிப்பாடும் உள்ளடக்கி நின்றது. |
| தக்க - விதி மணத்தால் - களவு கற்பு என்ற இருதிறத்தினுள் இது விதிமணம் எனப்படும். ஊரவரறிய ஈண்டுச் சிறப்பு உரிமையாளராகிய இறைவரால் தரப்பட்டு மேல்உரிய சடங்குடன் நிகழ்த்தப்படும் மணத்தின் மூலம்; "கண்ணிறைந்த பெருஞ் சிறப்பிற் கலியாணஞ் செய்தளித்தார்" (3420) என்பது காண்க. |
| என்னை நல்கியருளும் பொழுது - பெற்றோரையும் பதியையும் சுற்றத்தையும் விட்டுச் சிவனாரருளிற் சென்றமைந்தாராதலின் அவரை மணஞ் செய்து கொடுக்கும் உரிமை பொதுவாயும் சிறப்பாயும் திருஒற்றியூர் இறைவர்பால தாயிற்று என்பார் நல்கியருளும் என்றார்; சிவனடிமையேயாந் திறம். |
| இமயக் கொம்பின் ஆகங்கொண்டீர்க்கு என்றும், மேல் "எம்பிராட்டி திருமுலை தோய் - மார்பீர்!" என்றும் இக்குறிப்புப்படக் கூறுதல் (3396) உமையம்மையாரை நீர்பிரியாது ஒருபாகத்து வைத்தல் போல் எனது நாயகராகும் நம்பியும் என்னைப் பிரியாதுடனிருக்க வைத்தல் முறை என்பது குறிப்பு. முன்னர் (3386) நம்பிகள் இவ்வாறே இறைவர்பால் வைத்துப் போற்றும் குறிப்பும் காண்க. |
| கூறும் திறன் ஒன்று உளது - திருமணத்தின் முன்னர்க் குறிக்கொள்ள வேண்டிக் கூறும் செய்தி ஒன்றுண்டு என்பதாம். |
| 241 |
| 3396. (வி-ரை.) பின்னும் பின்னல் - சொற்பின் வருநிலை என்ற சொல்லணி; பின்னல் - பின்னியது போன்று புரித்த சடை; பின்னும் - உரைப்பார் என்று கூட்டுக; பின்னும் - மேலும் தொடர்ந்து, |
| பெருக நாணி - மிகவும் நாணமடைந்து; நாண் - பெண்மையின் இயல்புக்குணங்கள் நான்கனுள் முதலாவது; தமது நாயகர் தம்மைப் பிரியாது தமக்கே உரியராய் உடனே இருக்க விரும்புதல் பெண்மையின் இயல்புக் குணம்; ஆயின், அதனைப் பிறர்பால் அறிவித்தலும், அதற்குத் துணை செய்யக் குறிப்பாற் கூறுதலன்றி வெளிப்படையாய்க் கூறுதலும் நாணத்தால் பெண்கள்செய்யார்; முன்னர் "மறைவிட் டியம்புவார்" (3367) என்ற குறிப்பும் காண்க. ஈண்டு அதனைக் குறிப்பாற் கூறும் திறம் மேற்காண்க. எம்பிராட்டி - முன்னைநிலையின் றொண்டின் உரிமை. |
| மன்னும்....அறிந்தருளும் - திருவாரூரில் மிகவும் மகிழ்ந்துறைவது என்னும் தன்மையறிந்து அதற்கு ஏற்றபடி நெறிசெய்து அருளுவீர் என்றதனால் அவரது பிரிவும், திருஆரூரில் வேறுமொரு நாயகிக்கு உரியராந்தன்மையும், பிரியாமைக்குரிய நிபந்தனை அமைக்க வேண்டுதலும் குறிப்பால் உணர்த்திய நிலை கண்டு கொள்க. அதனை அவ்வாறே உட்கொண்ட இறைவர், மேல் "உனை இகந்து போகாமைக்கொரு சபதம்...அவன் செய்வான்" (3397) என்றருளுவதும் காண்க. |