|
| முன்னும், இனியும் இப்பெயராற் கூறும் குறிப்புப்பற்றி முன் உரைக்கப்பட்டது. (3390 - 3399 - 3401). |
| வன்றொண்டர்...உணர்ந்தருளி - நிலைமை யாவது இறைவர்பதிகள் சென்று சென்று குறிப்பிட்டும் பாடியும் வரும் வாழ்க்கை; - "பிறபதியும் நயந்த கோலஞ்சென்று கும்பிடவே கடவேனுக்கு" (3401). |
| உணர்ந்தருளி - எல்லாம் அறிந்த இறைவரை இங்கு உணர்ந்தருளி என்றருளியது என்னை? எனின், எல்லாமுணர்தல் பொதுவுணர்வு; ஈண்டுக் கூறியவுணர்வு ஆன்மாக்களின் அறிவிச்சை செயல்களைத் தொழிற் படுத்தற்காக இறைவர் தமது சத்தியை அதிட்டித்து நின்று மேற்கொள்ளும் சிறப்பு உணர்வு. |
| உரைசெய்வார் - என அருளி - என்று கூட்டுக. |
| இகந்து போகாமைக்கு - இகத்தல் - நீத்தல் - விடுதல்; போகாமைக்கு - போகாதிருத்தற் பொருட்டு. |
| அற்ற முறு நிலைமையினால் - தனித்த நிலைமை; அந்தரங்கமாகிய உண்மைநிலை. "அற்ற மெனக்கருள் புரிந்த" (3406). அற்றம் - வருத்தம் எனக்கொண்டு, இதனைச் சங்கிலியார்பாற் சேர்த்தி நீ வருந்தும் நிலையினாலே என்றுரைப்பர் இராமலிங்கத் தம்பிரானார்; அற்றம் - விருப்பம் - காதல் எனக்கொண்டு உன்மேல்காதல் கொண்ட காரணத்தால் என்றுதும் குறிப்பாம் என்பர் இராமநாதச் செட்டியார். "வம்பணிமென் முலையவர்க்கு மனங்கொடுத்த" என்பது காண்க. |
| அருளி - மீண்டருளி - அணைந்து - அருள - (3398) வன்றொண்டர் வணங்கி - என்ன - செய்க என - அருள் செய்வதார் (3399) என்று இம்மூன்று பாட்டுக்களையும் கூட்டி வினை முடிபு கொள்க. |
| 243 |
| 3398. (வி-ரை.) வேயனைய தோளியார் - "வேயனைய தோளுமை" - என்னும் தேவார ஆட்சி போற்றப்பட்டது; உமையம்மையாருக்குத் தொண்டு செய்தலின் அத்தன்மை பெற்றவர் என்ற குறிப்புமாம். |
| மீண்டருளி - அணைந்து - அங்கு நின்றும் மறைந்து மறைந்து இங்கு வெளிப்பட்டு; மீளுதலும் அணைதலும் இறைவர்பாற் கூறுதல் உபசாரம். |
| தூய மனம் - பின்னர் (3402) நம்பிகள் இறைவர்பால் வேண்டிக்கொள்வது பற்றி, நம்பிகள்பால் வேறுபடக் கூறி அபசாரப்படுவாரு முளராதலின், அவர்கள் அவ்வாறு அபசாரப்பட்டுச் சிவாபராதத்துக் காளாகி நரகிலழுந்தா வண்ணம் கருணையினால் ஆசிரியர் எச்சரித்துத் தெருட்டியருளியவாறு; நம்பிகளது திருவுள்ளம் எவ்விதமாகிய மாசுமற்று விளங்குவது என்க. இதுபற்றி மேலும் (3402) காண்க. |
| தோழனார் - உயிர்ப்பாங்கர்; "முடியார்பாற் பெறுவேன்" (3384); "நண்பால்" (3387) என்ற விடங்களிலுரைத்தவை பார்க்க. ஈண்டும், பின்னர்ப் பரவையார் திறத்தும் இறைவர் நிகழ்த்தும் அருள் விளையாடல்களைப் பற்றிப் பிழைபடக் கூறுவார் இத்தன்மையினைக் குறிக்கொள்ளக் கடவர். ஈண்டு இப்புராணமுடைய ஏயர்கோன் கலிக்காமர் சரிதவரலாற்றின் குறிப்பும் கண்டு கொள்க. |
| உன்னால் அமைப்பது ஒரு குறை உளது - என்க. |
| அமைப்பது - நிறைவேறச் செய்வது; குறை - மேற் செய்ய நின்ற கடன்; அதற்கு - அது முடிப்பதற்கு; ஒருகுறை - என்றதனால் அவ்வளவு மட்டிலன்றி வேறு தடையிலது என்பதும், மற்று அவளது இசைவும் குறிப்பிற் கூறியவாறு கண்டுகொள்க. மேலும் "குறை" (3398) என்பது காண்க. |
| 244 |