[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்281

  பன்மையிற் கூறாது அருளிச் செய்தது என ஒருமையாற் கூறினார்; அவை எல்லாம் அவரது ஒரே பொருள்பற்றிய அருளிப்பாடு என்னும் ஒன்றினுள் அடங்கி நிற்பது குறிக்க.
  பாங்கு - முறைமை; பாங்கு அறிய - பாங்காகிய (பாங்கி) தன்மையுடன் உட்கொள்ள என்ற குறிப்புமாம்.
  பயம் - அதிசயம் - மகிழ்ச்சி - இறைவரது அருட்செயல்களைப் பற்றிய நிகழ்ச்சிகளாதலின் அச்சத்துடன் மேற்கொள்ள வேண்டுதலால் பயமும்; பெறற்கரிய பேர் அருளின் றிறங் கண்டாராதலின் அதிசயமும்; தமது தலைவிக்குத் திருமணம் நிகழவரும் சிறப்பில் அவர்க்குத் தாம் பணி செய்யப் பெறுவதற்கு மகிழ்ச்சியும் கொண்டனர்.
  பணிந்தார் - சங்கிலியார் நேரே இறைவரது திருவருளுக் கிலக்காய் நின்ற பெருமைபற்றிப் பணிந்தார்.
 

254

3409
சேயிழையார் திருப்பள்ளி யெழுச்சிக்கு மலர்தொடுக்குந்
தூயபணிப் பொழுதாகத் தொழில்புரிவா ருடன்போதக்,
கோயிலின்முன் காலமது வாகவே குறித்தணைந்தார்
ஆயசப தஞ்செய்ய வரவுபார்த் தாரூரர்.
 

255

  (இ-ள்.) திருப்பள்ளி எழுச்சிக்கு....பொழுதாக - இறைவரது திருப்பள்ளி யெழுச்சிக்கு உரிய மலர் மாலைகள் சாத்தத் தொடுக்கும் தூய திருப்பணிக்குரிய பொழுது ஆயினமையால்; சேயிழையார் - சங்கிலியார்; தொழில் புரிவார் உடன்போத - உடன் கூடித் தொழில் புரியும் சேடியர்கள் தம்முடனே செல்ல; கோயிலின் முன் திருக்கோயிலின் முன்பு; ஆரூரர் - நம்பிகள்; வரவுபார்த்து - சங்கிலியாரின் வரவைப் பார்த்து; ஆயசபதம் செய்ய - முன்னர் இறைவரது ஆணையினாலாகிய சபதத்தினைச் செய்வதற்காக; காலமது.....அணைந்தார் - ஏற்றகாலம் அதுவேயாக எண்ணிக் குறித்து வந்தணைந்தனர்.
  (வி-ரை.) திருப்பள்ளி யெழுச்சிக்கு - திருப்பள்ளி எழுச்சி என்னும் வழிபாட்டுக் காலத்துக்குரிய; இது வைகறைப் பொழுதிற் செய்யப்படுவது; இது பற்றி முன் ஆளுடைய அரசுகள் அருள்பெறு நேரமாகிய திருப்பள்ளி எழுச்சியினைப் பற்றி உரைத்தவை பார்க்க. (1333)
  திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் - அவ்வக் காலத்துக்கு ஏற்றனவாய் விதிக்கப்பட்ட அவ்வம்மலர்களைத் தொடுக்க வேண்டுதலின் ஈண்டுத் திருப்பள்ளி எழுச்சிக்கு என்றார்.
  தூயபணி - மலர்தொடுத்தல் மிகத்தூய்மையுடைய பணி என்பதாம். இது பற்றி முன் முருகநாயனார் புராணத்தும்,எறிபத்த நாயனார் புராணத்தும், முன் 3380லும் உரைத்தவை பார்க்க.
  பணிப்பொழுது ஆக - பணி செய்தற்கு உரிய பொழுது வர.
  தொழில் புரிவார் - ஏவலராகிய சேடியர்கள்; இவர்கள் சங்கிலியாரது கனா நிகழ்ச்சியை அவர் சொல்லக் கேட்டவர்கள்; 3411 பார்க்க.
  சேயிழையார் - போத - என்று கூட்டுக சேயிழையார் கோயிலின்முன் போத என்றும், ஆரூரர் - கோயிலின்முன் அணைந்தார் என்றும் இருவழியும் கூட்டுக; இருதிறமும் அங்குச் சந்திப்பது அவ்வோரிடமாதலின், அது குறிக்கும் கோயிலின் முன் என்றதொரு சொற்றொடர் ஈரிடத்தும் இயையும்படி இடையில் வைத்தார்