282திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  காலமது ஆகவே குறித்து - "இவ்விரவே செய்க" (3399) என்று இறைவர் அருளினாராதலின், அதற்கிசைந்த நம்பிகள், நங்கை சங்கிலியாரைச் சந்தித்துக் கேட்டற்கும், இரவு கழியு முன் சபதம் செய்தற்கும் உரிய காலம் அதுவே பொருந்தியதென்று குறிவைத்து; முன்னராயின் சங்கிலியார் கன்னிமாடத்திருப் பாராதலின் அங்குச் செல்ல இயலாது; பின்னராயின் இரவு கழிந்துவிடும்; ஆதலின் ஏற்றகாலம் அதுவே என்று குறிவைத்தனர் என்க; இனம் பற்றி இடமுமதுவாகவே குறித்து என்க. நம்பிகள் இறைவர்பால் வேண்டிக் கொண்ட செய்தியும் குறிக்கொண்டு என்பது.
  வரவு பார்த்து - சங்கிலியார் மலர் தொடுக்கும் பணிக்கும் வரும் வரவினை எதிர் பார்த்து; சங்கிலியார் வருமுன்பே நம்பிகள் அணைந்தனர் என்க. மேற்பாட்டுப் பார்க்க.
  அணைந்தார் - ஆரூரர் - வினைமுற்று முன் வந்தது விரைவுக் குறிப்பு.
 

255

3410
நின்றவரங் கெதிர்வந்த நேரிழையார் தம்மருங்கு
சென்றணைந்து தம்பெருமான் றிருவருளின் றிறங்கூற,
மின்றயங்கு நுண்ணிடையார் விதியுடன்பா டெதிர்விளம்பார்
ஒன்றியநா ணொடுமடவா ருடனொதுங்கி யுட்புகுந்தார்.
 

256

  (இ-ள்.) நின்றவர்....கூற - வரபுபார்த்து நின்றவராகிய நம்பிகள் அங்கு எதிரில் வந்த சங்கிலியார் பக்கத்திற் சென்று சேர்ந்து தமது இறைவரது திருவருளின் திறங்களை எடுத்துச் சொல்ல; மின் தயங்கு....விளம்பார் - மின் போலத்துவளும் நுண்ணிய இடையினையுடைய சங்கிலியார் அவ்வாறு விதித்ததற்குத் தமது உடன்பாட்டினை அவர் எதிரே கூறாராகி; ஒன்றிய....புகுந்தார் - இயல்பிற் பொருந்திய நாணத்துடன் சேடியர்களுடன் கூடி ஒதுங்கிச் சென்று கோயிலினுள்ளே புகுந்தனர்.
  (வி-ரை.) நின்றவர் - முன்கூறியபடி சங்கிலியாரது வரவை எதிர்பார்த்து நின்றவராகிய நம்பிகள்.
  எதிர்வந்த நேரிழையார் தம்மருங்கு சென்றணைந்து - தம் எதிரில் முன்பு வந்த சங்கிலியாரிடம் தம் கருத்தினைக் கூறி வெளிப்படுக்கும் அளவு அணுகி; இதனால் நம்பிகள் அவர்வரு முன்னரே அங்குச் சரர்ந்தனர் என்பதும், அவர் வரும் போது நெருங்காது வழிதந்து ஒருபுறம் ஒதுங்க வேண்டியவர் இச் செய்தி அறிவித்து இசைவுபெற்று அவர் முன்பு சபதம் செய்ய வேண்டிய நிலையில் அவ்வளவிற்கு அவர் மருங்கு சென்றணைந்தனர் என்றும், "அவள் முன்பு சென்றுகிடைத்திவ்விரவே செய்க" (3599) என்று இறைவர் ஆணையிட்டருளினராதலின் தாமே முற்படச் சென்று பேசத் தொடங்கினர் என்றும் கொள்க.
  தம் பெருமான் றிருவருளின் திறம் கூற திறம் - சபதம் செய்க என்ற ஆணையும், மற்றும் அதன் வரலாறும்; இருவர்க்கும் பெருமானாதலிற் தம் பெருமான் என்றார். இத்திறம் தமது செயலாயினும் இறைவர் அருளிய வழி நிகழ்வது என்பார் தம்பெருமான் திருவருளின் றிறம் என்று அவர்பாற் சார்த்திக் கூறினார்.
  மின்தயங்கும் நுண்ணிடையார் - மின்போலத் துவளும் நுண்ணிய இடையினையுடைய சங்கிலியார்; இடை, மின்போலத் துவளுதலும், சிறிதாய் இருந்தலும் பெண்களின் உடற்கூற்றின் உயர்ந்த இலக்கணம் என்ப. தயங்குதல் விளங்குதல்; மயங்