|
| திங்கள் முடியார் திருமுன் - முன்னர் இறைவரிடம் தாம் வேண்டிக் கொண்ட தன் குறிப்பு உள்வைத்துக் கூறியபடி. (3402) |
| கனவுரைப்பக் கேட்ட தாதியர் - இது முன் உரைக்கப்பட்டது. 3407, 3408 பார்க்க. |
| ஆரூரர் - செப்பத் - தாதியர் - மொழி வா(ராய்) - என்ன, வன்றொண்டர் - என்று கூறுதலும் (3412), என - எனத்துணிந்து - என - போய் அணைந்தா(ராய்); காண - வலம்வந்து - என நின்று - (அப்) புரவலனார் விளம்பினார் (3414) என்று இந்நான்கு பாட்டுக்களையும் கூட்டி முடித்துக் கொள்க. |
| இவை குறையுற வுணர்தல் முதலிய அகப்பொருட்(டுறைகளின்) இயல்பின் வருதல் காண்க. |
| 257 |
| 3412. (வி-ரை.) எம்பெருமான்! - இது நம்பிகளை நோக்கித் தாதியர் விளித்தது; தமது தலைவிக்கு நாயகராக வருபவர் என அறிந்தாராதலின் தங்களுக்குப் பெருமான் எனக் கூறியது அக்குறிப்பு. இது அண்மைவிளி யாதலின் இயல்பாயிற்று. தலைவியினது கருத்தினைக் குறிப்பாலுணர்த்தியபடி காண்க. |
| இதற்காக இமையவர்கள் தம்பெருமான் - திருமுன்பு - சாற்றுவது தகாது - இது மிகச் சிறிய காரியம்; பெருமான் திருமுன்பு - அது மிகப் பெரிய உயர்ந்த இடம்; இச்சிறிய மொழிகளை அப்பெரிய திருமுன்பு சொல்வது தகுதியன்று - ஏற்றதன்று என்பவை குறிப்பு. இறைவர் "அங்கு நமக் கெதிர்செய்யும் அதற்கு நீ இசையாதே" என்று முன் கட்டளை யிட்டதனைக் (3405) கேட்டு அறிந்துள்ளாராதலின் அவ்விடத்தினை மாற்றுதற்குத் தாதியர் கைக்கொண்ட உபாயம் இது; சபதம் செய்யும் இடம் எங்காயினும் அது செய்யும் செயலுக்கு உடன்பட்ட குறிப்பினாலும் பின்னர் "மகிழ்க்கீழே அமையு" மெனக் கூறலானும் தலைவியாரது உடன்பாடு குறிப்பா லுணர்த்தப்பட்டது காண்க. இவ்வாறுணர்த்துதலும், தலைவி தாமே கூறாது தோழியர் மூலம் உணர்த்துதலும் தமிழிலக்கணத்துள் அகப்பொருளி னியலென்க. |
| நாதர்செய லறியாதே - உயர்ந்த தூய இடமாகிய இறைவர் திருமுன்பில் இது சாற்றத் தகாதென்றமையால் இதில் வேறுமொரு கருத்து இருத்தல் கூடுமென்பதுய்த்துணரத் தக்கது. என்னை? யாவரும் தத்தங் காரியத்தின் நலங் கருதி மிக உயர்வாகிய பொருளினையே நாடுவது இயல்பாதலான்; அன்றியும் எவ்விடமேயாயினும் இறைவர் எங்கும் நிறைந்துள்ளவராதலின் எவ்விடமும் அவர் திருமுன்பேயாதலும் உண்மை; இங்ஙனம் உய்த்துணரத் தக்கதாயினும், நம்பிகள் இவர் மொழியினுள் நாதர் செயலினை அறியாது, மேல் "செய்வது யானெங்கு?" என்று வினவியது மேல் விளைவு கருதி இறைவரது திரோதான சத்தியின் செயலாலென்க. |
| எங்கு - வேறு எங்கு? வேறு என்பது (இசையெச்சம்.) |
| கொம்பு அனையீர் - கொம்பு - பூங்கொம்பு. |
| 258 |
| 3413. (வி-ரை.) மாதரவர் - முன்கூறியவாறு மொழிந்த தாதியர்; அவர் - முன்னறி சுட்டு. |
| மகிழ்க்கீழே அமையும் - அமையும் - செய்தல் அமையும். அமையும் - சாலும் - போதும்; முன் இதற்காக -(3412) என்று இதனைச் சிறியகாரியம் என்ற குறிப்புப்படக் கூறியதனைத் தொடர்ந்து அதற் கிதுபோதும் என்ற பொருள்படக் கூறியதும் காண்க. மகிழ் - மகிழமரம். (3402) |