292திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  இம்பர் ஞாலத்திடை - மணவினை செய்து - அளிப்பீர் - திருக்கயிலையில் நம்பிகள் "அவர் மேன்மனம் போக்கிடக், காதன் மாதருங் காட்சியிற் கண்ணினார்" (35) என்ற வரலாற்றின்படி பெறநின்ற செயலாய் இவ்வுலகில் மணவினை நிகழச் செய்து என்றபடி.
  நம் ஏவலினால் அளிப்பீர் - என்றது, "திருவொற்றியூர் அணைந்து சிவனாரருளிற் செல்வன்" (3367), "செல்கதியும் கண்ணார் நுதலார் திருவருளாலாக" (3372) என்று நம்பால் தம்மை ஒப்புவித்தனராதலின் சங்கிலியாரை மணஞ் செய்தளிப்பது நமது கடன்; ஆதலின், நம் ஏவலினால் நீர் அளிப்பீர் என்றபடியாம்.
  மணவினை செய்து - கற்பியலின் விதித்தபடி நூல் விதிச் சடங்குகள் எல்லாம் செய்து.
  உம்பர் வாழ் உலகறிய - மணவிதியின்படி உள்ள சடங்குகளில் தீக்கடவுள் முன்னர் உரிய அவ்வத் தேவர்களை அவ்வவர்க்கும் உரிய மந்திரங்களால் விளித்து அவிகொடுத்து வேள்வி நிகழ்த்துதலால் உம்பர் அறிய என்றார்.
  உம்பரும் வாழ் உலகும் அறிய என்றுபிரித்து தேவர்களும் இங்கு வாழும் நிலவுலகத்தவரும் அறியும்படி என்றுரைக்கவும் நின்றது.
  உணர்த்துதல் - துயிலினிடையே உணரச் செய்து கட்டளை யிடுதல்.
  தலைமேற் கொண்டு எழுவார் - தலைமேற் கொள்ளுதல் - முதற் பெருங்கடமையாகத் தாங்குதல்; எழுதல் - முயலுதல்; "உடனெழுந்தார்,"
 

265

  3420. (வி-ரை.) மண்ணிறைந்த பெருஞ் செல்வம் - உலகிற் சிறந்த செல்வங்களை உடைய நகரச் சிறப்பு. "சுற்றிவண டியாழ்செயுஞ் சோலையுங் காவுந்துதைந்திலங்கு, பெற்றிகண் டால்மற்றி யாவருங் கொள்வர் பிறரிடை நீ, ஒற்றி கொண்டாயொற்றி யூரையுங் கைவிட் டுறுமென்றெண்ணி, விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப தில்லிடம் வேதியனே" (திருவிருத்தம்) என்று அரசுகள் சுவைபட அருளுதல் காண்க.
  எண்ணிறைந்த - இறைவரது திருவருள் தம் எண்ணத்தில் நிறைவித்த
  தொண்டர் எழிற்பதியோருடன் ஈண்டி - தொண்டர்கள் ஏனைய அந்நகர மாந்தருடன் பெருகக் கூடி. தொண்டர் வேறு; பதியோர் வேறு; தொண்டர் - இறைவரால் உணர்த்தப்பட்டோர். (3418) பதியோர் - மணவினைக் குடனிருந்து காரியம் செய்யும் ஊரவர்.
  உம்பர் பூமழை பொழிய - "உம்பர்வா ழுலகறிய" (3419) மணவினைகள் செய்யப்படுதலின் அவர்கள் ஏற்றுப் பூமழை பொழிந்தனர்.
  கண்ணிறைந்த பெருஞ்சிறப்பு - மணவினை செய்யும் அணிகள் முதலிய சிறப்புக்கள்.
  கலியாணம் - சுபங்களிற் சிறந்தது என்பது பெயர்ப் பொருள்; கல்யாண குணங்கள் என்புழிப் போல; அது மணத்திற்காகி வந்தது; இவ்வாறே பரவையார் திருமணமும் இறைவரது ஆணையினால் அடியார்கள் கூடிச் செய்தமை முன்உரைக்கப்பட்டது ஈண்டு நினைவு கூர்தற்பாலது (324 - 326)
  எயிற்பதியோர் - செய்தமைத்தார் - என்பனவும் பாடங்கள்.
 

266

3421
பண்டுநிகழ் பான்மையினாற் பசுபதிதன் னருளாலே
வண்டமர்பூங் குழலாரை மணம்புணர்ந்த வன்றொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கொண்ட தூநலத்தைக்
கண்டுகேட் டுண்டுயிர்த்துற் றமர்ந்திருந்தார் காதலினால்.
 

267