| |
| தொழுது உய்ய - என்றும் கூறியன இவர்களைத் திருமணஞ் செய்து உரிமைப் பொருளாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்னும் குறிப்புடையன; உய்ய - இவர்களை உய்யச் செய்ய. |
| "தொடிசேர்" மக்கள் எனக்கொண்டு - இது நம்பிகள் திருவுள்ளத்துக் கொண்ட துணிபு. அதன் விளைவாகிய சொல்லும் செயலும் மேல்வருவன காண்க. கொண்டு - உட்கொண்டு - துணிந்து. |
| தொடிசேர் தளிர்க் கையிவர் - இயற்கை நலமும் செயற்கை வளமும் இருவர்பாலும் ஒன்று போல அமைந்தமை குறிப்பு. தொடி - கைவளைவகை; தளிர் - மாந்தளிர் போன்ற; செம்மை மென்மை முதலிய பண்புகள் கொண்ட ; தூய - ழுஎழு பிறப்புந் தீயவை பழிபிறங்காப், பண்புடை மக்கட் பெறின்"(குறள்) என்றபடி, பிறந்தகம், புக்ககம் என்ற இரண்டிடமும் தூய்மையாகும்படி வாழ்வளிக்கவல்ல என்ற குறிப்பு. |
| அப்படியே - மனத்துட்கொண்டபடியே; துணிந்தவாறே. |
| மகண்மையாக் கொண்டார் - தாம் பெற்ற மக்களேயாகும் முறைமை தந்து ஏற்றுக்கொண்டார். "பிறப்பித்தெடுத்த பிதாவாக" (3196) ஒருவர் தந்த கொடைப்பொருளைப் பெறுபவர் ஏற்றுக் கொண்டாலன்றிக் கொடை முற்றுப் பெறுதலில்லை என்பது நூன்முறையாதலின் கொண்டார் என்றார். |
| மகண்மை - மகளாராந் தன்மை; மகன்மை - மகனாந்தன்மை என்பதுபோல; "அன்பினான் மகன்மை கொண்டார்" (151); மகண்மையா - ஈன்ற பெண்மக்கள் முறைமையாக; ஆ - ஆக. |
| அப்படியே - அரன்போல வேண்டுபவர் வேண்டியதே ஈதல் அன்றோ அடியவர்க்கும் கடன்? எனில், கோட்புலியார் சொன்னவாறே என்ற குறிப்புமாம். என்னை? அடிமையாகக் கொண்டருளுதலும், மலர்த்தாள் தொழுதுய்யச் செய்தலும் என்றிரண்டுமே அவர் வேண்டினார்; அவ்விரண்டு தன்மைகளும் மகண்மை (புதல்வியர்) முறையினும் பொருந்துமாகலான் என்க. |
| பரவையார்தங் கொழுநனார் - முன்னமே பரவையார்தங் கொழுநனாராதலின் கோட்புலியார் உட்கொண்டபடி மணத்தால் இவர்களை ஏற்கும் நிலையில்லை என்று காரணக் குறிப்புப்படக் கூறிய கவிநலமும் காண்க; பின்னர்ச் சங்கிலியார் வரலாறு வேறு; அது பண்டை விதியின் விளைவு என்க. மறையவர்க்கு, மறையவர் மரபேயன்றி ஏனை எல்லா வருணத்தாருள்ளும் மணம் நிகழ்வது முந்தைநாள் நீதிநூல் மரபு என்பது ஈண்டு நினைவு கூர்தற்பாலது. |
| 39 |
3194 | கோதை சூழ்ந்த சூழலாரைக் குறங்கின் வைத்துக் கொண்டிருந்து காத னிறைந்த புதல்வியராங் கருத்துட் கசிவா லணைத்துச்சி மீது கண்ணீர் விழமோந்து வேண்ட வனவுங் கொடுத்தருளி நாதர் கோயில் சென்றடைந்தார் நம்பி தம்பி ரான்றோழர். | |
| 40 |
| (இ-ள்) கோதை...வைத்துக்கொண்டிருந்து - மாலையணிந்த கூந்தலையுடைய அப்பெண்களை மடியில் வைத்துக் கொண்டிருந்து; காதல்...மோந்து - மிக்க அன்பு நிறைந்த புதல்வியர்களாகும் கருத்தினாலே உள்ளங் கசிய அணைத்து உச்சிமேல் தமது கண்ணீர் விழும்படி உச்சிமோந்து; வேண்டுவனவும் கொடுத்தருளி - அவர்க்குத் தாம் வேண்டுவனவற்றையுங் கொடுத்தருளி; நாதர்...தோழர் - நம்பியாரூரராகிய தம்பிரான்றோழர் இறைவரது திருக்கோயிலினைச் சென்றடைந்தருளினர். |