|
| பிறந்த தன்மைக்கு மாறுபாடின்றி ஏற்றவாறே வளர்ச்சியும் பெற்று என்றது குறிப்பு. கொழுமை - மாந்திய முதலிய வளங்களை உடைமை. |
| அங்கு அணைய - அங்குத் தொண்டை நாட்டில் திருவொற்றியூரில் அத்தென்றல் வந்து சார; அணைய - நினைந்தார் - என்று கூட்டுக; இவ்வாறன்றி அங்கு - திருவாரூரில் என்று கொண்டு, அங்குத் தென்றல் அணைய அக்காலத்தில் வசந்தம் கொண்டருளும் வகை என்றுரைப்பாருமுளர். |
| திருவாரூர் அணிவீதி அழகர் - வீதி விடங்கப் பெருமான்; தியாகேசர். |
| மங்கலநாள் வசந்தம் எதிர்கொண்டருளும் - மங்கலநாள் திருவிழா, வசந்தம் அத்திருவிழாவில் ஆறாவது திருநாள் என்பர். |
| அங்கணைய - வகை நினைந்தார் - தென்றல் - பருவத்தையும் நீர் நாட்டையும் திருவாரூரினையும் நினைவூட்ட, அப்பருவம் திருவாரூரில் தியாகேசர் வசந்தங் கொண்டருளுவதை நினைவூட்ட இத்துணையும் நினைந்தனர். |
| எதிர் கொண்டருளும் வகை - ஏற்றருளும் விழாச் சிறப்பு. இவ்வாறு உலகானுபவப் பொருள்கள் இறைவரது தொடர்பு பற்றி நினைவூட்டும் நிலை பெரியோர்களது செம்மை சேர் மனநிலை; இத்தன்மையில் உலகின்பப் பொருள்களை இறைவர் பற்றாகக் காணும் தன்மை பெறப் பழகுதலே சிவயோகத்தின் பண்பு; இப்பயிற்சி மிக்க நலம் தருவதொன்றாம். |
| 270 |
3425 | வெண்மதியின் கொழுந்தணிந்த வீதிவிடங் கப்பெருமாள் ஒண்ணுதலார் புடைபரந்த வோலக்க மதனிடையே பண்ணமரு மொழிப்பரவை யார்பாட லாடறனைக் கண்ணுறமுன் கண்டுகேட் டார்போலக் கருதினார். | |
| 271 |
| (இ-ள்.) வெண்மதியின்.....அதனிடையே - வெள்ளிய மதியின் கொழுந்தாகிய பிறைச்சந்திரனை அணிந்த வீதிவிடங்கப் பெருமானதுஅழகிய நெற்றியை உடைய பெண்கள் பக்கங்களிற் பரவிச் சூழ்ந்த திருவோலக்கத்தின்கண்; பண்அமரும்...ஆடல்தனை - பண்ணினீர்மை பொருந்திய மொழியினையுடைய பரவையம்மையாரது பாடலினையும் ஆடலினையும் முறையே; கண்ணுற....கருதினார் - நேரே கண்களிற் பொருந்தக் காணவும் கேட்கவும் பெற்றனர்போலவே கருதினர் (நம்பிகள்). |
| (வி-ரை.) வீதிவிடங்கப் பெருமாள் - தியாகேசர்; இப்பெயரின் பொருளும் வரலாறும் பற்றித் (130) திருவாரூர்த் திருநகரச் சிறப்புப் பார்க்க. |
| ஒண்ணுதலார் புடைபரந்த ஓலக்கம் - பெண்கள் பக்கங்களிலெல்லாம் பரவிச் சூழக் கொலு வீற்றிருக்கும் நிலை; "பத்தர்க ளோடு பாவையர் சூழ" (அரசு. ஆரூர். குறிஞ்சி); இப்பெண்கள் கும்பிட வந்தாரும் ஆடல்பாடல்களியற்றி உபசரிப்பாருமாம். ஓலக்கம் - கொலு வீற்றிருக்கும் நிலை. கொலுமண்டபமுமாம். |
| பண் அமரும் மொழி - பண்ணின் நீர்மை இயல்பாகவே அமைந்த மொழியினையுடைய; |
| பாடல் தனையும் ஆடல்தனையும் - என்று தனை என்பதை இரண்டிடத்தும் தனித்தனிக் கூட்டியும் எண்ணும்மை விரித்தும் உரைத்துக் கொள்க. |
| ஆடல் தனைக் கண்டு பாடல்தனைக் கேட்டார் - என்று எதிர் நிரனிறையாகக் கூட்டிக்கொள்க; ஆடலுடன் பாடல் ஒருசேர நிகழ்தலினால் தனை என ஒருமையாற் கூறியும், அதனை ஓரிடத்துக் கூட்டியும், ஒருவினை கொண்டு முடித்தும் வைத்தருளினார். இற்றைநாட் பேசும்படக் காட்சி அமைப்பினை நினைவுகூர்க. |