302திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  செறிவு - சேர்தல்;- (4) இங்ஙனம் - இவ்வுலகத்திடை; அங்ஙனம் - முன் அருளிய அவ்வாறு; எங்ஙனம் - எவ்வாறு தரித்து;- (5) அப்பெரிய - அகரம் உலகறிசுட்டு; அணைவு - சேர்தல்; பரிசு - வகை தன்மை;- (6) வன்நாகம் நாண்; வரைவில்; அங்கி கணை; அரி பகழி - நாகம் - வாசுகி என்னும் பாம்பு; நாண் - வில்லின் கயிறாக; வரைவில் - மேருமலையே வில்லாக; அங்கிகணை - அக்கினியே கணையின் கூர் - நுனி - முனையாக; அரிபகழி - விட்டுணு அம்பாக; தன் ஆகம் உறவாங்கி - தனது மார்பு பொருந்த வளைத்து; வாங்குதல் - வளைத்தல்; வில்வாங்கி என்பது மரபு. "குன்ற வார்சிலை நாண ராவெரி வாளி கூரரி காற்றின் மும்மதில், வென்றவா றெங்ஙனே" (பிள். தேவா - சீகாமரம் - ஆமாத்தூர் - 1) எரித்த தன்மையன் - தமது தன்மையா லெரித்த தன்றி, வில் முதலியவற்றானன்று என்பது குறிப்பு; முன்னாக - முற்பட; ஏனையவெல்லாம் பின்னாகவும் இதனையே முதன்மையாகவும்; என்னாக - என்ன பயன் கருதி;- (7) வன் சயமாய் - வலிய வெற்றி பொருந்த; அடியான் - மார்க்கண்டேயர்; சயம் - வெற்றி; உரம் மார்பு; முனித்து உகந்த - முன்னர் முனிவும் (சினம்), பின்னர் உவப்பும் கொண்டு; உவத்தல் கூற்றுவனை உயிர்தந்து ஆணையிட்டருளுதல்; அடைவு - சார்தல்; அடைதல்;- (8) அந்நெறி அகரம் -உயர்ந்தோர் செல்லும் அந்த என்ற உலகறிசுட்டு; செந்நெறியை செம்மைநெறி; சிவநெறி, நெறியாலடையப்படும் பொருளுக்கு வந்தது; என் அறிவான் - வேறெதனை அறியும்படி;- (9) கற்றுள வான்கனி - "கற்றதனலாயபய"னாகிய பொருள். "ஈசனெனும் கனி" (அரசு); கருத்தார உற்று உளன்ஆம் - உள்ள நிறைந்து ஒளித்திருந்த முதல்வனாகிய; இருவர் - அயன் மால்; எற்று உளனாய் - எதனை உடையேனாகி;- (10) ஏழ் இசையாய் இசைப்பயனாய் - இசையாயும் அதன் பயனாகவும் உள்ளவர். "இன்னிசை வீணையி லிசைந்தோன் காண்க, வன்ன தொன்றவ்வயினறிந்தோன் காண்க" (திருவா; அண்டப்பகுதி - 35 - 36) "அறிவானுந் தானே அறிவிப்பான் றானே, அறிவா யறிகின்றான் றானே" (அம்மை அற். அந். 20) என்றதும், அதனை எடுத்தாண்டு எமது மாதவச் சிவஞான முனிவர் போதம் 11-வது சூத்திர உரையில் விளக்குவதும் ஈண்டுவைத்துக் காண்க. என்னுடைய தோழனுமாய் - நம்பிகள் தம்பிரான் றோழராகிய வரலாறு; "தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்" (273); ஆய் - ஆக்கச்சொல் இறைவர் தம்மை ஆக்கிக் கொண்டருளிய நிலை குறித்தது; யான் செய்யும் துரிசுகளுக்குடனாகி - துரிசுகள் குற்றங்கள்; உடனாகி - உடனே நின்று; உடன்பட்டு என்றலுமாம்; எங்கும் நிறைந்தவராதலின் துரிசுகளிலும் உடனாகியே நிற்பர் என்பது; "மணவேள்விக் கோலத்துடன் மண்மேல் விளையாடுக" என்றதும், தாம் வேண்டிக் கொண்டவாறே மகிழ்க்கீழே எழுந்தருளியதும் முதலிய அருளிப்பாடுகளைக் குறித்தது. மாழை - மாவடு; பரவையைத் தந்தாண்டான் - என்றது பரவையார் திருமண வரலாற்றினையும், மேல் சங்கிலியோ டெனைப்புணர்த்த - என்றது சங்கிலியார் திருமணத்தின் வரலாற்றினையும் குறித்த சரித அகச்சான்றுகள்;- (11) நுங்கி - விழுங்கி; விரைவாக உண்டு; சழக்கனேன் - குற்றமுள்ளவன்; எங்குலக்க - முன் 3-ம் பாட்டுப் பார்க்க.- (12) பேர் ஊரும் மதகரி - பெரிதாக வரும் மதத்தினையுடைய யானை; திருவாரூர்ச் சிவனடியே திறம் விரும்பி - நேரில் காணாது மனத்தால் அந்தஅடிமைத் திறத்தினை மிக நினைந்து; இப்பதிகம் திருவாரூரைப் பற்றியதாயினும் அங்கு அருளப்படாது திருவொற்றியூரில் அதனை மிக நினைந்து; பாடப்பட்டதென்பதற்குரிய அகச்சான்று; குறிப்பு - இப்பதிகம் மிக மன உருக்கம் புலப்படும் அரிய கருத்தும் இசையமைதியும் கொண்டது; முற்றும் மனனங்கொள்ளத் தக்கது.