306திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  என்னின், மாறாதுதான்; ஆனால் அதன் வெளிப்பாட்டு நிலைமாறும் என்க; ஆண்டுதோறும் வரும் பெரும்பொழுது சிறுபொழுது என்ற காலக் கூறுபாட்டுக்கேற்ப உலகுயிர்களின் முயற்சி ஒழுக்கம் முதலியவை அவை தம்மாலன்றியே மாறுபடக் காண்டல் கண்டுகூடு; காலம் என்றதொரு தத்துவம் உண்டு; அதுவித்தியா தத்துவங்க ளேழனுள் ஒன்று; "காரியங்கள், காலமே தரவே காண்டுங்; காரணன் விதியி னுக்குக், காலமுங் கடவு ளேவ லாற்றுணைக் கார ணங்காண்" (1-10) என்ற சிவஞான சித்தியாரும் காண்க; சபதம் பொய்த்து மாறுபட்டவர்களின் சரிதங்களையும் முடிவுகளையும் நன்கு தெரிந்து சென்றால் இவ்வுண்மை விளங்கும்.
  சூளுறவு மறுத்ததனால் இவ்வினை வந்து எய்தியதாம் - இது காட்சி, கருதல், உரை என்ற மூன்றளவைகளானும் தொகுத்துக் கண்ட முடிபு.
  மைவிரவு கண்ணார் - சங்கிலியார்.
  எய்திய வித்துயர் நீங்க எம்பெருமானைப் பாடுவேன் - என்க; எய்திய - வினைக்கீடாக வந்து பொருந்திய; எனது செயலின் விளைவாக வந்த.
  இத்துயர் நீங்க எம்பெருமானைப் பாடுவேன் - தகாதவற்றைச் செய்து அதன் பயனாகத் துன்பம் வந்தபோது இறைவரைப் பாடினால் அது நீங்கி விடுமோ? இவ்வாறாகிய கொள்கைகள் அல்லவை செய்தொழுகுவார் மறைந்து கொள்ளவும் தீயவற்றைத் துணிந்து செய்யவும் இடந்தருகின்றன என்று அறைகூவுவோர் பலர் இந்நாளிற் காணப்படுகின்றனர்; தீச்செயல்களில் உயிர்களைப் புகுத்துவது அறியாமை மயமாகிய இருள் மலத்தின் செயலாம்; அது தீச்செயல் என்று தெளிந்து தீர்வுதேடுதல் இறைவன் அறிவிக்க அறியப்படும் அறிவின் செயல்; ஆதலின் அவ்வறிவின் உதவி கொண்டே தீர்வுதேடுதல் அறிவு பெற்ற நியமமாகும். விதிகடந்து அல்லவை செய்து பிணிகளைத் தேடிக் கொண்டானொருவன் மருத்துவனை நாடி அவன் றுணை கொண்டு நோயினின்றும் நீங்க முயலுதல் போல, ஈண்டு இறைவரைப் பாடுதல் தமது தவறிய செயலால் விளைந்த துன்பம் நீங்குதற்கு மருந்தாகுமென்பது உண்மை நூற்றுணிபு; நோயினையும் அது வந்த வரலாற்றினையும் உண்மைபெற மருத்துவனிடம் முறையிட்டபோது மருத்துவன் அதன்மூலம் வந்தவாற்றிற் கேற்றபடி மருந்தும் பாகமும் வகுத்துத் தீர்ப்பது போலக், கன்ம வைத்தியநாதராகிய இறைவரும் கன்ம விளைவாகிய நோயினை அனுபவித்துக் கழிப்பிக்க ஏற்ற காலம் முதலிய பாகங்களை வகுத்துத் தீர்ப்பர். அவரை எண்ணுதலும் துதித்தலும் அத்தீர்வுக்கு அவர் விதித்த பக்குவங்களும் மருந்துகளுமாகும். கன்மநோய் அனுபவித்தன்றிக் கழியா தென்பது உண்மை; மக்கள் தாங்கள் செய்த குற்றத்தை உணர்ந்து
 
  இதுபற்றி எனது அனுபவத்தில் கண்ட பலவற்றுள் சில உதாரணங்கள் இங்குச் சொல்லத் துணிகின்றேன். ஒன்று: ஒரு பெருஞ்செல்வர்; கிரிமினல் கோர்டில் சாட்சிப் பெட்டி ஏறிப் பொய்ச்சூள் உரைத்தார்; அது முடிந்து பெட்டியை விட்டுக் கீழிறங்கும் போதே கண் மறைந்துவிடப் பிறருதவி கொண்டு கையாலும் காலாலும் தடவி வழியறிந்து சென்றனர். கண் மறைந்தது மறைந்ததுதான். அவர் இறக்கும்வரை அவ்வாறே. இனி, மற்றொன்று: சிவில் கோர்டில் ஒரு பெருஞ் செல்வர் - சாட்சிப் பெட்டியேறிப் பொய்ச்சூள் உரைத்தனர்: அது வாறாக நோய் கிடந்து ஒரு மாதத்தில் இறந்துபட்டனர். இப்படி அனேகமுண்டு. ஆதலின் உலகீர்! சபதம் பொய்த்த விளைவு உடன் காணாதது கொண்டு இல்லை என்று முடித்துத் திரிந்து கேடு சூழ்ந்துகொள்ளாது முன்னோர் கண்ட உண்மை நெறிநின்று ஒழுகி உய்யுங்கள்.