[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்309

  நான் உலகநிலைத் திறத்திற் பிழை செய்யினும் உனது திருவடிக் கன்பின் றிறத்தில் ஒரு பிழையும் செய்யேன்; "ஒருவரை மதியா துறாமைகள் செய்து மூடியு முறைப்பனாய்த் திரிவேன்" "மிகைபல செய்தேன்" (திருமுல்லைவாயில்) என்ற செயல்கள் உலக நிலைபற்றிய பிழைகளாம்; இவை சிவாபராதங்களாகா; இவை ஏனை உயிர்களுக்கும் தமக்குமுள்ள உலக நிலைத் தொடர்பு பற்றி ஒழிவன. சிவாபராதங்கள் வேறு; அவை கழுவாயில்லாதவை; இவற்றையே ஈண்டுத் "திருவடிப்பிழையேன்" என்றருளினர் நம்பிகள். "வேறு செய்வினை திருவடிப் பிழைத்த லொழிய லிங்குளார் வேண்டின செயினும்" (1146) என்று இதனை முன்னர் வேறு பிரித்துக் காட்டியருளியமையும் காண்க. ஆண்டுரைத்தவையும் பார்க்க. (II பக். 1470). புண்ணியங்களாகிய நல்வினைகளும் இவ்வாறே. சரியையாதி பதிபுண்ணியங்கள் வேறு; கா வளர்த்தல், குளம் தொடுதல், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், மருத்துவச்சாலை வைத்தல், துணி அன்னம் முதலியவை கொடுத்தல் முதலாகிய பசுபுண்ணியங்கள் வேறாவன. பதிபுண்ணியங்கள் படிப்படியாகச் சிவனை நினைந்தவாறே சிவலோகம் பெறுவித்தல் முதலிய பயன்களைத் தந்து, முடிவில் திருவடி சார்தலாகிய வீடுபேறு பெறுவிக்கும்; பசுபுண்ணியங்களோ, அவ்வாறன்றிச் சுவர்க்காதி போகங்களைத் தந்து சிவனினைவின்றியே சென்று மீளப் பிறவிக் கேதுவாவன. இவையிரண்டன் வேற்றுமை அறியாத மாக்கள் பலர் இந்நாளில் இவையிரண்டும் ஒன்றென மயங்கியும், பதி புண்ணியங்களைத் தத்தம் மனம்போனவாறே பசுபுண்ணியங்களோ டொப்ப மதித்து அந்த அளவை கொண்டளந்து இழித்தும் கொடும் பாவத்துக்காளாகி மீளா நரகடைவதற்கே விரைந்து திரிகின்றனர்! அந்தோ! இவர்களதறியாமை இரங்கற்பாலது!; வழுக்கி...மறுமாற்றம் - இன்பத்துன்பங்களில் எதுவரினும் எஞ்ஞான்றும் சிவனாமத்தை மறவாது இடைவிடாது சொல்லுதல் ஒரு நல்ல வழக்கு. அது செய்து பழகுதல் மிக்க நன்மை தரும். "நான் மறக்கினும் சொல்லுநா நமச்சி வாயவே" என்பது நம்பிகள் திருவாக்கு (திருப்பாண்டிக் கொடுமுடி); இது எளிதில் வருவதன்று. தவப்பயனாக நீண்டநாட் பழக்கத்தால் அமைதல் வேண்டும். ஒழுக்குதல் - கண்ணுக்கு மருந்து இடுதல்; கண்நோய் மருந்துகள் பெரும்பான்மையும் நீர்த்தன்மையாய் (துளிகளாய்) ஒழுக்க விடுதல் குறிப்பு; உரையாய் - சொல்லி யருளுவீர்;- (2) கட்டனேன் - துன்பமுடையேன்; பெட்டன் - பொய்யன்; பெட்டனாகிலும் திருவடிப் பிழையேன் - முன்பாட்டில் "பிழைப்பனாகிலும்" என்ற கருத்து; ஒட்டினேன் - ஒட்டு - பிரிப்பின்றி ஒன்றுபடுதல்; அத்துவிதமாதல்; "உணரப் படுவாரோ டொட்டி வாழ்த்தி" "ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்" (தேவா); எட்டினால் - திகழும் திருமூர்த்தி - அட்டமூர்த்தம்;- (3) களைகண் - ஆதரவு பற்றுக்கோடு; அங்கை....அமுதே - அங்கையின் வைத்த நெல்லிக்கனி உள்ளீட்டின் வரந்தைகளை வெளியே அறிவித்து நிற்றல் போல, இறைவர் தமது அருளினைக் காண்பார்க்குப் புலப்படுத்தி நிற்கின்றார் என்பது; "அங்கையி னெல்லிக் கனியெனக்காயினன்" (திருவா); அமுது - இறைவர்; ஒங்கும் - ஓங்கும் என்பது ஒங்கும் என எதுகை நோக்கிக் குறுகி நின்றது; செய்யுள் விகாரம்; "ஒங்கு மாகட லோதநீராடிலென்" (அரசு);- (4) ஈன்று....அன்றால் - உலக நிலைத் தொடர்பாகிய சுற்றங்கள் இப்பிறவியில் தேடிக்கொள்ளப்பட்டவை யல்ல; யாவராகிலேன்....சொல்வாய் - யாவரேயாயினும் அன்புடையவர்கள் தம்மை உம்வசமாக ஒப்புவித்திட்டால் அவர்கள் பக்கல் அல்லாத வார்த்தைகளைச் சொல்லமாட்டீர்; இது இச்சரித நிகழ்ச்சிக் குறிப்புப் போலும்; மூன்று.....ஆகில் - தேவரீர் மூன்று கண்ணுடையீராயிருந்தும் அடியேனுக்கு உள்ள இரண்டு கண்களையும் ஒளியிழக்கச் செய்வதே