310 | திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்] |
| அருளாகில்; ஊன்று....அருளாய் - கண்ணிழப்பித்த நீர் அதற்கு ஈடாக வேறு பற்றுக்கோடாவது அருளுவீர்; ஊன்றுகோல் - இங்குப் பற்றுக்கோடு என்ற பொருளில் வந்தது; ஊன்றிச் செல்வதற்கு ஒரு சிறு கோலினையும் தாமாகத் தேடிக்கொள்ள இயலாது அதனையும் இறைவர்பாற் பெறவேண்டினர் நம்பிகள் என்பதன்று. "கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுக்கும்" என்ற பழமொழிக்கேற்ப வேண்டியவாறு. திருவுள்ளக் குறிப்பின் வழி வேறு பற்றுக்கோடு தாரும் என்பதாம்; நம்பிகளது வேண்டுகை மெய்த் திருவாக்காதலானும் அஃது இறைவரது திருவருள் வழியே நிகழ்வதாதலானும் இறைவர் ஊன்று கோலொன்றினையே அடுத்து அருளுதல் காண்க. (3433);- (5) வழித்தலை..முயல்கின்றேன் - சூளுறுரைத்தவாறு இனி நான் இங்குத் தங்காது மேற்செல்ல முயல்கின்றேன்; உன்னைப்போல் - நீர் இங்கு என்னைப் பாவித்தருளி நடைபெறுத்தியது போல்; சுழித்தலைப்பட்ட நீரது போல - பழமொழி; நீர்ச் சுழியில் உள்ள நீரானது நிலைபேறின்றிச் சுயலுமாபோல; வினைபற்றி வந்த உவமம்; சுழல்கின்றேன்...உள்ளம் - நான் மயங்கிச் சுழல என்மனமும் தடுமாறிச் சுழல்கின்றது; கழித்தலைப்பட்ட நாயது போல - நாயினை ஒரு கோலினிற் பிணித்து இழுத்தல் போல; இதுவும் வினைபற்றி யெழுந்த உவமம்; கையறு நிலைக்கேற்ப இப்பதிகத்தினுள் வரும் உவமை நயங்கள் காண்க; ஆசிரியர் நம்பிகளைத் "தமிழ்நாதன்" "தமிழ் நாவலர் பெருமான்" என்று பாராட்டும் கருத்துக்களைக் ஈண்டுக் கருதுக.- (6) மானை நோக்கியர்....வேண்டுவது - சரித நிகழ்ச்சி குறித்த அகச்சான்று; முன்னைக் கயிலை நிகழ்ச்சி வரலாற்றுக் குறிப்புமாம்; மானை - மான்கண்ணினை ஒத்த; உன் சீலமும் குணமும் சிந்தியாதே - யாவராயினும் வினைப்பயனை ஊட்டுவித்தே கழிப்பிக்கும் அருள்; உயிரொடு நரகத் தழுந்தாமை - கண்ணொளி யிழந்து வாழ்தல் நரக வாழ்வேயாம் என்றது. ஊனம் - குற்றம்;- (7) நெஞ்சினாரொடு வாழவும் - அவ்வாறு நான் மறவாமையேயன்றி மறந்த மனத்தவரோடு கூடி வாழவும் என்று உம்மை இறந்தது தழுவியது; பெற்றிருந்து....அறியேன் - முன்னமே உனதுஅருளைப்பெற்றிருந்தும் இங்குப் பெறாதொழிந்த பேதை; ஆனால் அவ்வாறு பெறாதொழிவதற்கும் கண்ணிழத்தற்கும் உரியதாக நான் செய்தபெரும் பிழை யின்னதென்பதனை அறியேன்; "சூளுறவு மறுத்ததனால் இவ்வினை வந்தெய்தியதா மென நினைந்து" (3429) என்றதனுடன் இது மாறுபடுகின்ற தெனின்; மாறுபடாது; திருவடிப்பிழையேன் என்று பதிகத்தினுள் அருளியவாற்றால் இது இத்தகைய துன்பம் வருவித்தற்குரிய தன்றென்பது நம்பிகளது துணிபாகிய திருவுள்ளமாதல் காண்க; அதுபற்றியன்றே அதனை நீக்கும்படி விண்ணப்பித்தவாறு மென்பதாம்; மேல் முற்று நீயெனை முனிந்திட வடியேன் கடவதென்? என்ற கருத்தும் காண்க; மறவேனேல்...அருளாய் - என்றது தீர்வுபெறும் வகை;- (8) கூடினாய்....புக்கால் - இதனை முன் (3386) விரித்தருளியது காண்க; சொல்லலும் - அதுபோல அடியேனுக்கும் சொல்லுதலும் என்க;- (9) மகத்தில்....சனி - மகநட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலம் மிகத் துன்பம் தரும் காலமென்பது சோதிட நூற்றுணிபு. எனக்குச் சனி ஆனாய் என்க. சனி - சனிபோல; வினைபற்றியெழுந்த உவமம்; அவ்வாறு துன்பம் சேர்தலும் வினைபற்றியேயாம். அகத்தில்....வாழ்வேன் - நம்பிகள் தமது அற்றை நிலையினை உலக இல்வாழ்க்கை நிலையினில் வைத்து மேல்வரும் அனுபவமாக எண்ணியது;- (10) ஓலம் - ஓலமிடும் ஒலியுடைய கடல் நீர்; சீலம்...வல்ல - நம்பிகளது தூய சிவநிலை ஒழுக்கம் குறித்தது. |
|
|
|
|