| குறிப்பு :- திருவொற்றியூரின் எல்லை கடந்தவுடன் கண்ணிழந்த நம்பிகள் அங்கு நின்றவாறே வழித்தலைப்பட்டு மேற் சென்றனர். திருமுல்லைவாயிலை அடைந்து "அடியேன் படுதுயர் களையாய்" என வேண்டிக்கொண்டு, அந்நிலையே திருவெண்பாக்கம் சென்று முறையிட்டபோது இறைவர் அவருக்கு ஊன்று கோலருளி, "நாம் இங்கு உளோம் நீர்போகீர்" என்றருளினர். அதன்மேல் ஊன்று கோலருளி, "நாம் இங்கு உளோம் நீர்போகீர்" என்றருளினர். அதன்மேல் நம்பிகள், திருவாலங்காடும் திருவூறலும் வணங்கித் திருக்கச்சி யேகம்பம் சென்று பணிந்தனர்; மறைந்த இடக்கண் பெற்றனர்; அங்கு நின்றும் போந்து திரு ஆமாத்தூர், திருநெல் வாயிலரத்துறை, திருவாவடுதுறை என்ற இவற்றைப் பணிந்து திருத்துருத்தியில் வணங்கித் தம் மேனியில் உற்ற புதிய பிணியினின்றும் நீங்கினர்; பின்னர்த் திருவாரூர் சேர்ந்து வணங்கி வலக்கண்ணையும் பெற்றருளினர். இப்போதருளிய இத்தலப்பதிகங்கள் யாவும் மனத்தை மிக உருக்கும் தன்மை வாய்ந்தன. சோகச்சுவையுட் கொண்ட தமிழ் வளமுடையனவாய்ச் சிறந்து விளங்குவன. சொல்லும் பொருளும் யாப்பும் சிறந்தன. சரிதத்திற்குச் சிறந்த அகச்சான்றாகவு முள்ளன. பெரும்பான்மை இவை தக்கேசிப் பண்ணில்அமைந்த நிலையும் காண்க. அரசுகள் பதிகங்களுட் டிருத்தாண்டகமும்; பிள்ளையார் பதிகங்களுள் மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் வருவனவும், நம்பிகள் பதிகங்களுள் தக்கேசிப் பதிகங்களும் எத்தகையோரையும் மனமுருக்கும் தன்மையிற் பெரிதும் சிறந்தன என்பதும் கருதுக. இவற்றை அன்பர்கள் ஊன்றிப் பயின்று பயன் பெறுவார்களாக. நம்பிகளது திருவுள்ளமே தமது திருவுள்ளமாக நின்றுஆசிரியர் பெருமான் இப்பகுதியினை அதன் நிலைக்கேற்ற விரைவும் தகுதியும்பட 38 பாட்டுக்களிற் கூறிச்சென்றருளும் (274-311) கவியமைதியும் கண்டு கொள்க. |
| 3431. (வி-ரை.) அங்கு....அருள் அதுவாக - நம்பிகள் விண்ணப்பித்தும் இறைவர் வாளா இருந்தனர்; அது - வாளா இருந்தமை; அதனையே அருள் என்றார். இறைவர் செய்வன யாவும் அவ்வந் நிலையில் காணும் அருளேயாவன என்பது; "எக்கிர மத்தி னாலு மிறைசெய லருளே யென்றும்" (சித்தி -2-15). |
| காதல் மீளா நிலைமையினால் - ஆரூர் தொழும் காதல் காரணமாகத் திருவொற்றியூரின் மீண்டணைய எண்ணாது, கண்ணிழந்தமையும் பொருட்படுத்தாது மேலே தொடர்ந்து செல்லும் நிலையினை மேற்கொண்டு; மூளாநிலை - அன்று அந்நிலையிற் றிரும்பாமையேயன்றி இனி, மேலும் மீண்டு வாராமையும் குறிப்பு; சரிதம் காண்க. |
| போதுவார் வழிகாட்ட - உடன் போதுவார்களாகிய பரிசனங்கள் கைப்பற்றி வழிகாட்டிச் செல்ல; இதனை "ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை" (பதிகம்) என்றிழிவு தோன்ற வருளினர் நம்பிகள். |
| நீடிய திருப்பதிகம் - நீடிய - நம்பிகளது சரித நிகழ்ச்சியினைப் பற்றி உள்ள நிலையினையும் அன்பின் உறைப்பினையும் உள்ளவாறு பளிங்கு போலப் புலப்படுக்கும் பெருமையினால் நீடிய. |
| "சங்கிலிக்காக என்கணை மறைத்தீர்" என்று சாற்றிய தன்மை - பதிகக் கருத்தும் குறிப்புமாம்; [பதிகம் (2)] பதிகத்தின் மகுடமாகிய பிரார்த்தனையை மேற்பாட்டிற் கூறுவார்; தன்மை - குறிப்பு. |
| 277 |
| 3432. (வி-ரை.) தொண்டைமானுக் கன்று அருள் கொடுத்தருளும் - இது தல சரிதம்; "சொல்லரும் புகழான்" (10) என்ற பதிகமும் தல விசேடமும் பார்க்க. |