| முல்லை - தன்னுள் இறைவரது திருமேனி மறையும்படி புதராகச் சூழ்ந்த முல்லைக்கொடி; கட்டிட்டு - கட்டும்படி - பிணிக்கும்படி - செய்து; பிணிப்பித்ததும், அது காரணமாகத் தாம் வெளிப்பட்டமையும் அருளிப்பாடு; எல்லையிலின்பம் - பேரானந்தப் பெருங்கடல்; வீடுபேறுமாம்; என்று - பரவும் - இறைவரை இவ்வருளிப்பாடு பற்றித் துதிக்கும்; நல்லவர் - தகுதியாலே நல்லவர்களே இவ்வாறு பரவுவர் என்பது; அருள் வெளிப்படக் கண்டும் அல்லவர் வினைவயத்தால் பரவமாட்டார் என்பது குறிப்பு; ஏறி - பெயர்; ஏறுபவர்; கலைப்பொருள் - எல்லாக்கலைகளும் முடிந்த முடிபாக நுதலும் பொருளாவார் - (11) நரை - திரை - மூப்பு - உடலின் புறத்து நலிவு நிலைகள்; நடலை - வஞ்சனை; அகத்தின் நலிவு; உள்குளிர்ந்து - மனமுவந்து; அரைசு - அரசாட்சி. |
| தலவிசேடம்:- வட திருமுல்லைவாயில் - தொண்டை நாட்டின் 22வது பதி; சோழ நாட்டில் சீகாழிக்கருகு கடற்கரையில் உள்ள காவிரி வடகரை 7வது பதியாகிய (தென்) திருமுல்லை வாயிலினின்று பிரித்தறியும்படி வடதிருமுல்லைவாயில் எனப்படும்; இங்கு முல்லைக் கொடியே தலமரமாதலின் முல்லை வாயில் எனப்பட்டது; முல்லையின் அடியில் அதுவாயிலாக இறைவர் வெளிப்பட்ட இடம் என்பது பொருள். சண்பக வனம் எனவும் பெயர் பெறுமென்பது "செண்பகச்சோலை சூழ்" (2) என்ற பதிகத்தாற் காண்க, இங்கு வேட்டையின் பொருட்டு யானையின் மேல் வந்த தொண்டைமான் என்ற அரசனது யானையினது காலில் முல்லைக் கொடி சுற்றியதனால் அது மேற்செல்லமாட்டாது தடைபடச் செய்தருளியபோது, அரசன் முல்லைக் கொடியை வாளினால் வீசியபோது, அது இறைவர் திருமேனியிற்பட்டு இறைவர் வெளிப்பட்டருள, அது கண்ட அரசன் கவன்றுவருந்த, அவனுக் கருள்கொடுத்தருளினார் என்பது தலவரலாறு. இது பதிகம் 10வது திருப்பாட்டிற் போற்றப்பட்டது; வாளினால் வீசியதாற் சிதைவுண்ட வடு இன்னும் சிவலிங்கத் திருமேனியிற் காண உள்ளது. முருகப்பொருமான் பூசித்த பதி. திருமால் வழிபட்ட வரலாற்றினை முன்னர், "அங்கண் முல்லையின் றெய்வமென் றருந்தமி ழுரைக்கும், செங்கண்மால் தொழும்" (1095) என்று ஆசிரியர் அருளினர்; சோழன், காமதேனு, வசிட்டர் முதலியோரும் வழிபட்டுப் பேறுபெற்ற குறிப்புக்களும் காணப்படுவன; சுவாமி சந்நிதானத்தில் மிகப் பெரிய இரண்டு எருக்குத் தூண்கள் உள்ளமை காணப்படும் சுவாமி - பாசுப தேசுவரர்; இப்பெயர் பாசுபதா என்று பதிகத்துட் போற்றப்பட்டது; அம்மை - கொடியிடை நாயகி; தலமரம் - முல்லை; தீர்த்தம் - பாலி; பதிகம் 1. |
| இது அம்பத்தூர்
(M.S.M.) நிலையத்தினின்றும் வடமேற்கே மட்சாலை வழி 1 ? நாழிகையளவில் அடையத் தக்கது. ஆவடி நிலையத்தினின்றும் வடகிழக்காய் மட்சாலை வழி 2 ? நாழிகை யளவில் அடையலாம். |
| குறிப்பு :- தொண்டைமானுக்கு அருளிப் படைத்துணையாக நந்திதேவரை இறைவர் அனுப்பியருளினர் என்றும், கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் நந்தி அந்த வரலாறு குறிப்பதென்றும் கூறுவர். சுவாமி தீண்டாத் திருமேனி. சந்தனக் காப்பிடுதல் வழிபாட்டு முறை. |
3433 | அணைந்த தொண்டர்க ளுடன்வல மாக வங்க ணாயகர் கோயில்முன் னெய்திக் குணங்க ளேத்தியே பரவியஞ் சலியாற் குவித்த கைதலை மேற்கொண்டு நின்று | |