[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்323

  ஊன்பொருந்த வந்து வளரும் எல்லா உயிர்களிடத்தும் கொண்ட நீங்காத கருணையினாலே ஆயின தருமங்களை எல்லாம் வளர்த்து அருளுகின்ற காமாட்சி யம்மையாரது திருக்கோயிலின் முன்பு; வானில்...வன்றொண்டர் - ஆகாயத்தில் உயர்ந்த திருவாயிலின் முன் றொண்டராகிய நம்பிகள் வணங்கினார்.
  (வி-ரை.) திருக்காமக் கோட்டம் - காமாட்சி அம்மையார் தவஞ் செய்து அறம் வளர்க்கும் வளைவுட்பட்ட இடம். "புண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப் பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்" (1148).
  ஊனில்...அறம்புரக்கும் அம்மை - காமாட்சியம்மையார்; இவ்வரலாறு முன்னர்த் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துட் கூறப்பட்டது காண்க.
  ஊனில் வளர் உயிர்க்கெல்லாம் - சிருட்டியில் வந்த பலபல திறப்பட்ட பக்குவமுடைய உயிர்களுக்கெல்லாம் - அவ்வவற்றின் தன்மைக் கேற்ப.
  அம்மை திருக்கோயிலின் முன் - வாயில் - வணங்கினார் - எல்லாவுயிர்களுக்கும் ஒப்பக் கருணைபுரிந்து அறம் வளர்க்கின்றாராதலின் அவரது திருவருளை முதலில் நாடி வணங்கி நம்பிகள் பெற்றனர் என்க. ஆளுடைய பிள்ளையாரும் இங்கு வணங்கியமை முன் உரைக்கப்பட்டது (2897); வாயில் - கண்ணொளி யிழந்த நிலையாதலின் வாயிலினின்றவாறே வணங்கினர் என்க.
  ஊனில்வளர்...அறம்புரக்கும் அம்மை - எண்ணிறந்த உயிர்த்தொகுதியுள் சிருட்டிக்குள்ளாக எடுக்கப்படும் உயிர்களைப் புவனபோகங்களைத் தந்து வளர்த்தல் அம்மையின் கருணைத் தொழில், ஆயின் அப்பனது தொழில், காத்தலுடன் அழித்தலும் மீள ஆக்கலும் முதலிய ஐந்தொழில்களுமாம் என்று உலகம் முழுதும்அளித்தழித்தாக்கும் என மேற்பாட்டிற் கூறும் கருத்தினை உன்னுக; மேல் முதல்வர் என்ற கருத்தும் காண்க. ஆயின் அத்தொழில்களுள்ளும் அவ்வத் தொழிலுக் கேற்பச் சிவ சத்தியும் விளங்குவதாம் என்க.
 

284

3439
தொழுதுவிழுந் தெழுந்தருளாற் றுதித்துப்போய்த் தொல்லுலகம்
முழுதுமளித் தழித்தாக்கு முதல்வர்திரு வேகம்பம்
பழுதிலடி யார்முன்பு புகப்புக்குப் பணிகின்றார்
"இழுதையேன் றிருமுன்பே யென்மொழிவே" னென்றிறைஞ்சி,
 

285

3440
"விண்ணாள்வா ரமுதுண்ண மிக்கபெரு விடமுண்ட
கண்ணாளா! கச்சியே கம்பனே! கடையானேன்
எண்ணாத பிழைபொறுத்திங் கியான்காண வெழிற்பவள
வண்ணா!கண் ணளித்தருளா!" யெனவீழ்ந்து வணங்கினார்.
 

286

  3439. (இ-ள்.) தொழுது...போய் - தொழுது நிலமுற விழுந்து - எழுந்து அருளினாலே துதிசெய்து மேற்சென்று; தொல்லுலகம்....புகப்புக்கு - பழமையாகிய உலகங்களை எல்லாம் காத்தும் அழித்தும் மீளப்படைத்தும் ஐந்தொழில் செய்யும் முதல்வருடைய திருவேகம்பத்தினுள்ளே குற்றமில்லாத அடியார்கள் முன்னேபுகத் தாம் அவர் பின்னே சென்று புகுந்து; பணிகின்றார் - வணங்குகின்றவராகி; இழுதையேன்....என்று இறைஞ்சி - பொய்யனாகிய நான் தேவரீரது திருமுன்பு நின்று என்ன சொல்வேன்! என்று வணங்கி,
 

285

  3440. (இ-ள்.) விண்ணாள்வார்...கண்ணாளா! - விண்ணுலகத்தை ஆளும் தேவர்கள் அமுதத்தை உண்ணும் பொருட்டுமிக்க பெரிய விடத்தினை உண்டருளிய