| கயல் மீன்போன்ற கண்களையுடைய மலைவல்லியாகிய உமையம்மையார் பணிந்த திருவடிகளை நினைந்து; பொங்கிய....ஆரூரருக்கு - மேன்மேல் மிக்குஎழும் அன்பினோடு முன் கூறியவாறு பரவித் துதித்த நம்பியாரூரருக்கு; மங்கை...கொடுத்தார் - உமை மங்கை தழுவக்குழைந்த திருமேனியினையுடைய திருவே கம்பர் மறைந்த இடது கண்பார்வையினைக் கொடுத்தருளினார். |
| (வி-ரை) பங்கயம்....பணிந்த சேவடி - அம்மையார் சிவபூசை செய்து பணிந்த திருவடிகள்; வரலாறு திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துள் உரைக்கப்பட்டது. |
| பங்கயம் என்றது நிறமும் வடிவும், தளிர் - என்றது மென்மையுங் குறித்தன. |
| மலைவல்லி பணிந்த - மலையரசன் மகளாராகிய நிலையில் பணிந்த என்றது குறிப்பு; பணிந்தமை - உலகுயிர்கள் கண்டு அவ்வாறு தாமும் ஒழுகி உய்யும் பொருட்டாம்; தாம் ஈன்ற உயிர்களை நல்வழி காட்டி உய்விக்கும் கருணை என்பது. |
| அன்பொடு பரவிப் போற்றிய - முன் பாட்டிற் கூறியபடி துதித்து; பரவுதல் - குணங்களை எடுத்துக் கூறுதல்; பரவிப் போற்றுதலாவது பரவும் வகையினால் துதித்தல்; இப்பதிகம் கிடைத்திலது! |
| மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த இடக்கண் கொடுத்தார் - குழைந்தாராதலின் எனக் காரணக் குறிப்புப்படக் கூறியபடி; இடப்பாகம் அம்மை கூறாகலின் அம்மையாரை முன் வணங்கி அருள்பெற்ற நிலையால் இடக்கண் கொடுத்தார் போலும்; "கண் அளித்து முலைச் சுவட்டுக் கோலந்தான் காட்டுதலும்"(3442) என்பது காண்க. "உமை நங்கை ஏத்திவழிபடப் பெற்ற" என்ற பதிகமும் பார்க்க. ஏனை வலக்கண் திருவாரூரிற் கொடுத்தருள நின்றமையும் காண்க. |
| குறிப்பு : - கண் மறைந்த இடம் திருவொற்றியூரும். இடக்கண் பெற்றது கச்சி ஏகம்பமும்; வலக்கண் பெற நின்றது திருவாரூருமாம். இவை மூன்றும் பிருதிவித் தலங்களாவன. "ஒடுங்கி(மலத்து) உளதாம்" என்றபடி யாது யாண்டு ஒடுங்கியது, அஃது ஆண்டுநின்றே மீள உளதாம் என்பது உண்மை; "முழுதும் அளித்து, அழித்து ஆக்கு முதல்வர்"(3439) என்ற குறிப்பும் காண்க. அன்றியும் மண் என்ற முதற்பூதத்தின் தன்மையே சிருட்டியாகிய தோற்றத்திற் குரியதாம் நிலையினையும் கருதுக. |
| 287 |
3442 | ஞாலந்தா னிடந்தவனு நளிர்விசும்பு கடந்தவனு மூலந்தா னறிவரியார் கண்ணளித்து முலைச்சுவட்டுக் கோலந்தான் காட்டுதலுங் குறுகிவிழுந் தெழுந்துகளித் "தாலந்தா லுகந்தவ"னென் றெடுத்தாடிப் பாடினார். | |
| 288 |
| (இ-ள்) ஞாலந்தான்....அறிவரியார் - நிலத்தைக் கீண்டு தேடிய திருமாலும் குளிர்ந்த ஆகாயத்தைக் கடந்த பிரமதேவனும் முறையே அடிமுடிகளின் முடிபினை அறிதற்கரிய இறைவர்; கண்அளித்து.....காட்டுதலும் - அம்மை தழுவ முலைச் சுவடணிந்த தமது கோலத்தை ஒரு கண் கொடுத்துக் காணும்படிக் காட்டுதலும்; குறுகி....பாடினார் - அணுகி நிலமுற விழுந்து எழுந்து மகிழ்ந்து "ஆலந்தானுகந்தவன்" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி ஆனந்தக் கூத்தாடினார். |
| (வி-ரை) ஞாலந்தானிடந்தவன் - விசும்பு கடந்தவன் - இடந்ததனாலும் கடந்ததனாலும் அறிவரியார் என்பார் அவ்வச் செயல்களை அவ்வவரோடும் உடம்பொடு புணர்த்தி ஓதினார்; முறையே அடிமுடிகளின் என்பது குறிப்பெச்சம். |