| "சடையான் மேவிய ஆரூரைப்....பன்னெடுஞ் சொன் மலர் கொண் டிட்டன பத்து"(10) என்ற திருக்கடைக் காப்பினில் விளங்குதலும் காண்க. |
| சந்த இசை பாடி - இசை - பண்; இசை அமைந்த பதிகம்; இசை - இப்பதிகப் பண்ணாகிய புறநீர்மை; இப்பண்ணுக் குரிய நேரம் விடியற் காலமாம்; எனவே நம்பிகள் காஞ்சிபுரத்தினின்றும் திருவாரூரை நோக்கி வைகறை யாமத்தில் புறப்பட்டு வழிக்கொண்டருளினர் என்பது கருதப்படும்; தமது எஞ்சிய இன்னலாகிய இருள் நீங்கும் காலம் என்ற குறிப்பும் தருவது. 1333-ம் பாட்டும் கருதுக. |
| தாங்கரிய ஆதரவு - உள்ளடக்கிப் பொறுத்தற்கரிய பேரன்பு - ஆசை. |
| அன்பருடன் - "தொண்டருடன்"(3443) என்றது காண்க. |
| வழிக் கொள்ளுதல் - பயணப்பட்டு மேற்செல்லுதல். |
| 291 |
| திருவாரூர் |
| திருச்சிற்றம்பலம் | பண் - புறநீர்மை |
| அந்தியு நண்பகலு மஞ்சு பதஞ்சொல்லி முந்தியெ ழும்பழைய வல்வினை மூடர்முன் சிந்தை பராமரியாத் தென்றிரு வாரூர்புக் கெந்தை பிரானாரை யென்றுகொ லெய்துவதே. | |
| (1) |
| நின்ற வினைக்கொடுமை நீங்க விருபொழுதுந் துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்து தென்றன் மணங்கமழுந் தென்றிரு வாரூர்புக் கென்றன் மனங்குளிர வென்றுகொ லெய்துவதே. | |
| (2) |
| முன்னை முதற்பிறவி மூதறி யாமையினாற் பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச் செந்நெல் வயற்கழனித் தென்றிரு வாரூர்புக் கென்னுயிர்க் கின்னமுதை யென்றுகொ லெய்துவதே. | |
| (3) |
| மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய வாரூரை நன்னெடுங் காதன்மையா னாவலர் கோனூரன் பன்னெடுஞ் சொன்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார் பொன்னுடை விண்ணுலக நண்ணுவர் புண்ணியரே. | |
| (10) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு : - "எந்தைபிரான் றிருவாரூர் என்றுகொ லெய்வது?" என்பதாம்; ஆசிரியர்(3445) காட்டியருளியவாறு; பதிகத் திருக்கடைக் காப்பும் பார்க்க; "மேவிய ஆரூரை - சொன்மலர் கொண்டிட்டன." |
| பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) அந்தி - காலை - மாலை நேரங்கள்; இரவும் பகலும் சந்திக்கும் நேரங்களாதலால் இவை சந்தி எனவும் படும்; நண்பகல் - நடுப்பகல்; இதுவும் சந்தி எனப்படும்; "முட்டாத முச்சந்தி" "சந்தி மூன்றிலும் தாபர நிறுத்திச் சகளி செய்திறைஞ் சகத்தியர்" என்பன காண்க; அஞ்சுபதம் - திருவைந்தெழுத்து; இதனுள் ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வோர் பதமாகப் பொருள் தருதலாற் பதம் என்றார்; "பதமஞ்சும்" (தேவா.); அந்தியும்....சொல்லி - சந்தி செய்து; "அந்தியுண் மந்திரம் அஞ்செழுத்துமே" (தேவா); முந்தி - மூடாமுன் - பழைய வினைப்பயத்தால் சிந்தை மறந்து இறப்பு வருதற்கு முன்; பழையவல் வினை - |