| (இ-ள்) அங்கணரை...வணங்கி - அங்கண்மையுடையவரைத் திருஆமாத்தூரில் எழுந்தருளிய அழகராகிய இறைவரைத் திருவடியில் வணங்கி; தங்கும்...போய் - தங்கும் இசையினையுடைய திருப்பதிகத்தினைப் பாடி மேற் சென்று; தாரணிக்கு...கடந்து - உலகுக் கெல்லாம் மங்கலமாக விளங்கும் பெருமையுடைய தொண்டைவள நாட்டினைக் கடந்து மேற்சென்று; செங்கண்....நீர்நாடு - கோச்செங்கட் சோழநாயனார் திருவவதரித்த, சிறப்புக்கள் நாடிவந்தடைகின்ற நீர்நாடு என்னும் சோழ நாட்டினை; அணைந்தார் - சென்றணைந்தருளினர். |
| (வி-ரை) அங்கணரை - பசுக்களுக்குத் தாயகமாய் விளங்குதல் குறிப்பு. ஆமாத்தூர் அழகர் - அழகர் - இத்தலத்துச் சுவாமிபெயர்; "அழகியரே யாமாத்தூரைய னாரே"(தாண்). தலச் சுவாமி பெயரும் அம்மைபெயருங் காண்க. |
| தங்கும் இசை - தங்குதல் - நிலைபெறுதல்; தங்கலோசையினை உடைய இசை என்ற குறிப்புமாம்; இங்குத் தங்கலோசையாவது பாட்டின் ஒவ்வோரடியிலும் முதற்சீர்கள் சொற்பொருட் பின்வருநிலையாய் இருமுறை அடுக்கி வருதலின் விரைந்து தொடர்ந்து பாட இயலாது ஓசை தங்கிச் செல்லுதல்; "காண்டனன் காண்டனன்" "பாடுவன் பாடுவன்"; "தேடுவன் றேடுவன்" என்பவை போல் எல்லாப் பாடல்களிலும் வருவனவும், அடிதோறும் இறுதிச் சீரில் ஓசை தங்குதலும் காண்க. இசை - பதிகப் பண்ணாகிய பண் - கொல்லிக் கௌவாணம் என்ற குறிப்புமாம்; சிவயோக நிலையில் இறைவர் திருவடிக் கூட்டத்திற் பிரியாது தங்கிய என்ற குறிப்பும் காண்க. |
| தாரணிக்கு மங்கலமாம் பெருந் தொண்டை வளநாடு - நிலமடந்தைக்கு மங்கலம் தரும் வளநாடு - தொண்டை நாடு என்பது; மங்கலமாவது ஒரு நாட்டினுக்கு இன்றியமையாது வேண்டப்படும் சீரும் சிறப்பும் தரும் இயல்பு; நாடுமுழுதும் சிவமயமாய் விளங்கும் சிறப்புப் பற்றித் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துள் உரைத்தவை பார்க்க; அம்மையார் தவஞ்செய்து வரம் பெற்ற தன்மையால் உலகுய்ய வைத்த அறங்கள் எல்லாம் வளர்க்கும் காமக் கோட்டத்தை உடையதா யிருத்தலும் குறிப்பு. தொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து என்றபடி சான்றோர்களை உடைமையாகிய தனிச் சிறப்பு முணர்த்தியபடி; "எவ்வழி நல்லவராடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே" (புறம்); "உலகினிற்கெல்லா மங்கலந்தரு மழவிளம் போதகம்"; (2046) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. |
| வளநாடு - அந்நாளில் தொண்டை நாடு சோழ நாட்டின் ஒரு பகுதியாகச் செயங்கொண்ட சோழ வளநாடு என்று பெயர் பெற்றிருந்தது. வளநாடு - பெருநாட்டின் உட்பிரிவு; சோழர்களின் ஆட்சி பரவிய காரணத்தால் இப்பெயர் பெற்றது. |
| மங்கலமாம் - ஆக்கச் சொல் உவமை குறித்ததெனக் கொண்டு மங்கல நாண் போல என்றுரைப்பர் இராமலிங்கத் தம்பிரானார். |
| செங்கண்....நீர்நாடு - சோழ நாட்டில் அவதரித்த பெரியோர் பலராயினும், அருளால் முன்னறிந்து பிறந்தமையாகிய பிறப்பின் சிறப்பும், சிவனுக்கு 78 மாடக்கோயில்கள் அமைத் தரசாண்ட சிவபுண்ணியச் சிறப்பும் பற்றிக் கோச்செங்கணாரின் பிறப்பினைப் பற்றி நாட்டுக்குச் சிறப்புக் கூறினார்; நீர்நாடு - காவிரி நாடு; சோழநாடு. பிறந்த - நீர்நாடு என்றது படை எடுப்பென்றதாலன்றிப் பிறப்புரிமையால் சோழர்க்குரியது என்பது குறிக்கப் பிறந்த என்றதாம். |
| 293 |