| தேடுதல்; - (7) உயிர்தங்கட்கு - எண்ணவன் என்றும், காண்டு மென்பாரவர் தங்கட்குக் கண்ணவன் என்றும் கூட்டுக; எண் - மதிப்பு - எண்ணம் - எண்ணத்திலுள்ளவன். பாகம் பெண்ணவன் என்க; அண்ணவன் - உயிர்கட்கு அணிமையானவர்; -(8) பொன்னை...போகவிடா - நம்பிகளது சரிதக் குறிப்பு; அன்னவன் - அத்தன்மையுடையோன்; என்னவன் - என்னை உடையோன்; தலைவன்; -(9) நாடுவன்...நால்விரல் - சிவராஜயோகம்; நாபிக்கு மேலேயோர் நால்விரல் - யோகத்தானங்களுள் ஒன்று; அநாகதத்தானம்; இருதயம்; அங்குள்ள உருத்திர மூர்த்தியை நாடுவேன் என்றும் கூறுவர். "மூலத் திருவிரல் மேலுக்கு முன்னின்ற, பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற, கோலித்த குண்டலி யுள்ளே செழுஞ்சுடர், ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழே" (திருமந். 3-32) முதலாக வரும் திருமூலர் திருவாக்குக்களும் கருதுக; மாடுவன் - செய்வேன். மாடுதல் - செய்தல்; சேரச் செய்தல். "ஏடுமலி கொன்றையா விந்துவிள வன்னி, மாடவல செஞ்சடையெம் மைந்தனிடம்" (திருநள்ளாறு, திருவிரா - இந்த - 1), "அஞ்செழுத் தாலுள்ள மரனுடைமை கண்டரனை யஞ்செழுத்தா லர்ச்சித் திதயத்தில் - அஞ்செழுத்தாற், குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில் அண்டனாஞ் சேடனாமங்கு" (போதம் - 9-3); சிவோகம்பாவனை செய்தல்; வன்கை....ஆடுவன் - பிராணாயாமஞ் செய்து சிவோகம்பாவனையில் அரனை உள்ளே கண்டு கொண்டானந்தித் திருத்தல்; நம்பிகள் சிவயோக நிலையினைப் பற்றி நின்று உலகுக்குதவ வந்தவர் என்னும் நிலைக்குறித்தது; மேல்வரும் பாட்டும் பார்க்க; -(10) உற்றவர் - உலகியற் பிறப்பினால் உறவாவார்; ஒழிந்து (வந்து) உற்றனன் என்க; தம்மை ஒழிந்து - உலகப்பற்று நீங்கி; உள்பொருள் - உள்ளும் பொருள் என்பர். உள்ளத்துள் பொருள் பற்றுதலாவது - உயிர்க்குயிராய் ஒளித்து விளங்கும் இறைவனை உள்ளே சிவயோகத்தாற் கண்டு பற்றிக் கொள்ளுதல்; "சிக்கெனப் பிடித்தேன்" (திருவா); "என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்"(தேவா); அற்றனன் - பிற பற்றெல்லாம் அற்றனன்; "அற்றவர்க்கற்ற சிவன் (தேவா); அடியார்கட் காட்பெற்றனன் - அடியார்க்களுக்காட் செய்யப் பெறுதல் சிவனடிப் பேற்றினும் பெரும் பேறு என்பது; பிறவாமைக்கே - இனிப் பிறவாமை பெறும் பொருட்டே; பெயர்த்தும் பெயர்த்தும் - பிறவி ஒன்றினாலொன்று மேன்மேல் தொடர்ந்து வருதல் குறிக்க அடுக்கிக் கூறினார்; -(11) மையன் - வஞ்சகன்; கள்வன்; "உயிர்தொறு மொளித்து நின்ற கள்வனை" (திருவிளை - புரா - மண்சு - பட); "எனதுள்ளங்கவர் கள்வன்" (தேவா); மையனை - மையல் - நை - மயக்கங் கெட்ட; மையம் - நடுவு நிலைமையுமாம். புலம்பல் - அன்பு மேலீட்டால் ஆனந்தக் கண்ணீர்வார வாய் குழறிப் போற்றுதல் - சிவப்பிரகாச தேசிகர் குறிப்புக்கள். மையணி - மை - மை போன்ற கரிய விடம்; ஆகுபெயர். |