| "அடியேன்...வேண்டும்" என - இது நம்பிகள் செய்த விண்ணப்பம்; உற்ற பிணி - புதிதின் வந்து பொருந்திய; "புதியபிணி" (3453); "உற்றநோய்" பதிகம் (5). |
| வணங்குவார் - வணங்குவாராகி - முற்றெச்சம். வணங்குவார் - பணிந்தவர்க்கு என மேற்பாட்டுடன் கூட்டி முடிக்க. |
| 297 |
| 3452. (வி-ரை) "விரவிய இப்பிணி...குளி" - இஃது இறைவர் நம்பிகளுக்கு அருளிய ஆணை; விரவிய இப்பிணி - இடையே வந்த புதிய பிணி. |
| வேறாக - இதற்கென்று தனியாக; வேறாகக் குளித்தலாவது நித்த நியமத்தின் பொருட்டும், ஆலய சேவையின் பொருட்டும், குளித்து வந்த நியமங்களின் வேறாகப் பிணி நீங்க என்றெண்ணிக் குளித்தலாம். |
| வடகுளம் - திருக்கோயிலினுள் இறைவரது திருமாளிகையின் வடபுறத்துத் திருமுற்றத்தில் உள்ளது; இதன் கரையில் நம்பிகளது ஆலயம் தனியாக உள்ளது; நம்பிகளின் திருவுருவம் ஒரு கண் பார்வையுடன் நின்ற திருக்கோலமாக எழுந்தருளியுள்ளநிலை மனத்தை உருக்கும் அற்புதத் திருக்கோலமாம்; கண்டு வழிபடத் தக்க பெருமை வாய்ந்தது; நோய் நீங்கத்தின் பொருட்டும், பிறவுமாக இன்றும் பல அன்பர்கள் இங்கு வழிபட்டு இக்குளத்தில் நியமமாக மூழ்கி வரம் பெறுகின்றார்கள்; வர...தீர்த்தம் என்ற குறிப்புமிது; வரமலர் - தாமரை; மலர் (279); தீர்த்தம் - தூய்மை; அதனைச் செய்யும் நீருக்கு வந்தது; ஆகுபெயர்; "ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடும் தீர்த்தன்" (திருவா). |
| கரவில் திருத்தொண்டர் - கரவாவது வஞ்சனை முதலிய மனக் குற்றங்கள்; "கரவாடும் வஞ்னெஞ்சர்க் கரியானை" (தேவா). |
| புறப்பட்டார் - இவ்வரம் பெற்ற இடமாகிய இறைவர் திருமுன்பினின்றும் வடகுளத்தினைச் சார்தற்கு எழுந்தருளினார். |
| குறிப்பு : - பிணி வருத்தம் ஒழித்தருள வேண்டும் என்று பரவிய பதிகம் கிடைத்திலது!இப்போது உள்ள "மின்னுமா மேகங்கள்" என்ற பதிகம் வட குளத்திற் குளித்து நோய் நீங்கி "அக்கணமே மணியொளி சேர் திருமேனி யாயின" (3453) பின் மகிழ்ந்து போற்றியது. |
| 298 |
3453 | மிக்கபுனற் றீர்த்தத்தின் முன்னணைந்து வேதமெலாந் தொக்கவடி வாயிருந்த துருத்தியார் தமைத்தொழுது புக்கதனின் முழுகுதலும் புதியபிணி யதுநீங்கி அக்கணமே மணியொளிசேர் திருமேனி யாயினார். | |
| 299 |
| (இ-ள்) மிக்க...அணைந்து - மிகுந்த நீரினையுடைய வடகுளமாகிய அத்தீர்த்தத்தின் முன் சென்று சார்ந்து; வேதமெலாம்....தொழுது - வேதங்கள் எல்லாம் கூடிய வடிவமேயாயிருந்த திருத்துருத்தி யிறைவரைத்தொழுது; புக்கதனில்...நீங்கி - அத்தீர்த்தத்தினுள்ளே புகுந்து முழுகினவுடன் புதிய பிணி நீங்கி; அக்கணமே...ஆயினார் - அந்தக் கணத்திலேயே மணியின் ஒளி பொருந்திய திருமேனியாக ஆயினார். |
| (வி-ரை) மிக்க புனல் தீர்த்தத்தின்முன் - மிக்க - இறைவரது அட்ட மூர்த்தங்களுள் ஒன்றாகி அகமும் புறமுந் தூய்மை செய்யும் அருட்டன்மை மிகப்பெற்ற என்ற குறிப்பு. தீர்த்தம் - தூய்மை என்பது அதனையுடைய நீருக்கு ஆகி, மேலும் அந்நீர் நிற்கும் குளத்துக்காகி வந்தது; இருமடியாகு பெயர்; விளக்கிருக்கும் இடத்தையும் விளக்கென்றாற் போல. |