352திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

3460
சீர்பெருகு திருத்தேவா சிரியனைமுன் சென்றிறைஞ்சிக்
கார்விரவு கோபுரத்தைக் கைதொழுதே யுட்புகுந்து
தார்பெருகு பூங்கோயி றனைவணங்கிச் சார்ந்தணைவார்
ஆர்வமிகு பெருங்காத லாலவனி மேல்வீழ்ந்தார்.
 

306

  3459. (இ-ள்) ஆதி...அணைய - ஆதியாகிய இறைவரது திருத்தொண்டர்கள் அங்கு எதிரே வந்தணையக் கண்டு; அவர் முகநோக்கி - அவர்களது முகத்தினை நோக்கி; கோதில்....வினவி - குற்றமற்ற இசையினோடு "குருகு பாய" என்று கோவை செய்து தொடங்கியே அயலார் போல வினாவி; ஏசறவால்....கலந்தணைவார் - வருத்தத்தினாலே திருப்பதிகத்தினைக் காதல் புலப்படுக்கும் கைக்கிளைத் திணையில் வைத்துப் பாடியவாறே அவர்களுடனே கலந்தணைவாராகி,
 

305

  3460. (இ-ள்) சீர்...இறைஞ்சி - சிறப்புப் பெருகுகின்ற திருத்தேவாசிரியன் என்னும் மண்டபத்தினை முன்னர்ச் சென்று வணங்கி; கார் விரவு....உட்புகுந்து - மேகந் தவழ்கின்ற திருக்கோபுரத்தினைக் கைகூப்பி வணங்கி உள்ளே புகுந்து; தார்பெருகு....அணைவார் - மாலைகள் மிக்கு விளங்குகின்ற பூங்கோயில் என்னும் திருமாளிகையினை வணங்கிச் சார்ந்து அணைவாராய்; ஆர்வமிகு...வீழ்ந்தார் - ஆசை பெருகுகின்ற பெரு விருப்பத்தினாலே நிலத்தின்மேல் வீழ்ந்தார்.
 

306

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
  3459. (வி-ரை) ஆதி - எல்லார்க்கும் முன்னவர்; "தேசமுமை யறிவதற்கு முன்னோ"(அரசு); நிமித்த காரணர் என்றலுமாம்.
  திரு அன்பர் எதிர் அணைய - நம்பிகள் திருக்கோயிலினை யணையும்போது அன்பர்கள் எதிரே வந்து எதிர்கொள்ளும் நிலையிற் சார.
  அவர் முக நோக்கி - பதிகத்தினுள் "உணர்த்த வல்லீர்களே" என்பன வாதியாக முன்னிலைப் படுத்தி வருவன எல்லாம் எதிர் வந்த அன்பரை நோக்கித் தமது வருத்தத்தினை உணர்த்திப் புள்ளினங்களின் மேல்வைத்து வினாவுவது போல் விண்ணப்பித்தபடி.
  கோத்து எடுத்தே - புள்ளினங்கள் பலவற்றின் செயல்களும் விரவும்படி அவற்றை விளிக்கும் வகையில் தொகுத்து.
  ஏதிலார் போல் வினவி - ஏதிலார் - அயலார்; முன் தொடர்ச்சியில்லாத அந்நியர்; "எந்தை யிருப்பது மாரூர் அவர் எம்மையு மாள்வரோ கேளீர்" என்று முதலில் திருவாரூருக்கு வந்தபோது அருளிய நிலையினும் நம்பிகள் தொண்டர்களை நோக்கி வினாவினார்; அந்நிலை வேறு. அதனுள் ஒற்றுமையில் ஒற்றுமை நயமும், இங்கு ஒற்றுமையில் வேற்றுமை நயமும் புலப்பட அருளிய தமிழ் நயம் காண்க.
  ஏசறவு - வருத்தம்; எண்ணி ஏக்கற்ற உரிய பொருள் பன்னாளும் கிடைக்கப் பெறாத கவலையுடன் கூடிய மனநிலை.
  காதல்புரி கைக்கிளை - விருப்பத்தின் மீக்கூர்தலினால் விளைந்த ஒருதலைக் காமத்தின் மனநிலை; கைக்கிளை - ஒருதலைக் காமம்; "ஒரு மருங்கு பற்றிய கேண்மை. இஃது ஏழாவதன் தொகை எனவே ஒருதலைக் காமமாயிற்று" என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொ - 1).
  கலந்து - எதிர் அணைந்த அன்பர்களுடன் கூடி; கலத்தல் - முன்னைக் கேண்மை நிகழ அளவளாவி ஒன்று கூடுதல்.
 

305